முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி பரபரப்பை ஏற்படுத்திய காயத்ரி தேவியுடன் ஒரு நேர்காணல்...
என்னுடைய பூர்வீகம் காரைக்குடி. திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறேன். எனக்கு விவாகரத்து ஆகிவிட்டது. ரவீந்திரநாத்தின் மனைவி மற்றும் சகோதரியுடன் எனக்கு நட்பு உண்டு. அதன் மூலம்தான் ஓபிஎஸ் குடும்பத்தினருடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. ரவீந்திரநாத் எனக்கு அடிக்கடி போன் செய்து நலம் விசாரிப்பார். சமீபத்தில் அவருடைய பேச்சில் மாற்றம் தெரிந்தது. பாலியல் ரீதியாக அவர் பேச ஆரம்பித்ததும், அதை அவருடைய மனைவியிடம் நான் தெரிவித்தேன். அதற்கு முன்பு அவருடைய போனிலிருந்து அழைத்து அவருடைய ஆசையை மற்றவர்கள் என்னிடம் கூறினர்.
இதுபோல் இனி கால் வராது என ரவீந்திரநாத்தின் மனைவி மற்றும் ஓபிஎஸ் அண்ணன் ஆகியோர் உறுதியளித்தனர். ஓபிஎஸ் மிகவும் வருத்தப்பட்டார். ஏப்ரல் மாதம் ஒருநாள் இரவு ரவீந்திரநாத் எனக்கு போன் செய்தார். நீண்ட நேரம் நன்றாகவே பேசிக்கொண்டிருந்தார். திடீரென்று "உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும். ஐ லவ் யூ" என்றார். "உங்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். இப்படியெல்லாம் பேச வேண்டாம்" என்றேன். நான் சொல்வதை அவர் கேட்கவில்லை. "உன்னை நான் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். இப்போதே வண்டி அனுப்புகிறேன்" என்றார். எனக்கு விருப்பமில்லை என்பதை நான் தெரிவித்தேன்.
அதன் பிறகு அவர் ஆபாசமாகப் பேச ஆரம்பித்தார். குடிபோதையில் பேசுபவர் போல் அவருடைய பேச்சு இருந்தது. அடுத்த நாள் எழுந்து பார்த்தால் அவரிடமிருந்து ஏகப்பட்ட மிஸ்டு கால்கள் இருந்தன. என்னிடம் அவர் கெஞ்சவே ஆரம்பித்துவிட்டார். இவை அனைத்தையும் அவருடைய குடும்பத்தினரிடம் நான் தெரிவித்துவிட்டேன். அவரைத் திருத்தும் இடத்தில் ஓபிஎஸ் இல்லை. ரவீந்திரநாத்தும் திருந்துவதாக இல்லை. தன்னுடைய தவறை அவர் உணரவே இல்லை. அவருடைய நண்பர்கள் மூலம் எனக்கு மிரட்டல்களும் வந்தன. அதன் பிறகுதான் புகார் கொடுக்க நான் முடிவு செய்தேன்.
எதற்காக நான் புகார் கொடுத்தேன் என்று ரவீந்திரநாத்தின் மனைவி என்னிடம் கேட்டார். அவர்கள் யாரும் நடவடிக்கை எடுக்காததால் தான் நான் போலீசில் புகார் கொடுத்தேன். புகார் கொடுத்த பிறகு ரவீந்திரநாத்திடம் இருந்து எனக்கு கால் வந்தது. ஆனால் நான் எடுக்கவில்லை. கோடநாடு வழக்கு குறித்து ஓபிஎஸ் போராட்டம் நடத்தியதற்கும், அதே நாளில் நான் போலீசில் புகார் கொடுத்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எதார்த்தமாக நடந்ததுதான் அது. இதற்குப் பின்னால் யாரும் இல்லை. என்னுடைய புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ரவீந்திரநாத்துக்கு நிச்சயம் தண்டனை வழங்க வேண்டும்.
காயத்திரி தேவியின் முழுமையான நேர்காணலை வீடியோவாக காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்...