Skip to main content

"விஜய்யை காக்கா பிடிக்க இப்படி பேசுவீங்களா"...சர்ச்சையை ஏற்படுத்திய விவேக் பேச்சு!

Published on 25/09/2019 | Edited on 25/09/2019

நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னை தாம்பரத்தில் உள்ள சாய்ராம் தனியார் கல்லூரியில் நடைபெற்றது.  இவ்விழாவில் பேசிய நடிகர் விஜய், அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார். இந்த கருத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்து கருத்து வருகின்றனர். தற்போது பீகில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விவேக் பேசிய கருத்துக்கு சிவாஜி சமூகநலப் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளனர். 

 

vivek



இது குறித்து சிவாஜி சமூக நலப் பேரவை  வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,"பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விவேக் 1960-ம் ஆண்டு வெளிவந்த சிவாஜி கணேசன் - வைஜெயந்தி மாலா நடித்த இரும்புத்திரை திரைப்படத்தின் 'நெஞ்சில் குடியிருக்கும்' என்று தொடங்கும் அருமையான பாடலைக் கிண்டலடித்திருக்கிறார். மேடை கிடைத்துவிட்டால், கூட்டத்தைப் பார்த்துவிட்டால் சிலர் உளற ஆரம்பித்துவிடுவார்கள். அந்த வரிசையில் நடிகர் விவேக்கும் இணைந்துள்ளார். எந்த நடிகரை வேண்டுமானாலும் தூக்கி வைத்துக் கொண்டாடுங்கள், எந்த இசையமைப்பாளர் அல்லது பாடலை வேண்டுமானால் பாராட்டுங்கள் தவறில்லை. ஆனால் ஒரு நடிகரை காக்கா பிடிப்பதற்காக, ஏற்கெனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள ஒரு பாடலை கிண்டலடிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. 

  circular



ஏதோ இப்போதுதான் அந்தப் பாடல் மக்களுக்கே தெரிய வருவதுபோலக் கூறும் விவேக், 'நெஞ்சில் குடியிருக்கும்' என்ற 1960-ம் ஆண்டு வெளிவந்த பாடல் மிகவும் மிகவும் வரவேற்பைப் பெறவில்லை என்றால் அதனை ஏன் அதே டியூனை மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்று கூறத் தயாரா? டியூனுக்கு ஏற்பட்ட பஞ்சம் காரணமாக பிரபலமான டியூன் என்பதாலேயே அதனைக் காப்பியடித்து பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற சாதாரண அறிவு கூட இல்லாமல் பேசியிருக்கிறார் விவேக்.ஏற்கெனவே ஒரு திரைப்படத்தில் சிவாஜி கணேசனின் புகழ்பெற்ற பராசக்தி திரைப்படத்தில் வரும் நீதிமன்ற வசனத்தைப் பேசி கிண்டலடித்திருந்தார் விவேக். இப்போது சிவாஜி கணேசனின் அருமையான திரைப்படப் பாடலை பொதுமேடையில் கிண்டலடித்திருக்கிறார். இதுபோல தொடர்ந்து விவேக் செய்தால் அவருக்கெதிராக ரசிகர்களை ஒன்றுதிரட்டி சிவாஜி சமூக நலப்பேரவை போராட்டம் நடத்தும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்