நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாட்கள் குறைவாக இருப்பதால், முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தமிழகத்தின் 39 தொகுதியிலும் அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், ஆன்மீக திருத்தலங்கள் நிறைந்த திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் மீண்டும் திமுக சார்பில் சி.என். அண்ணாதுரை இரண்டாவது முறையாக களம் இறக்கப்பட்டுள்ளார். முன்னதாக திமுகவைச் சேர்ந்த எ.வ.வேலுவின் இளைய மகன் மருத்துவரணி மாநில துணைத் தலைவர் மருத்துவர் கம்பன், பொறியாளர் அணியின் மாநிலச் செயலாளர் கு.கருணாநிதிக்கு தலைமை சீட் வழங்கும் என அரசியல் வட்டாரம் எதிர்பார்த்த நிலையில், மீண்டும் சி.என். அண்ணாதுரை மீது தலைமை நம்பிக்கை வைத்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட சி.என். அண்ணாதுரை அந்த தேர்தலில் வெற்றிப் பெற்றார். அதனைத் தொடர்ந்து, தொகுதி மக்களின் பிரச்சனைகளுக்கு மக்களவையில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். ஆனால், மத்தியில் ஆளும் அரசு எதிர்க்கட்சி பாஜகவாக இருப்பதால், அவரால் தொகுதி திட்டப்பணிகளை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை என குற்றம் சாற்றுகின்றனர் எம்பியின் ஆதரவாளர்கள்.
51 வயதான சி.என். அண்ணாதுரை, திருவண்ணாமலை மாவட்டம், தேவனாம்பட்டு காட்டுப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர். சி.என். அண்ணாதுரையின் தாத்தா சின்னசாமி பேரறிஞர் அண்ணா மீது தீவிரப் பற்றுக்கொண்டவர். அவரைத் தொடர்ந்த சி.என். அண்ணாதுரையின் அப்பா நடராஜனும் திமுக கட்சியில் அப்போதே ஒன்றியச் செயலாளராக கழக பணியில் ஈடுபட்டவர். இப்படி இரண்டு தலைமுறையாக பேரறிஞர் அண்ணா மீது தீவிரப் பற்றுக்கொண்ட குடும்பம் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த மகனுக்கும் பேரறிஞர் அண்ணாவின் பெயரையே சூட்டியது. சி.என். அண்ணாதுரை, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.காம் முடித்தவர். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் கட்டுமானத் துறையில் நுழைந்த அண்ணாதுரை முழு நேர பிசினஸ்மேனாக மாறினார். இதனிடையே, மூன்றாவது தலைமுறையாக திராவிட இயக்கத்தில் இருந்த அண்ணாதுரை கிளைச் செயலாளர், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் என படிப்படியாக திமுக கட்சியில் வளர்ந்தவர்.
தொடர்ந்து, பாரம்பரியமாக திமுக கட்சியில் தீவிரமாக கழகப் பணிகளை செய்து வந்த சி.என். அண்ணாதுரையை திமுக அமைச்சர் எ.வ.வேலு இளம் வயதிலேயே அடையாளம் கண்டார். அதனைத் தொடர்ந்து, எ.வ.வேலுவின் அரவணைப்பில் கட்சிப் பணிகளை மேற்கொண்டு வந்த சி.என். அண்ணாதுரைக்கு திமுக கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட முதல் முறையாக வாய்ப்பு வழங்கியது. ஆனால், அந்த முறை தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். முன்னதாக மறைந்த திமுக தலைவர் கலைஞர் சி.என். அண்ணாதுரைக்கு முதல் முறை சீட் வழங்கிய போது, ''என் அண்ணன் பெயரைக்கொண்ட இந்த சி.என்.அண்ணாதுரைக்கே சீட்..’' என குறிப்பிட்டு வழங்கியதாக அவரது ஆதரவாளர்கள் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். இதையடுத்து, மீண்டும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அவரது அரசியல் குரு எ.வ.வேலுவின் மூலம் சீட் சி.என். அண்ணாதுரைக்கு கிடைத்தது. ஆனால், இந்த முறை சி.என். அண்ணாதுரை வாகை சூடினார்.
அதனைத் தொடர்ந்து, நாடளுமன்றம் அவைக்குச் சென்ற சி.என். அண்ணாதுரை தொடர்ந்து தொகுதி மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வந்தார். அதன் மூலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களை ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின்கீழ் மேம்படுத்த நிதி ஒதுக்கச் செய்தார். திருவண்ணாமலை - திண்டிவனம் ரயில் பாதைத் திட்டத்துக்காகப் போராடி, 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார். ஆனால், எம்பி திட்டம் தொகுதிக்கு கொண்டு வந்தும் நிதி மத்திய அரசு ரிலீஸ் செய்யவில்லை என குற்றம் சாற்றுகின்றனர் அவரது ஆதரவாளர்கள். அதுமட்டுமல்லாமல் ஜவ்வாதுமலை, புதூர்நாடு மலைக் கிராமங்களில் 33 டவர்களை நிறுவுவதற்கான பணிகளை தனது தொகுதியின் வளர்ச்சிக்கு மத்திய அரசிடம் சி.என். அண்ணாதுரை அழுத்தம் கொடுத்து செய்து கொடுத்துள்ளார். மத்திய அரசு போதிய நிதி ஒதுக்காத காரணத்தால் தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு காத்திருக்காமல் சி.என். அண்ணாதுரை தனது சொந்த செலவில் பர்வதமலைக்கு 40 சோலார் விளக்குகளை அமைத்துள்ளார்.
கடந்த முறை மத்தியில் எதிர்க்கட்சியாக பாஜக இருந்த காரணத்தால் திருவண்ணாமலை தொகுதி வளர்ச்சி திட்டப்பணிகளை முழுமையாக செய்ய முடியவில்லை என்றும், வருகிற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வாய்ப்பு அளித்தால் மேலும், சி.என். அண்ணாதுரை சிறப்பாக செயல்படுவார் என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மீண்டும் வேட்பாளராக சி.என். அண்ணாதுரை அறிவிக்கப்பட்டதில் இருந்து அவரது ஆதரவாளர்கள் இந்த முறையும் அவரை வெற்றி பெற வைக்க தீவிரமாக வேலை செய்து வருகின்றனர்.