சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8. அது மகளிர் தினம் என்பதைவிட ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் என்றே குறிப்பிட வேண்டும். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
உலகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் இருந்ததுபோல், 18ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றி வந்தனர். வீட்டு வேலைகளைச் செய்வதற்காகப் பெண்களை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்திருந்தனர் ஆண்கள். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்ப கல்வி கூட தரப்படாமல் மறுக்கப்பட்டது.
1857ஆம் ஆண்டு நிலக்கரிச் சுரங்கங்கள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் பெண்களுக்குப் பணி வாய்ப்பு தரப்பட்டது. பெண்களால் தொழிற்சாலைகளிலும் வேலை செய்ய முடியும் என்பது உலகுக்கு உணர்த்தப்பட்டது. ஆண்களுக்கு நிகராகப் பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததே தவிர, ஊதியத்தில் பெண்களுக்கும் - ஆண்களுக்கும் பெரும் வித்தியாசமிருந்தது. இது பெண்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதியாகப் பார்க்கப்பட்டது. இதனால், பெண்கள் மிகுந்த வருத்தமடைந்தனர். ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைகள் வழங்கக்கோரி பெண்கள் உரிமைக் குரல் எழுப்பினர். அப்போதைய அமெரிக்க அரசு இதற்குச் செவி கொடுக்கவில்லை. இதனால், அமெரிக்கா முழுவதும் பெண் தொழிலாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட முடிவு செய்தனர். அதற்கான நாளாக 1857ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதியை முடிவுசெய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தை அரசின் ஆதரவுடன் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் ஒடுக்கினர்.
1907ஆம் ஆண்டு மீண்டும் சம உரிமை, சம ஊதியம் கேட்டு மீண்டும் பெண்கள் போராடத் தொடங்கினர். போராட்டம் வெற்றி பெறவில்லை, கேட்டால் கிடைக்காது, கேட்டுக்கொண்டு இருந்தால் மட்டுமே கிடைக்கும் என்பதை உணர்ந்த பெண் தொழிலாளர்கள் தொடர்ச்சியாகக் கோரிக்கை எழுப்பியும், அதனை நிறைவேற்ற வேண்டும் எனப் போராடியும் வந்தனர்.
1910ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டில், 'பெண்கள் உரிமை மாநாடு' நடந்தது. இதில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த உழைக்கும் பெண்களின் அமைப்புகள் கலந்துகொண்டு, தங்களது ஒற்றுமையை உலகிற்குக் காட்ட அழைப்பு விடுத்தனர். இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா, இலங்கை, ஜப்பான் போன்ற பல நாடுகளில் இருந்து பெண் பிரதிநிதிகள் இந்த மாநாட்டுக்குச் சென்றனர். இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜெர்மனி கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரே செர்கினே, மார்ச் 8ம் தேதியை மகளிர் தினமாகக் கொண்டாட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார்.
1920ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் கலந்துகொண்ட ரஷ்யாவின் அலெக்ஸ்சாண்டிரா கெலன்ரா என்கிற பெண் புரட்சியாளர், உலகத்தில் முதன்முதலாகப் பெண்களின் உரிமைக்காகப் போராட்டம் நடந்த மார்ச் 8ஆம் தேதியை உலக மகளிர் தினமாகக் கொண்டாட வேண்டும் என்று அறிவிப்பு செய்தார். அந்த அறிவிப்பை பல நாடுகளின் பெண் அமைப்புகள் ஏற்றுக்கொண்டன. இதையடுத்து, 1921ஆம் ஆண்டு முதல் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1975ஆம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.
தற்போது, உலகம் முழுவதும் பெண்களின் திறமையை மதிக்கும், ஊக்குவிக்கும் போக்கு அதிகரித்துவருகிறது. இந்தியாவில், பெண்களைக் கடவுளாக மதிக்கும் போக்கு பழங்காலம் தொட்டு இருந்து வருகிறது. தமிழகத்தில் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளனர். பெண்களுக்காகப் பெண்களே போராடும் காலம் போய் ஆண்களும் பெண்களின் உரிமைகளுக்காகப் போராடும் காலம் வந்துள்ளது. பெண்களைப் போற்றும் ஆண்கள் அனைத்து மட்டத்திலும் உயர்ந்தே உள்ளனர்.
மகளிர் தினத்தை முன்னிட்டு இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் சிவக்குமார் எழுதி நண்பர்களுக்கு அனுப்பிய பெண்களைப் போற்றும் கவிதை சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அந்த கவிதை…..
உலக மகளிர் தினம் (08.03.2021)
பூமிக்கு துணையாய்
பிறந்தவள் நீ....
எந்த சாமிக்கும் இணையாய் இருப்பவள் நீ..
உயிர்களைச் சுமக்கும்
உன்னதம் நீ....
என்றும் உன்னை நினைத்திட மறந்தவள் நீ..
மலரே இரும்பு மலரே...
துணிவே என்றும் துணையே...
உன்னால் மனித குலம்
தழைக்கும்.....
உன் அமுதால் பல உயிர்கள் பிழைக்கும்...
பெண்ணால் உலகம் பெருமை கொள்ளும்...
பல சோதனையை
உன் பொறுமை வெல்லும்......
உடலினை உருக்கி உழைப்பவளே....
இந்த உலகினை அன்பில் காப்பவளே...
எல்லா உயிர்களும்
உனை வணங்கும்....
உன் தாலாட்டு இசையில் அமைதி கொள்ளும்.....
உலகின் அழகி தாய்தானம்மா....
பெரும் உறவை வளர்ப்பது பெண்தானம்மா....
உன் காலடி படும் இடம்
பூவனமே.....
உன் கரம் படும் பொருள்களில் பூமணமே...
இந்த கவிதையைப் படித்து நெகிழ்ந்த பலர், அவரை தொடர்பு கொண்டு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.