சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ஊடகத்தை சந்தித்த ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் கட்சிக்கு மட்டுமே நான் தலைமை ஏற்பேன். முதல்வர் பதவியை நான் ஏற்கமாட்டேன். என்னை வருங்கால முதல்வர்... வருங்கால முதல்வர் என சொல்லுவதை முதலில் நிறுத்துங்கள். அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் வேண்டும். நான் முதல்வர் இல்லை ஆனால் அரசியல் புரட்சி வேண்டும் என்பதை நீங்கள் உணர்ந்து உழைத்து அந்த எழுச்சியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் அப்படி மக்களிடம் மாற்றத்துடன் கூடிய எழுச்சி ஏற்பட்டால்தான் நான் அரசியலுக்கு வருவேன் என்றார்.
இதனையடுத்து, திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசும் போது, 'யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அதேபோல் என்னிடம் மக்கள் பிரச்னை குறித்து கேள்வி கேளுங்கள். அதை விடுத்து ரஜினி குறித்து கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என்றால் 5 லட்சம் ரூபாய் என் அக்கவுண்டில் போடுங்கள்' என்றார். இந்த நிலையில் சரத்குமாரின் இந்த கருத்துக்கு பாஜகவின் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ளார். அதில், "நம்ம பாக்கெட்டுல பணம் பொங்கி வழிஞ்சா ஊர்ல எல்லார்கிட்டயும் பணம் பொங்கி வழியுதுன்னு மனசு நினைக்கும்" என்று கூறியுள்ளார். அதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சியும், பாஜகவும் கூட்டணி இருக்கும் நிலையில் சரத்குமார் பற்றி எஸ்.வி.சேகர் விமர்சனம் செய்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.