கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான கே.சி.வீரமணி, திமுக மாவட்ட பொறுப்பாளரான தேவராஜ்யிடம் தோல்வியை சந்தித்தார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தனது வீட்டுக்கு எதிரிலுள்ள ஜோலார்பேட்டை நகராட்சியின் அலுவலகத்தில் அதிமுக சேர்மன் தான் அமர வேண்டும் என தீவிரம் காட்டினார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கில் வீரமணி சிக்கினாலும் ஜோலார்பேட்டை நகராட்சியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களுக்கு கணிசமாக தொகையை தந்தார். ஆனால், நகர் மக்கள் முன்னாள் அமைச்சருக்கு பெரும் அதிர்ச்சியை தந்தனர்.
இந்த நகர்மன்றத்தில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 16 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றது, அதிமுக இரண்டு இடங்களை மட்டுமே பிடித்தது வீரமணிக்கு அதிர்ச்சியை தந்தது. இப்போது இந்த நகரமன்றத்தின் தலைவர் யார் என்கிற கேள்வி திமுகவில் எழுந்துள்ளது. நகர்மன்ற தலைவர் பதவி இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பட்டியலின பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது.
இளைஞரணி அமைப்பாளரான விக்டர் என்பவரின் மனைவி காவ்யாவை நகர மன்றத் தலைவர் வேட்பாளராக்க முடிவு செய்யவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த முடிவு திமுக தொண்டர்கள் மட்டுமல்ல பொது மக்களிடையேவும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் விக்டர், நேவீ வீரர் ஒருவரை கொலை செய்த வழக்கில் ஏ2 வாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். அதோடு வெளிமாநில மதுபானங்களை திருட்டுத்தனமாக கொண்டு வந்து விற்கும் வழக்கு, கஞ்சா வழக்கு போன்ற சில வழக்குகள் உள்ளதாக குற்றம்சாட்டுகிறார்கள். இப்படிப்பட்ட ஒருவரின் மனைவியையா நகர மன்ற தலைவர் வேட்பாளராக்குவது என கேள்வி எழுப்புகிறார்கள்.
வெற்றி பெற்ற கவுன்சிலர்களில் தகுதியான கவுன்சிலர்கள் இல்லை என்கிறது திமுக நிர்வாகிகள் தரப்பு. கவுன்சிலர்கள் ஒவ்வொருவருக்கும் 2 லட்சம் ரூபாய் விக்டர் சார்பாக வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், நகராட்சியில் பதிவு செய்துள்ள ஒப்பந்ததாரர்கள் கூட்டு சேர்ந்து ஒவ்வொரு கவுன்சிலருக்கும் தினமும் 50 ஆயிரம் ரூபாய், சேர்மன் தேர்வு செய்யும் வரை தரச்சொல்லி உத்தரவிட்டுள்ளதாகவும் திமுகவினர் மத்தியிலே பேசப்படுகிறது.