பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் நடிகை குஷ்பு நேற்று (18.03.2021) வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார் அதில், "முதல்முறையாக தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். பெரிய அளவில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எங்களுக்கு கூட்டணி கட்சியினர் உற்சாகமான வரவேற்பை கொடுத்துள்ளார்கள். கூட்டணி வெற்றிதான் முக்கியம் என்று அனைத்து கூட்டணிக் கட்சி தோழர்களும் இங்கே வந்து எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்" என்றார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு,
சில நாட்களுக்கு முன்பு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி பாஜக தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாது என்று கருத்து தெரிவித்துள்ளார். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இது நான்கு ஐந்து நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சம்பவம். இதைப் பற்றி தற்போது கருத்து கூற எதுவுமில்லை. புதிய செய்தி ஏதாவது இருந்தால் கேளுங்கள்.
சிறுபான்மையினர் வாக்கு பாஜகவுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்களா?
ஏன் கிடைக்க கூடாது. நிச்சயமாக அவர்களின் வாக்கு முழுவதும் பாஜகவுக்கு கிடைக்கும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கோடிக்கணக்கான மக்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளார்கள். தனி மெஜாரிட்டியாக 303 நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் எங்களுக்கு கொடுத்தார்கள். அதில் சிறுபான்மையினர் வாக்குகள் இல்லையா? இது எதிர்க்கட்சிகள் பாஜக மீது தொடர்ந்து கூறும் குற்றச்சாட்டுகள். அதில் சிறிதளவு கூட உண்மையில்லை. அவர்களின் வாக்குகளும் எங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்.
திமுக உங்களுக்கு எதிராக எழிலனை நிறுத்தியுள்ளது. இதை சவாலாக பார்க்கிறீர்களா?
வாழ்க்கையில் பல சவால்களை நான் சந்தித்துள்ளேன். அதில் போராடி வெற்றியும் பெற்றுள்ளேன். எனவே இதிலும் நான் வெற்றிபெறுவேன்.
உங்களுக்கு தொகுதியில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
நான் வேட்புமனு தாக்கல் செய்தபோது எனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை பார்த்திருப்பீர்கள். மக்கள் உற்சாகமாக இருக்கிறார்கள். என்னை கண்டிப்பாக வெற்றி அடையச் செய்வார்கள். அதில் சந்தேகம் சிறிதும் இல்லை.
நீங்கள் சேப்பாக்கம் தொகுதியில் கள வேலை செய்ய ஆரம்பித்திருந்தீர்கள். அங்கே தோல்வி பயம் காரணமாகவே தற்போது இந்த தொகுதியில் நிற்கிறீர்களா?
என் அகராதியில் தோல்வி என்ற வார்த்தைக்கே இடமில்லை. நான் இங்கே கண்டிப்பாக வெற்றிபெறுவேன். எனவே இந்த கேள்வி தற்போது தேவையில்லாத ஒன்று.
அதிமுக தேர்தல் அறிக்கையில் சிஏஏ சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்கள். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அதிமுக தேர்தல் அறிக்கையில் அவ்வாறு தெரிவித்திருந்தால், அதற்கு டெல்லி பாஜக உரிய பதிலை தெரிவிக்கும். இன்னும் சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படவில்லை. எனவே தற்போது அதுபற்றி பேச வேண்டிய அவசியமில்லை.
ஆயிரம் விளக்கு திமுக கோட்டை என்று சொல்லப்படுகின்ற தொகுதி, இங்கே தற்போது களம் இறங்குகிறீர்கள். இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அப்படி என்று யார் கூறினார்கள், இது அவர்களாகவே கூறிக்கொள்ளும் கற்பிதம். ஆயிரம் விளக்கு தொகுதி திமுகவின் கோட்டை என்றால் ஸ்டாலின் எதற்காக கொளத்தூர் தொகுதிக்குச் செல்ல வேண்டும். இங்கேயே போட்டியிடலாமே? பொய் தகவல்களை அவர்கள் வேண்டுமென்றே பரப்புவார்கள். இங்கே என்னுடைய வெற்றி வாய்ப்பு என்பது பிரகாசமாக இருக்கிறது. இவர்களுடைய பொய் பிரச்சாரத்தால் அதனைத் தடுக்க முடியாது.