சென்னை கொளத்தூரில் நகைக்கடையில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற குழுவில் மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் இறந்தார். 13.12.2017 அன்று கொள்ளையர்களுக்கும் போலீசாருக்கும் துப்பாக்கிச் சூடு மோதல் நடந்தது. இதில் ஆய்வாளர் முனிசேகர் சுட்டத்தில் எதிர்பாராத விதமாக பெரியபாண்டியன் இறந்தார். அவர் இறந்து ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி அவர் பணியாற்றிய மதுரவாயல் காவல்நிலையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பெரியபாண்டியின் திருவுருவப்படத்திற்கு காவல்நிலைய போலீசாரும், பொதுமக்களும் மலர்தூவி மரியாதை செய்தனர்.
ராஜஸ்தானில் கொள்ளையர்களை துணிச்சலாக எதிர்கொண்டு பலியான 49 வயதே ஆன சென்னைக் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டது அவரது கிராமத்தை உலுக்கி விட்டது.
நெல்லை மாவட்டத்தின் வன்னிக்கோனேந்தலையடுத்து உள்ளடங்கியது சாலைப்புதூர் கிராமம். சாலை வசதியற்றது. சுமார் நூறு வீடுகளைக் கொண்ட அந்தக் கிராமம் வளர்ச்சியில் பின்தங்கியது. விவசாயத்தையும், சுய உழைப்பையும் நம்பிய கிராமம் அது. அங்குள்ள செல்வராஜ், ராமுத்தாய் தம்பதியரின் ஆறு பிள்ளைகளில் மூத்தவர் பெரியபாண்டியன்.
ஆரம்பக் கல்விக்கே மூன்று கிலோ மீட்டர் நடந்து சென்று படித்தவர். பள்ளி முடிந்த நேரங்களில் தன் பெற்றோர்களுக்கு உதவியாக வயலில் வேலை செய்தவர். அதன் பின் பி.எஸ்.சி. படிப்பை பி.எம்.டி. கல்லூரியில் முடித்தார். பட்டப்படிப்பு முடிந்து வேலை தேடுகிற இடைப்பட்ட நாட்களில் தனது கிராமத்துப் பிள்ளைகளுக்கு டியூசன் சொல்லிக் கொடுத்து ஒரளவு அவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தியிருக்கிறார்.
காவல் துறையில் வேலை கிடைத்த உடன் அவர் முதன் முதலாக சி.பி.சி.ஐ.டி. பிரிவில் பணிபுரிந்து பின் சென்னைக்கு மாறுதலாகி 19 வருடங்கள் ஆகின.
தன்னுடன் பிறந்தவர்களைக் கரையேற்றிய பிறகே பெரியபாண்டியனுக்குத் திருமணம் ஆகியிருக்கிறது. தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்தவர் அவரது மனைவி பானு ரேகா. இவர்களுக்கு இரண்டு மகன்கள். தன் கிராமத்துப் பிள்ளைகள் படிப்பதற்கு பள்ளிக்கூடம் கட்டுவதற்காக தன்னுடைய 15 சென்ட் சொந்த நிலத்தை இலவசமாகக் கொடுத்திருக்கிறார்.
அவரது தந்தை காலமாகி ஒன்றரை வருடம் கழிந்த நிலையில், பெரியபாண்டியன் கொள்ளையர்களால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். தாய் ராமுத்தாய் மகனைப் பறிகொடுத்த வேதனையில் பேசமுடியாமல் கதறிக் கொண்டிருக்க. உடன் பிறந்த தம்பியான ஜோசப் மனதைத் தேற்றிக் கொண்டு பேசினார்.
எங்கப்பா அம்மாவோட கஷ்டப்பட்டு எங்கள முன்னுக்கு கொண்டு வந்தவர் எங்கண்ணன். ஊரில் ஏழைப்பட்டவங்க பல பேர சென்னையில வேலைக்குச் சேர்த்துவுட்டவரு. படிச்ச பலபேருக்கு கல்வி, வேலை வாய்ப்புக்கும் உதவுவாரு. யார் மனசும் நோவும்படி நடக்கக் கூடாதுன்னு சொல்ற எங்கண்ணன் துணிச்சலானவரு. இப்புடி நடக்கும்னு நெனைச்சுக் கூடப் பாக்கலியேய்யா.
தொண்டை அடைத்தது ஜோசப்பிற்கு.
போராடும் துணிச்சல் கொண்ட பெரியபாண்டியனின் மரணம், அந்தக் குடும்பத்தை நொறுக்கி விட்டது.