Skip to main content

டார்கெட் 117! எல்லா உதவிகளையும் கட்சி செய்யும்... வேலையை தொடங்குங்க... முடுக்கிவிட்ட இ.பி.எஸ்.! 

Published on 02/07/2020 | Edited on 02/07/2020
edappadi palanisamy

 

கரோனா பிரச்சனை எப்போது தீரும் என்பதை கடவுளிடம் விட்டு விட்ட முதல்வர் எடப்பாடி, தேர்தல் வேலைகளைப் பற்றி ஓ.பன்னீர்செல்வத்துடன் விவாதித்துவிட்டுத்தான் வெளியூர் பயணத்திற்கு ஆயத்தமானார். கடந்த முறை திமுகவிற்கு தேர்தல் ஆலோசகராக இருந்த சுனில்தான் இப்போது அதிமுகவின் தேர்தல் ஆலோசகராக இருக்கிறார். அதனால், தி.மு.க.வை எப்படி எதிர்கொள்வது எனற வியூகத்தை வகுப்பது அவருக்கு எளிதாக இருக்கிறது என்கிறார்கள்.

தமிழகத்தில் முதல் முதலாக அமமுகவில் ஒரு வருவாய் மாவட்டத்திற்கு 3 மாவட்ட செயலாளர்கள் என 70 மா.செ.க்களை நியமித்தனர். திமுகவிலும் 3 சட்டமன்றத்திற்கு ஒரு மா.செ என நியமிக்க ஆரம்பித்துள்ளார்கள். இதே போன்று அதிமுகவிலும் வேகமும் வியூகமும் கூடியுள்ளது.

அதிமுகவில் தற்போது 54 மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள். இதில் தேர்தலுக்காக மாற்றம் செய்து, சட்டமன்றத் இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் வீதம் 117 மாவட்ட செயலாளர்கள் நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு மா.செ., தான் போட்டியிடும் தொகுதியில் கட்டாயம் ஜெயிக்க வேண்டும். அத்துடன், இன்னொரு தொகுதி வேட்பாளரை ஜெயிக்க வைக்கவேண்டும். தேர்தல் வேலைகளை கவனிப்பதும் எளிதாகி விடும்.

இதனடிப்படையில் தற்போது உள்ள ஒரு மாவட்டத்தில் 3 முதல் நான்கு மாவட்ட செயலாளர்கள் நியமிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. கட்சியில் உயர் பொறுப்பு கேட்கும் முன்னாள் நிர்வாகிகளுக்கு மா.செ.பொறுப்பு வழங்கப்பட்டு அவர்கள் போட்டியிடும் தொகுதி யையும் முன் கூட்டியே அறிவித்து, வேலை செய்வதற்கான ஏற்பாடுகள் தயராகிறதாம். அதிக அளவில் மா.செ. நியமிப்பதன் மூலம், வரும் தேர்தலில் 90, தொகுதி முதல் 110 தொகுதி வரை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பது அ.தி.மு.க. கணக்கு.

புதிய வியூகம் குறித்து திருச்சி மாவட்டம் பரபரத்து வரும் நிலையில், ஸ்ரீரங்கம் தொகுதியைச் சேர்ந்த அமைச்சர் வளர்மதி அடுத்தமுறை போட்டியிட போவதில்லை என்கிற முடிவில் இருந்தாராம். ஆனால் எடப்பாடியே அவரிடம், எல்லா உதவிகளையும் கட்சி செய்யும். தொகுதியை தக்கவைக்கிற வேலையை மட்டும் பாருங்கள் என்று சொல்லிவிட்டாராம். ஆவின் சேர்மன் கார்த்தி கேயனுக்கு மா.செ. பொறுப்புடன் மணப்பாறை தொகுதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கிழக்கு தொகுதியில் பணிகளை ஆரம்பித்துவிட்டார். மா.செ.வும் முன்னாள் எம்.பி.யுமான குமார் திருவெறும்பூரை குறிவைத்து வேலையை ஆரம்பித்திருக்கிறார்.

திருச்சி புறநகர் பகுதியில் மா.செ. ரத்தினவேல், கு.பா.கிருஷ்ணன், கே.கே.பாலசுப்ரமணியன், சிவபதி, பரஞ்சோதி, என பெரிய பட்டாளமே தேர்தல் களத்தில் போட்டுயிடுவதற்கு தயார் நிலையில் உள்ளனர் என்கிறார்கள்.

ஜெ.தாவீதுராஜ்

 

 

சார்ந்த செய்திகள்