2018ம் ஆண்டு அரசியல் வட்டாரத்தை பொறுத்தவரை முக்கியமான ஒரு வருடம். ஏனென்றால் இந்த வருடத்தில் தமிழ்நாட்டில் மட்டும் ஏறக்குறைய 10 கட்சிகள் தொடங்கப்பட்டுவிட்டன, புதுப்பிக்கப்பட்டுவிட்டன. 2018ம் ஆண்டில் தொடங்கப்பட்ட கட்சிகளின் வரிசைகள் இதோ...
2018ம் ஆண்டில் முதல் அரசியல் கணக்கை தொடங்கிவைத்தது, கமல்ஹாசன்தான். ட்விட்டரிலும், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவ்வப்போது அரசியல் கருத்துகளை தெரிவித்துவந்த கமல் பிப்ரவரி 21ம் தேதி மதுரை மாநாட்டில் அரசியல் கட்சியின் பெயரையும், கட்சிக்கொடியையும் அறிமுகப்படுத்தி அரசியல் களத்தில் குதித்தார்.
சினிமாவில் தொடர்ந்து புதுமையைப் புகுத்திக்கொண்டே இருந்த கமல் அரசியலிலும் புதுமையை புகுத்தினார். அதுவரை இடது அல்லது வலது என்ற சித்தாந்தங்கள் மட்டுமே இந்தியாவில் இருந்துவந்தன, அப்போதுதான் மய்யம் என்ற ஒன்றை அவர் அறிமுகப்படுத்தினார். கட்சியின் பெயரையும் மக்கள் நீதி மய்யம் என்றே வைத்தார். கட்சியின் கொடியில் ஆறு கைகள் இணைந்திருக்கும் நடுவில் ஒரு நட்சத்திரம். சிவப்பு, வெள்ளை, கறுப்பு ஆகிய நிறங்கள் இருக்கும். ‘சிவப்பு நிறம் உழைப்பையும், வெண்மை நிறம் நேர்மையையும், கறுப்பு நிறம் திராவிடத்தையும் குறிக்கும். எட்டு முனை நட்சத்திரம் தென்னாட்டு மக்களைக் குறிக்கும் என்றும், மக்கள் நலனே கட்சியின் கொள்கை என்றும் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற வெப்சைட், ‘மய்யம் விசில்’ என்ற ஆப் ஆகியவற்றை தொடங்கினார். மய்யம்விசில் ஆப் இந்திய அளவில் 2 விருதுகளை வென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சசிகலா உறவினர்களில் முக்கியமானவர், தொடக்கத்திலிருந்தே ஜெயலலிதாவுடன் இருந்தவர், 1999-2004 வரை மக்களவை உறுப்பினர். பின் 2004 முதல் 2010 வரை மாநிலங்களவை உறுப்பினர். 2011ல் அந்நிய செலாவணி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். ஜெயலலிதாவால் 2011ம் ஆண்டு கட்சியில் இருந்து விலக்கப்பட்டவர், ஜெயலலிதா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இருந்தபோது சசிகலாவால் அதிமுக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டவர் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் அரசியல் வாழ்வில் அவருக்கு அவ்வளவு அனுபவம் இருக்கிறது. கட்சியின் துணை பொதுச்செயலாளராக அவர் இருந்தபோது, அதிமுக சின்னத்தையும், கட்சி பெயரையும் மீட்பதற்கு லஞ்சம் அளித்ததாகக்கூறப்பட்டது. அதன்பின் அவர் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். அதிமுக ஓ.பி.எஸ். அணி, ஈ.பி.எஸ். அணி, தினகரன் அணி என பிரிந்தது. அதன்பின் ஓ.பி.எஸ். அணியும், ஈ.பி.எஸ். அணியும் இணைந்தது. ஜெயலலிதா இறந்தபின் நடந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தினகரன் சுயேட்சையாக நின்று வென்றார். தினகரனுக்கு ஆதரவான எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்....
இத்தனைக்கும் பிறகு 2018 மார்ச் 15, மதுரை மாநாட்டில் தொடங்கப்பட்டதுதான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். கறுப்பு, வெள்ளை, சிவப்பு நடுவில் ஜெயலலிதா படம் இதுதான் கட்சிக்கொடி. அதிமுகவையும், சின்னத்தையும் மீட்பதே எங்கள் இலட்சியம் எனக்கூறிய அவர். அதுவரை இந்தப்பெயரில் செயல்படுவோம். இது தனிக்கட்சி இல்லை, புது அமைப்பு என்றும் கூறினார். இன்றுவரை அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறார்.
ஏப்ரல் மாதம் கடைசியில் அங்கங்கு எழுந்த திடீர் போஸ்டர்களால் அரசியல் வட்டாரத்தில் இருந்தவர்கள் இது என்னடா புதுக்கதையா இருக்கு என அதிர்ந்தனர். அதுதான் நித்தியானந்தா தொடங்கியதாகக் கூறப்பட்ட நித்தியானந்தா சேனை. இதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வராத நிலையில் தேசியமும், தெய்வீகமும் இரு கண்கள் என்ற வாசகத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் ஜூன் 08ம் தேதி புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டு, கட்சி பெயரையும், சின்னத்தையும் அறிமுகப்படுத்தினார். நீலம், மஞ்சள், பச்சை வண்ணம், நடுவில் ரூபாய் நோட்டை லஞ்சமாக கொடுப்பதை தடுப்பது போன்ற சின்னம், அந்த சின்னத்தின் மேலே ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி என்றும், லஞ்சத்தை வேரறுப்போம் என்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகளை வைத்தார். இதனால் அவர் கைது நடவடிக்கைக்கு உள்ளானார்.
கர்ணன் கட்சி தொடங்கிய இரண்டே நாளில் கட்சி தொடங்கினார் இன்னொருவர். சசிகலா குடும்பத்திலிருந்து உதித்த இரண்டாவது கட்சி இது. டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக அம்மா அணி என்ற பிரிவைத் தொடங்கி பின் ஜூன் 10ம் தேதி தனிக்கட்சி அறிவிப்பை அறிவித்தார். அமமுக கட்சி தொடங்கப்பட்டபோது கட்சிப் பெயரில் அண்ணாவும் இல்லை, திராவிடமும் இல்லை என ஒரு விமர்சனம் எழுந்தது. அதை நிவர்த்தி செய்ய(!!!) நினைத்தாரோ, என்னவோ அந்த இரண்டையும் சேர்த்து அண்ணா திராவிடர் கழகம் என்ற பெயரையே கட்சி பெயராக அறிவித்தார். அவர் வேறு யாருமில்லை சசிகலாவின் சகோதரர் திவாகரன்தான். மன்னார்குடியிலிருந்த அம்மா அணி அலுவலகத்தில் சசிகலாவின் படத்தை வைத்திருந்தார். இதை எதிர்த்து சசிகலா இனி அவர் என் பெயரையோ, படத்தையோ வைக்கக்கூடாது மேலும் அவர் என்னை உடன்பிறந்த சகோதரி என்று அழைக்கக்கூடாது. என வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். இதைத்தொடர்ந்துதான் மன்னார்குடியில் இந்த புதிய கட்சி அறிவிப்பு வெளியானது. அலுவலகத்திலிருந்த சசிகலாவின் படமும் எடுக்கப்பட்டது. கறுப்பு, சிவப்பு, வெள்ளை நடுவில் பச்சை நிற நட்சத்திரம் இதுதான் அவரின் கட்சிக்கொடி.
‘லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்’ என்பதுபோல இந்த வருடத்தின் கடைசியில் கட்சியைத் தொடங்கினார் பாஸ் (எ) பாஸ்கரன். சென்னை நீலாங்கரை புளூ பீச் சாலையில் உள்ள அவரது வீட்டில் புதிய கட்சியைத் துவங்கி, கொடியையும் அறிமுகம் செய்தார். கட்சிக்கு அண்ணா எம்ஜிஆர் மக்கள் கழகம் என்றும் பெயரிட்டார். கொடியில், மேலே காவி, நடுவில் பச்சை, கீழே கருப்பு, நடுவில் மஞ்சள் நிறத்தில் கருப்பு கண்ணாடியுடனான எம்ஜிஆர் படமும் இருந்தது. அப்போது அவர் ``எம்.ஜி.ஆர்., அண்ணா வழியில் ஊழலற்ற நிர்வாகத்தை தரவே கட்சி ஆரம்பித்துள்ளேன். எம்ஜிஆர் தொண்டர்களை ஒருங்கிணைத்து வழிநடத்தவே எனது இயக்கத்தை கட்சியாக அறிவித்துள்ளேன். மீண்டும் மோடியை பிரதமராக்கப் பாடுபடுவேன். ஊழலற்ற இந்தியாவின் இறையான்மையை காக்கும் மோடிக்கு எனது முழு ஆதரவு. ஆகஸ்ட் 30-ம் தேதி கட்சி துவங்க திட்டமிட்டிருந்தேன் ஆளும் கட்சியினர் பதட்டமடைந்து அந்த மாநாட்டிற்கு பல இடையுறுகள் கொடுத்தனர். இதனால் மாநாடு நடைபெறவில்லை. 15 வருடம் குஜராத்தில் முதல்வராகவும், 4 வருடம் இந்திய பிரதமராக இருக்கும் மோடி மீது எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் இல்லை எனவும் கூறினார்.
இவைகளைத் தவிர பிப்ரவரி 28ம் தேதி பத்திரிகையாளர்களை சந்தித்த டி.ராஜேந்திரன் லட்சிய தி.மு.க. என்ற பெயரை இலட்சிய தி.மு.க. என்று மாற்றினார். திமுகவில் இருந்து கருத்துமோதல் காரணமாக பிரிந்து 1989ம் ஆண்டு தாயக மறுமலர்ச்சி கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். திமுகவில் இருந்து வைகோ பிரிந்து சென்றபின், மீண்டும் திமுகவில் இணைந்தார் டி.ஆர். 1996ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பூங்கா நகர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின் மீண்டும் 2001ல் கட்சியை விட்டு விலகியிருந்தார். அதைத்தொடர்ந்து 2004ம் ஆண்டு அனைத்திந்திய லட்சிய திமுக என்ற கட்சியைத் தொடங்கினார். 2013ம் ஆண்டில் திமுக தலைவர் கலைஞரை சென்று சந்தித்தார், அப்போது அவர் மீண்டும் திமுகவில் இணைந்துவிட்டார் என தகவல்கள் பரவின. இந்நிலையில் 28ம் தேதி கட்சி பெயரில் மாற்றத்தை ஏற்படுத்தினார்.
அரசியலில் இருந்து சிலகாலம் விலகியிருந்த நடிகர் கார்த்திக், இந்த ஆண்டு மீண்டும் அரசியல் களத்தில் குதித்தார். வேறு பெயர், வேறு கொடியுடன். 2006ம் ஆண்டு ஃபார்வர்ட் ப்ளாக் கட்சியில் இருந்த இவர், 2009ம் ஆண்டு அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற ஒரு கட்சியை ஆரம்பித்தார். இந்த கட்சி 2009ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டதும் குறிப்பிடத்தக்கது. அதன்பின் டிசம்பர் 16ம் தேதி மனித உரிமை காக்கும் கட்சி என்ற ஒரு கட்சியை நெல்லை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து அறிமுகப்படுத்தினார்.
இயக்குனர் கவுதமன் புதுக்கட்சி குறித்த அறிவிப்பை 2019ம் ஆண்டு பொங்கல் அன்று அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். இங்கு யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், அரசியலில் பங்கேற்கலாம். ஆனால் அது பொதுமக்களுக்கு நன்மை செய்வதற்காகவே இருக்கவேண்டும்.