நடைபெறவிருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக 33 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு ஐந்து இடங்கள், புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சிக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல, தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான “இந்தியா” கூட்டணியில் தொகுதி பங்கீடுகள் இறுதி செய்யப்பட்டு, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக, 21 தொகுதிகளில் போட்டியிடும் திமுகவின் வேட்பாளர்கள் பட்டியலை, அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். கூட்டணிக் கட்சியான விசிகவுக்கு இரண்டு தொகுதிகள், காங்கிரசுக்கு பத்து தொகுதிகள், மதிமுகவுக்கு ஒரு தொகுதி, கொமதேக-வுக்கு ஒரு தொகுதி, இடதுசாரிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள், ஐயுஎம்எல் கட்சிக்கு ஒரு தொகுதி என திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு நிறைவுசெய்துள்ளது.
இரு கழகங்களிலும் செல்வாக்குமிக்க வாரிசுகள் களமிறங்கியுள்ள 'ஸ்டார்' தொகுதி தென்சென்னை. தி.மு.க.வில், சிட்டிங் எம்பியான கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனை வேட்பாளராக அறிவித்த மறுநாளே டாப் கியரில் தேர்தல் பயணத்தை துவக்கியிருக்கிறார். இந்த தொகுதியில் போட்டியிடுவதற்காக தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழிசை சவுந்தரராஜன் களமிறங்கியுள்ளார். ஏற்கெனவே, தமிழக மக்களிடம் பரிச்சயமான முகம் என்பதால் அவரை துணிந்து பாஜக போட்டியிட வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகனான ஜெயவர்தன் இறங்கியுள்ளார். இதனால், தென்சென்னை தொகுதி இப்போதே பரபரப்புடன் காணப்படுகிறது. பாரம்பரிய திமுக தொகுதி என்பதும் பலமுறை உதயசூரியன் இந்த தொகுதியில் நின்று வென்றுள்ளது என்பதும் திமுகவினரை தெம்பாக தேர்தல் வேலை பார்க்க வைத்துள்ளது.
அதேபோல, ஸ்டார் தொகுதியான மத்திய சென்னை தொகுதியில் திமுகவில் இருந்து சிட்டிங் எம்பியான தயாநிதி மாறன் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக அதிமுக கூட்டணியான தேமுதிகவில் இருந்து பார்த்தசாரதி போட்டியிடுகிறார். பாஜக சார்பில் வினோஜ் பி.செல்வம் வேட்பாளராக களமிறங்குகிறார். இந்த தொகுதியில், அதிகமுறை நின்று வென்ற கட்சி திமுக. 96ல் இருந்து முரசொலிமாறன் கையில் இருந்த இந்த தொகுதி அவரது மறைவுக்கு பிறகு, அவரது மகனான தயாநிதி மாறன் வசத்தில் சென்றது. 2014 தேர்தலில் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்ட தயாநிதி மாறன் இதுவரை மூன்று முறை இந்த தொகுதியில் நின்று வென்றுள்ளார். இதனால், எப்படியும் தயாநிதியை வீழ்த்தியே தீரவேண்டும் என பாஜகவும் அதிமுகவும் போட்டிப்போட்டு களத்தில் இறங்கியுள்ளன.
வேலூர் மக்களவை தொகுதியும் ஸ்டார் தொகுதி வரிசையில் வருகிறது. வேலூர், அணைக்கட்டு, கே. வி. குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகள், வேலூர் நாடாளுமன்றத்திற்கு உட்பட்டுள்ளது. வேலூர் தொகுதியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் பசுபதி களம் காணும் நிலையில், பாஜக வேட்பாளராக புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியை பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட கட்சிதான் வலுவான வாக்குவங்கியை கொண்டுள்ளது எனச் சொல்லமுடியாது. திமுக பலமுறை இந்த தொகுதியில் வென்றிருந்தாலும், பாமக, அதிமுக, காங்கிரசு என பல கட்சிகள் கடந்த காலங்களில் வெற்றி கொடி நாட்டியுள்ளன. கடந்தமுறை கதிர் ஆனந்த் மிகக் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதே அதற்கு சாட்சி.
கன்னியாகுமரி தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் மீனவர் சமூகத்தை சேர்ந்த பசிலியான் நசரேத் களமிறங்குகிறார். திமுகவில் மீனவர் அணி அமைப்பாளராக பணியாற்றிய இவர், தனக்கு போதிய அங்கீகாரம் வழங்கவில்லை என்பதால் அதிருப்தியில் கடந்த நவம்பர் மாதம் அதிமுகவில் இணைந்தார். இந்த நிலையில், அவருக்கு பாஜக சீட் கொடுத்துள்ளது. இந்த தொகுதிக்கான, காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. காங்கிரஸ் சார்பில் இங்கு மீண்டும் விஜய் வசந்த் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பத்தாவது முறையாக பொன் ராதாகிருஷ்ணன் களமிறங்குகிறார். சமீபத்தில், பாஜகவில் சேர்ந்த காங்கிரஸ் பெண் பிரமுகர் விஜயதாரணிக்கு சீட் வழங்கப்படவில்லை. விளவங்கோடு எம்.எல்.ஏ. பதவியில் இருந்து அவர் விலகியதால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இடைத்தேர்தலிலும் வி.எஸ்.நந்தினி என்பவர் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
மேலும், மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. இதனால் ராஜ்யசபா சீட்டோ அல்லது முக்கிய பதவியோ தந்து விரைவில் மேலிடம் குஷிப்படுத்தும் என தமிழக பாஜக தலைவர்கள் அவரை ஆறுதல் படுத்தியுள்ளனர். அந்த சர்ப்ரைஸ்க்காக அவர் காத்திருக்கிறார். 1991-ஆம் ஆண்டு முதல் பாஜக சார்பில் தொடர்ச்சியாக பொன். ராதா கிருஷ்ணன் இங்கு போட்டியிடுகிறார். 9 முறை சந்தித்த மக்களவை தேர்தலில் 1999, 2014-ம் ஆண்டுகளில் இருமுறை வெற்றிபெற்று மத்திய இணை அமைச்சர் ஆனார். மற்ற 7 முறை அவர் தோல்வியடைந்தார். பெரும்பாலும் தேசிய கட்சியான பாஜக மற்றும் காங்கிரஸ் பிடியில் இருக்கும் இந்த தொகுதியில், திமுக 2009 தேர்தலில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த ஸ்டார் தொகுதி லிஸ்டில் மிக முக்கியமான இன்னொரு தொகுதி விருதுநகர். விருதுநகரில் பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் களமிறக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து, அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் களம் காண்கிறார். தேமுதிக, மதிமுக ஆகிய கட்சிகள் கடந்த தேர்தல்களில் இரண்டாம் இடத்தை தொகுதியில் பிடித்து வந்துள்ளது. கடந்த 2009 மற்றும் 2019 ஆகிய இரு தேர்தல்களிலும் காங்கிரசின் கையே ஓங்கியிருந்தது. இதில், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரே வெற்றி பெற்றுள்ளார். அதனால், இந்த முறையும், இந்த தொகுதியை காங்கிரஸ் மாணிக்கம் தாகூருக்கே ஒதுக்கக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ராதிகா சரத்குமார், விஜய பிரபாகரன், சிட்டிங் எம்பி மாணிக்கம் தாகூர் என் இப்போதே விருதுநகர் தொகுதி பரபரத்து காணப்படுகிறது.
அதேபோல.. பெரம்பலூர் தொகுதியில் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு முதன்முறையாக நாடாளுமன்ற வேட்பாளராக அரசியல் களம் காண்கிறார். அதிமுக சார்பில் சந்திரமோகன் வேட்பாளராக உள்ள நிலையில், பாஜக கூட்டணி சார்பில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் தாமரை சின்னத்தில் களமிறங்குகிறார். திமுக அதிமுக காங்கிரஸ் என மாறி மாறி இந்த தொகுதி பலரை வெற்றி பெறச் செய்துள்ளது. இந்த தொகுதியில் ஆ ராசா மூன்றுமுறையும் நடிகர் நெப்போலியன் ஒருமுறையும், திமுக சார்பில் நின்று வென்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல, கடந்த 2019 தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் திமுகவுடன் கூட்டணி அமைத்து உதயசூரியன் சின்னத்தில் நின்று பாரிவேந்தர் வெற்றிபெற்றார். இந்த நிலையில், பாஜக கூட்டணியில் தற்போது தாமரையில் களம் காண்கிறார்.
இதே போல் நீலகிரி தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசா களம் இறங்கியுள்ளார். பாஜக வேட்பாளராக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷூம் களம் இறக்கப்பட்டுள்ளனர். இதனால், அந்த தொகுதியும் நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படுகிறது. முதலில் தூத்துக்குடியில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், உத்தேசப்பட்டியலில் இருந்த நெல்லை தொகுதியே அவருக்கு ஒதுக்கி அறிவிக்கப்பட்டது. திமுகவில் இருந்து அதிமுகவுக்கு சென்ற சிம்லா முத்துச்சோழனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், 15 நாட்களுக்கு முன்பு அதிமுகவில் இணைந்த சிம்லா முத்துசோழனுக்கு எப்படி வாய்ப்பு கொடுத்தீர்கள் என்று கட்சியினர் மத்தியில் அதிருப்தி எழுந்தது. அதனால் தற்போது திசையன் விளை பேரூராட்சி தலைவராக உள்ள ஜான்சி ராணி புதிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுகவை பொறுத்தவரை நெல்லை தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வெற்றி வாய்ப்பை மக்கள் முடிவு செய்வார்கள் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தருமபுரி தொகுதியில் பாஜக-பாமக கூட்டணி சார்பில், அரசாங்கம் என்பவர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அன்புமணியின் மனைவியும் பசுமை தாயகம் அமைப்பின் தலைவருமான சவுமியா அன்புமணி போட்டியிடுவதாக பாமக தலைமை அறிவித்துள்ளது. கொடுத்த உடனேயே மேலிடம் கேட்பதால், வேறு வழியின்றி அரசாங்கம் ஒப்புக்கொண்டதாக பாமகவினர் கூறுகின்றனர். இதனால், தொடர்ந்து பத்து ஆண்டுகளாக ஸ்டார் தொகுதியாக இருந்த தர்மபுரி, மீண்டும் ஸ்டார் தொகுதி அந்தஸ்தைப் பெற்றுள்ளது. அதேபோல, திருச்சியில் ராம சீனிவாசன் போட்டியிட பாஜகவில் எதிர்ப்பு எழுந்ததால், அவருக்கு மதுரை தொகுதியை ஒதுக்கி பாஜக அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.