Skip to main content

கமல் தான் ஸ்டாலினுக்கு போட்டி!

Published on 16/11/2017 | Edited on 16/11/2017
கமல் தான் ஸ்டாலினுக்கு போட்டி!
அடித்துச் சொல்கிறார் ஜெ.வின் ஜோதிடர்

இந்தியாவில் எப்பொழுதுமே ஜோதிடமும் அரசியலும் நெருக்கம் தான். அதுவும் மத்தியில் பாஜகவும் மாநிலத்தில் அதிமுகவும் ஜோதிடர்களுக்கு இன்னும் நெருக்கம் தானே? இந்திய அளவில் புகழ் பெற்ற ஜோதிடர்களில் ஒருவரான ராதன் பண்டிட், டெல்லியில் வாழும் தமிழர். பிரதமர் மோடி, ஜெயலலிதா உட்பட பல அரசியல்வாதிகளுடனும் நெருக்கமானவராகக் கூறப்படுபவர். இவர், சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். 

அதில், "ஜெயலலிதாவுடன் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் பயணித்திருக்கிறேன், ஆலோசனைகள் வழங்கியிருக்கிறேன். அவர் மறைந்த பின் தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் உருவாகியிருக்கிறது. எதிர்க்கட்சியில் ஸ்டாலின் அரசியல் அதிர்ஷ்டம் உடையவராக இருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை. அதே நேரம் அவருக்கு எதிரில் ஒருவர் இருக்கவேண்டுமல்லவா? அந்த இடத்தில் இருக்க நடிகர் கமலுக்குத்தான் அதிக வாய்ப்புள்ளது. 

கமலுக்கு அறுபத்து மூன்று வயது கடந்துவிட்டது, சினிமாவில் வெற்றிகளைப் பார்த்துவிட்டார், உலகநாயகன் ஆகிவிட்டார். ஆனால், இன்னும் அவரது வாழ்க்கையை அவருக்கென வாழவில்லை. உண்மையான அன்பு, உறவுகள் அவருக்கில்லை. இன்னும் இருபது வருடங்களுக்கு மேல் அவர் ஆரோக்கியமாக இருப்பார். 


இப்பொழுது தான் அவரது உண்மையான வாழ்கை தொடங்குகிறது. அந்த வாழ்க்கை மக்களுக்காகத்தான் இருக்கப்போகிறது. அவரது ஜாதகப்படி அவர்  மிகச் சிறந்த நிர்வாகி. மிகுந்த புத்திசாலி, அறிவாளியான அவருக்கு, சந்திரமங்கள யோகம், குருச்சந்திர யோகம், கேந்திர வித்யா யோகம் உள்பட பல யோகங்கள் இருக்கின்றன. அவர்  சொன்னதை செய்வார், செய்வதை மட்டுமே சொல்லுவார். 

குடும்ப வாழ்க்கை சுமாரான ஜாதகம் அவருடையது. ஆனால், அரசியல் வாழ்வு மிகச் சிறப்பாக இருக்கும். முழு மூச்சில் இறங்கினால், அடுத்த தேர்தலிலேயே ஆட்சியைக் கூட பிடிக்க முடியும். அப்படி இல்லாவிட்டாலும், திமுகவிற்கு சரியான போட்டியாக, ஸ்டாலினுக்குப் போட்டியாக இருப்பார். அதற்கடுத்த தேர்தலில் ஆட்சியை பிடிப்பார். 



எம்.ஜி.ஆர் ஜாதகம் போலவே இருக்கிறது இவருடைய ஜாதகம். இன்னொரு இருபது வருடத்துக்கு நல்ல அரசியல் எதிர்காலம் உள்ளவர். அரசியலுக்கு பணம் எங்கிருந்து வரும் என்று பலர் கேட்கிறார்கள். இவருக்கு  உலக அளவில் ஆதரவு கிடைக்கும், வெளிநாடுகளில் இருந்து சரியான வழியில்  பொருளாதார உதவி கிடைக்கும்" என்று கூறியுள்ளார்.

கமல் தன் பிறந்த நாளன்று அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டார். அதற்கு முன்பே இந்த வீடியோ வெளியாகியிருக்கிறது. இவர் கூறியிருப்பது போல, கமல் அரசியலில் இறங்குவது உறுதியாகியிருப்பதால்,  அவரது அரசியல் எதிர்காலத்தை பற்றிய இவரது கணிப்பும்  சரியாக இருக்குமோ என்பதை  காலம் தான் சொல்ல வேண்டும்.


சார்ந்த செய்திகள்