கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழகத்திற்கு வந்துள்ள மத்திய ஆய்வு குழு நியாயமாக ஆய்வுசெய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 15ஆம் தேதி தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களை பெரும் பாதிப்புக்குள்ளாகிய கஜா புயல் காரணமாக மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் புயல் நிவாரண நிதியாக 15 ஆயிரம் கோடி கோரியுள்ளார். மேலும் மத்திய ஆய்வுக்குழு தமிழகம் வந்து புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பார்வையிட வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தார். அதன்பின் நேற்று தமிழகம் வந்த மத்திய ஆய்வுக்குழு முதல்கட்டமாக புதுக்கோட்டையில் ஆய்வு நடத்தினர். அதன்பின் இன்று தஞ்சையில் ஒரத்தநாடு ஆகிய இடங்களில் தற்போது ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
ஆனால் புயல் பாதிப்புகளை பார்வையிட வந்த மத்திய குழு இரவு நேரங்களில் பார்வையிட வந்ததாகவும், மேலும் தங்களிடம் சரியான தகவல்களை கேட்டு பெறவில்லை எனவும் மக்கள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின்
மத்திய ஆய்வுக்குழு புயல் பாதித்த பகுதியில் முறையாக, நியாயமாக ஆய்வு செய்ய வேண்டும். இரவு நேரத்தில் ஆய்வு செய்யாமல் பகலில் ஆய்வு செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் அதை பின்பற்ற வேண்டும் எனக்கூறிய ஸ்டாலின் , மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டுள்ள 15 ஆயிரம் கோடி நிவாரண நிதி போதாது எனவும் கூறினார்.