விண்வெளியில் உள்ள செயற்கை கோளை சுட்டு வீழ்த்தும் ‘மிஷன் சக்தி’ என்ற சாதனையை நேற்று இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நடத்திக் காட்டி உள்ளார்கள். இதை இந்திய பிரதமரான நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களிடம் இவ்வாறு கூறினார் "நம்மிடம் இன்று ஏராளமான செயற்கைக்கோள்கள் இருக்கின்றன. விவசாயம், பேரிடர் மேலாண்மை, தகவல்தொடர்பு, பருவநிலை, வழிகாட்டுதல், கல்வி, பாதுகாப்பு என பல துறைகளுக்காக செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டுள்ளன.
ஆனால், இன்றைய நாள், இந்தியா விண்வெளித்துறையில் வரலாற்று சாதனை படைத்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சித்துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனை நிகழ்த்தியுள்ளது. விண்வெளியில் செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் 'மிஷன் சக்தி' எனும் சோதனையை இந்தியா வெற்றிகரமாக 3 நிமிடங்களில் செய்து முடித்துள்ளது.
விண்வெளி ஆய்வுத்துறையில் வளர்ந்த நாடுகளுக்கு உரிய இடத்தில் இந்தியாவும் இன்று இடம் பெற்றது. ஏ-சாட் எனப்படும் செயற்கைக்கோளைப் பாதுகாக்கும் வகையில் பூமியில் இருந்து குறைந்த நீள்வட்ட பாதையில் அதாவது 300. கி.மீ தொலைவில் செயற்கைக் கோளைத் தாக்கி அழிக்கும் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. மிஷன் சக்தி என்று பெயரிடப்பட்ட இந்தச்சோதனை நடத்துவதும், வெற்றிகரமாக இலக்கை அடைவதும் கடினமானது. ஆனால், அதை இந்திய விண்வெளித்துறை 3 நிமிடங்களில் வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
இன்றுவரை விண்வெளியில் செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தும் சோதனையை அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே செய்துள்ளன. இந்தச் சோதனையை இந்தியா 4-வது நாடாக வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளது. ஏ-சாட் ஏவுகணை நம்முடைய இந்திய விண்வெளி திட்டத்துக்கு மிகப்பெரிய வலிமையைக் கொடுக்கும். நம்முடைய இந்த ஏவுகணை திட்டத்தை எந்த நாட்டுக்கு எதிராகவும் பயன்படுத்தமாட்டோம் என்று சர்வதேச சமூகத்துக்கு நான் உறுதியளிக்கிறேன்.
இந்தச் சோதனையும், ஏவுகணையும் முழுமையாக இந்திய செயற்கைக் கோளைப்பாதுகாக்கவும், இந்தியாவின் தற்காப்புக்காகவும் மட்டுமே. இந்தச் சோதனை எந்த விதமான சர்வதேச விதிமுறைகளையும் மீறி நடத்தப்படவில்லை'' என்று பிரதமர் மோடி இதை மக்களிடம் பேசியுள்ளார்.
தற்போது இந்தியாவில் பதினேழாவது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தல் நடைபெற்றால் ஏற்கனவே உள்ள அரசு காபந்து அரசு ஆக கோரக்கூடும். அதாவது ஏற்கனவே உள்ள அரசு எந்தவிதமான திட்டங்களையும் எந்தவிதமான உறுதிகளையும் அறிவிக்க இயலாது. தேர்தல் தேதி அறிவிப்பு கொடுக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் முடிவு வெளியிடப்பட்டு அதை தேர்தல் ஆணையம் வெளிப்படையாக அறிவித்து எந்தக் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது என்பதை அறிவிப்பார்கள். அதன் பிறகு அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்தி தங்களது நாடாளுமன்ற தலைவராக இவரை தேர்ந்தெடுத்துள்ளோம் என முறைப்படி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் கொடுப்பார்கள். இது ஒரு ஜனநாயக நாட்டின் நடைமுறை இதற்கு முன்பு பல நாடாளுமன்ற தேர்தல்களில் ஒரு கட்சி அல்லது கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து நாங்கள் இவரை நாடாளுமன்ற தலைவராக தேர்ந்தெடுத்துள்ளோம் ஆகவே இவரை பிரதமராக அழைக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்தின் மூலமாக கோரிக்கை வைப்பார்கள். அது நாடாளுமன்ற சபாநாயகர் மூலமாக ஏற்கப்பட்டு இந்திய ஜனாதிபதி அவரை பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துவைப்பார். இதுதான் இந்திய ஜனநாயகத்தின் வழிமுறையாக உள்ளது.
ஆனால் பாஜக ஆட்சியை சென்ற முறை தொடங்கியபோதும் அதற்கு முன்பு தேர்தலை பாஜக சந்தித்த போதும் இந்திய நாட்டின் பிரதமர் வேட்பாளர் என்று ஜனநாயகத்தின் அல்லது சட்டத்தின்படி இல்லாத ஒன்றை சொல்லி மக்களிடம் இந்த கருத்தை திணித்து மோடிதான் பிரதமர் என்று வாக்குறுதியை கொடுத்து மக்களிடம் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்தது பாஜக.
தற்போது மீண்டும் பாஜக, இந்திய நாட்டின் பிரதமராக மீண்டும் மோடி தான் வருவார் என்றும் மோடிதான் பிரதமர் என்று கூறி நாட்டு மக்களிடம் வாக்குகளை கேட்டு வருகிறது. இந்த நிலையில் இது இந்தியாவின் ஜனநாயகத்தில் இல்லாத ஒரு நிலை என்றாலும் அரசியல் ரீதியாக இந்த கருத்தை மற்ற கட்சிகள் மக்களிடம் கொண்டு சென்றாலும் மக்களிடம் இந்த கருத்து பரவவில்லை. இதன் காரணம் இந்திய அரசியலமைப்பு சட்டப்படி ஒரு நாட்டின் பிரதமர் என்பவர் முறைப்படி தேர்தலில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவோடு அறிவிக்கப்படுவர் தான் பிரதமராக வர முடியும். ஆனால், இந்த நிலையை பாஜக மாற்றும் விதத்தில் ஒரு சர்வாதிகார போக்கில் தொடர்ந்து நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சி தான் பிரதமர் வேட்பாளர் என்ற பிரச்சாரம் ஜனநாயகத்தில் அதிலும் குறிப்பாக இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி ஒரு பிரதமர் வேட்பாளர் என்று எங்கும் சட்டரீதியாக இல்லை. ஆனால், மக்களிடம் தவறான பிரச்சாரத்தை கொண்டு சென்று பாஜக தொடர்ந்து அந்த கருத்தை திணித்து வருகிறது.
இதற்கெல்லாம் தொடர்ச்சியாகத்தான் இன்று நடந்த மிஷன் சக்தி என்ற அந்த செயற்கைக்கோள் விவகாரம். ஏற்கனவே சில நாடுகள் விண்வெளியில் உள்ள செயற்கைக்கோளை துல்லியமாக தாக்கி அழிக்கும் செயல்களை செய்துள்ளது இதில் ரஷ்யா, சீனா, ஜப்பான் உட்பட இந்தியா நான்காவது நாடாக சேர்ந்துள்ளது. இன்று நடந்த மிஷன் சக்தி என்ற இந்த ஆப்ரேஷன் இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்டது. ஆனால், பிரதமர் மோடி அதை தனது சாதனையாக நாட்டு மக்களிடம் அறிவித்துள்ளார். பிரதமர் மோடி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அவர் ஒரு காபந்து பிரைம் மினிஸ்டர், அவர் எந்த ஒரு திட்டத்தையும் அறிவிக்கவோ அல்லது எந்த ஒரு அரசு சார்பான வேலைகளை கூறுவதோ சட்டப்படி தவறு.
இந்த விதிமுறைகள் எல்லாம் தெரிந்தும்கூட இன்று நாட்டு மக்களிடம் மிஷன் சக்தி நமக்கு மிகப்பெரிய சாதனை என கூறியிருப்பது அதிலும் அவரே நேரடியாக பேசி இருப்பது முழுக்க முழுக்க இது தேர்தல் விதிமுறை மீறல் என்பது வெளிப்படையான ஒன்று. இந்த செய்தியை காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மேலும் பல்வேறு மாநிலங்களில் உள்ள மாநிலக் கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது .
இருப்பினும் பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு சமூகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிற ஜனநாயகவாதிகளிடம் மிகப் பெரிய ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமூகவியல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள். அது என்ன அச்சமென்றால், இந்தியா ஒரு ஜனநாயக நாடு இந்தியாவில் தேர்தல் முறையில் தான் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு ஏற்கனவே தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் தானாகவே அவர்கள் தலைமை பொறுப்பில் இல்லாத ஒரு நிலை ஏற்படுகிறது, அவர்கள் எந்த ஒரு அரசு சார்பான விஷயத்தையும் பேசக்கூடாது என்பது வெளிப்படையான சட்டரீதியாக ஒன்று. ஆனால் இன்று மோடி பேசி இருப்பது முழுக்க முழுக்க சட்டத்திற்கு புறம்பானது. இதைத் தெரிந்தும் மோடி பேசி இருக்கிறார் என்றால் மோடி ஒரு சர்வாதிகார தனமாக தனது செயல்களை கொண்டு சென்றுள்ளார். இதற்கு உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால், வட கொரியாவில் சமீபத்தில் தேர்தல் நடந்தது, வட கொரிய அதிபர் தேர்தலை நடத்தினார். அங்கு எதிர்க்கட்சிகளே கிடையாது. ஆனால், தேர்தல் நடைபெற்றது. மக்கள் ஓட்டு போட்டார்கள். வட கொரிய அதிபர் அவரது சர்வாதிகாரப் போக்கில் அங்கு ஜனநாயகம் உள்ளது என்று உலகத்திற்கு தெரிவிக்கும் விதமாக அந்த தேர்தலை நடத்தினார். அந்த மனப்பான்மைதான் மோடியிடம் உள்ளது. அப்படித்தான் மோடி இப்போது இந்திய நாட்டின் தேர்தலை நடத்துகிறார் என்ற அச்சம் மக்கள் மத்தியில் பெருமளவு ஏற்பட்டுள்ளது. இது தேசத்திற்கு நல்லதல்ல ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்று இந்திய அளவில் மிகப் பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது.