இறைப்பணியாய் தாகம் தீர்த்தவருக்கு நினைவு மண்டபமும் ஊரணியும் செய்துகொடுத்த மருதுபாண்டியர்கள். இதுகுறித்து கொல்லங்குடியைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் புலவர் கா.காளிராசா கூறியதாவது; சிவகங்கை சீமை என்றாலே சிவகங்கை அரண்மனை, காளையார் கோவில் கோபுரம் போன்றவை முதன்மையானவை. இந்த கோபுரத்திற்காக மருது சகோதரர்கள் இன்னுயிர் நீத்தமை அனைவரும் அறிந்ததே. சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர் காளையார் கோவில் போரில் 1772ல் இறந்ததால் அவர் நினைவாக காளையார்கோவில் சிவன் கோவிலில் 152.1/2 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தை மருதுபாண்டியர்கள் அமைத்தனர்.
தாகம் தீர்த்த மொட்டையன் சாமி:
கோபுரம் கட்டுமானப்பணிக்கு மானாமதுரையில் இருந்து காளையார் கோவிலுக்கு மக்கள் வரிசையாக நின்று கைமாற்றி செங்கற்கற்களை கொண்டு வந்துள்ளனர். அப்பணியின்போது கொல்லங்குடி புதிதாக உருவான ஊராக இருந்ததால் குடிநீர் ஊரணி வசதியில்லை கொல்லங்குடி பகுதியில் குரு காடி பட்டியை சேர்ந்த மொட்டையன் என்பவர் இறைத்தொண்டாக தண்ணீர் பந்தல் வைத்திருந்தார். கோபுரம் கட்டுமான பணியில் ஈடுபட்டவர்களுக்கும் தாகம் தீர்க்க தண்ணீர் வேண்டுவோருக்கும் தண்ணீரை சுமந்து வந்து வழங்கி தாகம் தீர்த்துள்ளார். இச்செய்தி மருது சகோதரர்களுக்கு கிடைக்க அவரைக் காண வந்துள்ளனர். ஆதிதிராவிடர் சமூகத்தை சார்ந்த மொட்டையன், மருது சகோதரர்கள் தன்னைக் காண வரும் செய்தியை அறிந்து அச்சப்பட்டதாகக் கூறுவர்.
சமத்துவம் பேணிய மருது சகோதரர்கள்:
வரிசையாக மக்கள் செங்கற்கற்களை கை மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இடத்தில் மொட்டையன் சாமியை மருது சகோதரர்கள் கண்டு மக்கள் தொண்டை மகேசன் தொண்டாக செய்த அவரை பெருமை செய்யும் விதமாக உமக்கு கொடையாக என்ன வேண்டும் எனக்கேட்க கொல்லங்குடிக்கு குடிநீர் ஊரணி வெட்டித் தரக் கேட்டுள்ளார்.
மருது சகோதரர்கள் கல்மண்டபமும் ஊரணியும் அமைத்து தந்தனர்:
கொல்லங்குடி ஊருக்கு குடிதண்ணீர் ஊரணியை வெட்டித் தந்ததோடு கொல்லங்குடியிலும் மொட்டயன் சாமி பிறந்த குருகாடிப்பட்டியிலும் அவருக்கு பெருமை செய்யும் விதமாக கல் மண்டபங்களை கட்டி வைத்ததோடு நிலபுலங்களை வழங்கி சிறப்பித்தனர். இன்றும் இந்நிகழ்வின் சாட்சியாக கொல்லங்குடியிலும் குருகாடி பட்டியிலும் மண்டபங்கள் இருப்பதோடு கொல்லங்குடி குடிநீர் ஊரணி மருது ஊரணி என அழைக்கப்படுகிறது.
ஆங்கில இந்திய பேரரசு காலத்தில் ஒருங்கிணைந்த இராமநாதபுரம் விவர நூலில் இச்செய்தி பதிவாகியுள்ளது. இக்கல் மண்டபங்களை மொட்டையன் சாமி வழித்தோன்றல்கள் இன்றும் பராமரித்து பாதுகாத்து வருகின்றனர். என்று கூறினார்.