கரோனா ஊரடங்கால் நீண்ட கால முடக்கத்திற்குப் பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால், முதல் நாளிலேயே சேலம் மாவட்டம் முழுவதும் 8 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்றுத் தீர்ந்துள்ளன. வழக்கமான விற்பனையைக் காட்டிலும் 3 கோடி ரூபாய் வரை அதிகம். மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 150 கோடி ரூபாய்க்கு மேல் மது விற்பனை நடந்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் 24- ஆம் தேதி மாலை முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வரும் 17- ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. கரோனா தொற்றின் வேகம் இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், மேலும் பொதுமுடக்கத்தை நீட்டிப்பதால் பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக முடங்கி விடும் எனக்கருதிய தமிழக அரசு, மே 4- ஆம் தேதி முதல் சில தளர்வுகளை அறிவித்துள்ளது.
இதன் ஒருபகுதியாக, மே 7- ஆம் தேதி முதல் டாஸ்மாக் மதுபானக்கடைகள் திறக்கப்படும் என்றும் அறிவித்தது. அதேநேரம், நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என்றும், காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இயங்கலாம் என்றும் அனுமதி அளித்தது. ஊரடங்கால் மூடப்பட்ட மதுக்கடைகள் 43 நாள் இடைவெளிக்குப் பிறகு வியாழனன்று (மே 7- ஆம் தேதி) திறக்கப்பட்டன.
சேலம் மாவட்டத்தில் மொத்தம் 216 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தாரமங்கலம், ஓமலூர், இடைப்பாடி, தம்மம்பட்டி, கெங்கவல்லி உள்ளிட்ட நோய்க்கட்டுப்பாடு பகுதிகளில் மட்டும் 48 கடைகள் உள்ளன. அந்தக் கடைகளைத் திறக்கக் கூடாது என்று அறிவிக்கப்பட்டதால், எஞ்சியுள்ள 168 மதுபானக் கடைகளும் திறக்கப்பட்டன.
மதுபானங்கள் வாங்க வருவோர் கண்டிப்பாக ஒருவருக்கொருவர் 6 அடி தூரம் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும்; ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும்; ஒருவருக்கு ஒரே நேரத்தில் பிராந்தி, விஸ்கி வகையிலான மதுபானங்கள் அல்லது பீர் வகை மதுபானங்கள் இவற்றில் ஏதாவது ஒரு ரகம் மட்டும் வழங்கப்படும்; ஒரு ஃபுல் அல்லது நான்கு குவார்ட்டர் அல்லது நான்கு பீர் அல்லது இரண்டு ஆஃப் பாட்டில்கள் மட்டுமே பெற முடியும்; கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றெல்லாம் அரசும், நீதிமன்றமும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தன.
ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் எந்தளவு மதுபானங்கள் இருப்பில் இருந்தனவோ அதே அளவுக்கான சரக்குகள் மே 6- ஆம் தேதி இரவுக்குள் மாவட்ட கிடங்கில் இருந்து டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கிட்டத்தட்ட ஒன்றரை மாதமாக மது கிடைக்காமல் திண்டாடிய மதுப் பிரியர்களுக்கு அரசின் இந்த அறிவிப்பு பெரும் உற்சாகத்தை அளித்தது. கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முன்கூட்டியே டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது. மேலும், ஒவ்வொரு கடையின் முன்பும், ஒருவர் பின் ஒருவராகச் செல்லும் வகையில் தடுப்புக்கட்டைகள் வைத்து தடுக்கப்பட்டிருந்தது. 6 அடி இடைவெளியில் நிற்பதற்கு வசதியாக அடையாள வட்டங்கள் வரையப்பட்டிருந்தன. அசம்பாவிதங்களைத் தடுக்க, ஒவ்வொரு கடையின் முன்பும் பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.
சேலத்தை அடுத்த குள்ளம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வாங்க சேலம் மாநகரில் இருந்து பலர் படையெடுத்ததால் கூட்டம் நிரம்பி வழிந்தது. கொளுத்தும் வெயிலென்றும் பாராமல், கால் கடுக்க ஒரு கி.மீ. தூரத்திற்கு வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர். எந்த ஒரு தந்தையும் தன் பிள்ளையின் பள்ளிக்கூட அட்மிஷனுக்காகக் கூட அவ்வளவு நீளமான வரிசையில் நின்றிருக்க மாட்டார்கள் என்று சொல்லும் அளவுக்கு நீளமான வரிசையில் காத்திருந்தனர்.
சேலம் மாநகரில் டவுன் ரயில் நிலையம் அருகில் உள்ள எலைட் ரக மதுக்கடையில் இருந்து முள்ளுவாடி கேட் வரை 300 மீட்டர் வரை மதுப் பிரியர்கள் வரிசையில் நின்றனர். லோ ரேஞ்ச் வகை மதுபானங்கள் குவாட்டருக்கு 10 ரூபாயும், ஹை ரேஞ்ச் வகை மது, குவாட்டருக்கு 20 ரூபாயும் திடீரென்று உயர்த்தப்பட்டது. என்றாலும், நேரம் செல்லச்செல்ல பல கடைகளில் 230 ரூபாய்க்குக் கீழ் மதுபானங்கள் இல்லை என்ற நிலையும் ஏற்பட்டது. என்றாலும், விலையையும் பொருட்படுத்தாமல் உற்சாகமாக மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.
கரோனா ஊரடங்கால் வேலை இழந்து, வருவாய் இழந்து மக்கள் தவிக்கின்றனர் என்ற அங்கலாய்ப்பும், சலசலப்பும் எதிர்க்கட்சிகள், மக்களிடம் இருந்து கிளம்பினாலும் கூட, மதுப் பிரியர்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் தாராளமாக 500 ரூபாய், 2,000 ரூபாய் தாள்கள் கட்டுப்பாடின்றி புழங்கின. கங்காரு, எப்படி வயிற்றுப் பையில் குட்டியைச் சுமந்து செல்லுமோ அதுபோல் மதுப் பிரியர்கள் பலர் நான்கு புட்டிகளை நெஞ்சோடு அணைத்தபடி சென்றனர். முதல் பிரசவத்தில் சுகமாகக் குழந்தை பெற்றெடுத்த தாயைக் காட்டிலும், கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதத்தை நொறுக்கியபோது டெண்டுல்கர் அடைந்ததைக் காட்டிலும் மதுபானங்களை வாங்கியதில் எதையோ பெரிதாகச் சாதித்து விட்ட மகிழ்ச்சியில் இளைஞர்கள் வீதியில் வீறு நடை போட்டனர்.
இதற்கு முன்னர் தெருவில் தலைகாட்டினாலே லட்டிகளைச் சுழற்றிய காவல்துறையினர், மதுப் பிரியர்களிடம் கனிவுடன் நடந்து கொண்டதையும் காண முடிந்தது. எந்த ஒரு கடையிலும் மதுப் பிரியர்கள் விரும்பிய சரக்குகள் கிடைக்கவில்லை. கடைசியில் இருப்பதை வாங்கிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். பீர் மற்றும் ஐ.எம்.எப்.எல். ரக மதுபானங்கள் அனைத்தும் பெரும்பாலும் மாலை 2 மணிக்குள்ளாகவே விற்றுத் தீர்ந்தன. ஐ.எப்.எல். எனப்படும் இறக்குமதி சரக்குகள் மட்டும் அதிக விலை காரணமாகக் கடைகளில் தேங்கி இருந்தன.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதாலோ என்னவோ முதல் நாளிலேயே சேலம் மாவட்டம் முழுவதும் சுமார் 8 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்றுத்தீர்ந்தன. சாதாரண நாள்களில் 5 கோடி ரூபாய் வரை மது விற்பனை இருக்கும். இத்தனைக்கும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள 48 கடைகளையும் திறந்து இருந்தால் மது விற்பனை 10 கோடி ரூபாயைத் தாண்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கிறார்கள் டாஸ்மாக் தரப்பில்.
இதுகுறித்து சேலம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வேடியப்பனிடம் வியாழனன்று இரவு 9.15 மணியளவில் பேசினோம். அப்போது வரை விற்பனை புள்ளி விவரம் முழுமையாக வந்து சேரவில்லை என்றவர், ''எப்படியும் 5 கோடி ரூபாய் வரை மதுபானங்கள் விற்பனை ஆகியிருக்கும். அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் இன்னும் 15 நாள்களுக்குத் தேவையான மதுபானங்கள் கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. அடுத்தடுத்த நாள்களில் கடைகளுக்குத் தேவையான அளவுக்கு அனுப்பி வைக்கப்படும்,'' என்றார்.
அதேநேரம், தமிழ்நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 150 கோடி ரூபாய்க்கு மேல் மது விற்பனை நடந்துள்ளதாகச் சொல்கிறார்கள் அதிகாரிகள். மதுக்கூடங்கள் திறக்கத் தடை விதிக்கப்பட்டதால், பலரும் பொது இடங்களிலேயே குடித்துவிட்டு மட்டையாகிக் கிடந்தனர். நேரம் செல்லச்செல்ல கடைகளின் கவுண்டர் பகுதியில் கூட்டம் முண்டியடித்ததால் நீதிமன்ற உத்தரவுப்படி ஆதார் அட்டையைக் கேட்காமலேயே மதுபானங்களை விற்றுத்தள்ளினர். வரிசையில் நிற்கும்போது பின்பற்றப்பட்ட சமூக விலகல் விதியை, கவுண்டர் அருகே யாருமே பின்பற்றவில்லை. அங்கே ஒரே நேரத்தில் பலரும் நெருக்கியடித்துக் கொண்டு நின்றனர்.
சாதாரண நாள்களிலேயே மதுபாட்டிலுக்கு எம்ஆர்பி விலையைக் காட்டிலும் கூடுதலாக 10 ரூபாய் வரை விலை வைத்து ஊழியர்கள் விற்பனை செய்வர். தற்போது கரோனா காலம் என்பதால், எப்போது வேண்டுமானாலும் கடைகள் மீண்டும் மூடப்படும் சூழல் உள்ளதால் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட டாஸ்மாக் ஊழியர்கள் ஃபுல் பாட்டிலுக்கு 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.
டாஸ்மாக் திறப்பால் நோய்த்தொற்று அபாயம் அதிகமிருப்பதாக மருத்துவர்களின் புலம்பல் ஒருபுறம் இருக்க இந்த முடிவால் மதுப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி, அரசுக்கு வருவாய், டாஸ்மாக் ஊழியர்களுக்குக் குறுக்கு வழியில் பெரும் வருமானம் என முத்தரப்பும் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். டாஸ்மாக் வேண்டாம் என என்னதான் நா வறல கூப்பாடு போட்டாலும் கேளாத அரசிடம் சிக்கிக் கொண்டு அடுத்த வேளை சோற்றுக்கே வழியில்லாத விளிம்பு நிலை மக்களும், கரோனா நோயாளிகளுடன் போராடும் மருத்துவர்களும் விழி பிதுங்கிக் கிடக்கிறார்கள்.