இன்றைய தேதியில் தொடக்கக் கல்வி பயிலும் ஒரு சிறுவனிடம், மயிலிறகை புத்தகத்தில் வைத்து தீனி போட்டால் குட்டி போடும் என்றோ! பென்சில் சீவிய துகள்களை சாதம் வடித்த நீரில் போட்டால் அது ரப்பராக மாறிவிடும் என்றோ கூறினால் அவன் நம்மை ஒரு வளர்ந்த முட்டாளாகவே பார்ப்பான், சத்தமாகச் சிரித்து கேலி செய்தால் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஆனால் இவற்றையெல்லாம் உண்மை என்று நம்பிய சிறுவர்களாக நாம் இருந்தோம் என்பது இன்றும் வியப்பாகத்தான் இருக்கிறது.
#90s kids rumours இப்படி ஒரு ஹேஷ்டாக் சில வாரங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கின் உச்சத்தில் இருந்தது, லட்சக்கணக்கானோர் இந்த ஹேஷ்டேகை பகிர்ந்தும் இருந்தனர். இப்படி சமூக வலைத்தளங்களில் நாம் தவிர்க்கவே முடியாத ஒரு வார்த்தைதான் "90kids." இது அந்தக் காலகட்டதைச் சேர்ந்தவர்களுக்கு பெருமையாகவும் மற்றவர்களுக்கு எரிச்சலை தருவதாகவும் இருக்கலாம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைத்தளங்களில் நீர்த்துப் போகாமல் இருக்கும் ஒரு வார்த்தை 90s Kids என்றால் அது மிகையாகாது.
யார் இந்த 90s Kids கள்:
1980களின் இறுதியில் பிறந்து 90களில் வளர்ந்தவர்களும், 90களின் ஆரம்பத்தில் பிறந்து அந்தக் காலகட்டத்தில் தங்களின் பள்ளிப் பருவத்தில் இருந்தவர்களும், 2000ங்களில் தங்கள் பதின் பருவத்தில் இருந்தவர்களுமே 90kids ஆகப் பாவிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் ஒரு விதத்தில் சிறப்பு வாய்ந்தவர்கள் ஏனென்றால் ஒரு நூற்றாண்டின் இறுதியை குழந்தைத் தன்மையோடு கடந்து வந்தவர்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் 1999 என்ற ஆண்டின் இறுதி நாட்களை சுவாசித்தவர்கள். இரவும் விடியலும் சங்கமிக்கும் நேரம் போல அவர்கள் பழமையும் புதுமையும் மைய்யல் கொண்ட காலங்களை ரசித்தவர்கள், தொன்மை கலந்திருந்த அந்த நாட்களின் நிகழ்கால சாட்சியங்கள்தான் இந்த 90s Kids.
90s Kids அப்படி எந்த வகையில் பாக்கியம் செய்தவர்கள்:
1990களின் இறுதியில் தான் தொழில்நுட்பம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வளர்ச்சி கண்டது அப்படி இருக்க எல்லா தொழில்நுட்பப் புதுமைகளின் முதல் பயனாளர்கள் 90s Kids தான். உதாரணத்திற்கு தொலைக்காட்சி, செல்போன், ஸ்மார்ட் போன், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள், பேஸ்புக் வாட்ஸ் அப் இப்படி இன்னும் பல.
90களின் மத்தியில் தான் உலகமயமாதல் தாராளமயமாதல் போன்ற பொருளாதாரக் கொள்கைகள் இந்தியாவில் பரவியது. அதன் விளைவாக தொழில் வளர்ச்சி என்ற பெயரில் கார்பரேட்கள் நிறுவனங்கள் புகுந்து நமது கலாச்சாரம் முதற்கொண்டு அத்தனையையும் மாற்றியது. எனவே அவர்கள் வளர்ந்த ஒவ்வொரு நாளிலும் புதுமைகள் இருந்து கொண்டே இருந்தது. அந்தப் புதுமைகளை அவர்கள் எளிதாகப் பயன்படுத்தும் காலத்தில், திரும்பிப் பார்க்கும் போது அவர்களின் குழந்தைப் பருவத்தின் பழமைகள் கொஞ்சம் கொஞ்சமாக தொலைந்து போயிருந்தன. அந்தப் பழமையில்தான் இயற்கை இருந்தது ஆரோக்கியம் இருந்தது அன்பு இருந்தது.
மாலை முழுதும் வியர்வை நனைக்க விளையாடினார்கள் இன்றோ ஆண்ட்ராய்டு போன்கள் நேரத்தை விழுங்குகிறது. விடுமுறை நாட்களை தாத்தா பாட்டிகளின் வீடுகளில் கழித்தார்கள் இன்றோ மால்களுக்கும் தியேட்டர்களுக்கும் படையெடுக்கிறார்கள். ஆசிரியர்களுக்கும் பெரியவர்களுக்கும் மரியாதை கொடுத்து வளர்ந்தார்கள் இன்றைய குழந்தைகளின் நிலை வேறு. கூகுள்களின் இடத்தை புத்தகங்கள் நிறைந்திருந்தன. முகநூலில் முகம் தெரியாத நண்பர்களாக இல்லாமல் விடுமுறையை ஊர் சுற்றிக் கழிக்க பெரும் நண்பர் பட்டாளம் இருந்தது.
குடும்பத்துடனும் உறவினர்களுடனும் அதிக நேரங்களை செலவிடார்கள். நிலாச் சோறு, கூட்டாஞ்சோறு என மனித உறவுகளுக்கு அப்போது அதிக நேரம் இருந்தது. காதல் புனிதமாகவும், திருமணம் கட்டுப்பாடுகள் நிறைந்ததாகவும் இருந்தது அதனால் உறவுச் சிக்கல்கள் அதிகம் இல்லை. கால ஓட்டத்தில் நடந்த சடுதி மாற்றத்தில், தொழில்நுட்பத்தால் முற்றொழிக்ககப்பட்டது அந்த பழமை மட்டும் இல்லை, இயற்கையும் ஆரோக்கியமும், அன்பும் சேர்த்துதான்.
அப்படி அவர்கள் இழந்தவை சில:
கட்டிடங்களும் தார் சாலைகளும் நிறைந்த பின்பு அவர்கள் மழைக்காலகால மண்வாசனையை இழந்திருந்தார்கள். விவசாய நிலங்கள் கட்டுமனைகளாக மாற்றப்பட்ட போது அவர்கள் இழந்தது விவசாயத்தை மட்டுமில்லை நாற்று நடும் பெண்களின் நாட்டுப்புற பாடலையும்தான். சினிமா தியேட்டகளும் மால்களும் வந்த பின்னர் தெருக்கூத்தையும், கரகாட்டத்தையும் ஒயிலாட்டத்தையும் இழந்திருந்தார்கள்.
இன்று பன்னாட்டு நிறுவனங்களின் இனிப்புகளையும் சிற்றுண்டிகளையும் கொரித்துக் கொண்டிக்கும் அவர்கள் பள்ளி இடைவேளையில் பள்ளிக்கு வெளியே வாங்கி சுவைத்த இலந்தை மிட்டாயையும் கடலை மிட்டாயையும் மற்றும் இழந்திருக்கவில்லை அதை விற்ற ஆத்தா, தாத்தாக்களின் அன்பையும்தான். அவர்களின் கண் முன்னேதான் அமிர்தம் வழிந்தோடிய ஆறுகள் சாக்கடைகளாக மாற்றப்பட்டிருக்கலாம், நீச்சல் பழகிய குளங்கள் இருந்த இடத்தில் இன்று திருமண மண்டபமோ அரசாங்க கட்டிடமோ கூட இருக்கலாம்.
நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த விளையாடியவர்கள் இன்று ஆன்ட்ராய்டு போனில் பப்ஜி விளையாடுகின்றனர். பல்லாங்குழிகள் கேன்டிகிரஷாக மாறிப் போனது இரட்டைச்சடை ரிப்பன்கள் லூஸ் ஹேர் கலாச்சாரத்தை வந்தடைந்தது. பாவாடை தாவணிகள் லெக்கின்ஸாக உருமாற்றம் அடைந்தது. கணிணியை அதிசயமாகப் பார்த்தவர்கள் இன்று மடிக்கணினியை அலுத்துக் கொண்டு மூடுகின்றனர். எட்டாதக் கனியாக இருந்த இன்னும் எத்தனையோ தொழில்நுட்பங்களை இன்று ஆசை தீர உபயோகிக்கின்றனர். புதுமையையும் தொழில்நுட்பத்தையும் இன்று அனுபவித்தாலும், மனதில் பசுமரத்து ஆணிபோல நிலைத்திருக்கும் இழந்த அந்தப் பழமையின் நினைவுகளில் உழன்று தங்கள் கழிவிரக்கத்தை சமூக வலைத்தளங்களில் கொட்டுகின்றனர். அவை 90s kids நினைவுகளாக சேகரமாகின்றன..ஒருவிதத்தில் எதிர்வரும் தலைமுறையினரின் இணைய அருங்காட்சியகமாக ஆவணப்படுத்தும் நிகழ்வுதான் இது
80s மற்றும் 2k kids:
என்பதுகளில் குழந்தையாக இருந்தவர்களும் தங்கள் பங்கிற்கு 80s kids என்று வைரலாக்க முயற்சித்தாலும் குடும்பத் தலைவர்களாக மாறிவிட்ட அவர்களால் 90s kidsக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. அவர்களுக்கும் தொழில்நுட்பத்திற்கும் ஒரு சீரான இடைவெளி இருப்பதாலும் அவர்களால் சோபிக்க முடியவில்லை. தொழில்நுட்பத்தின் அத்தனை கூறுகளும் வாய்க்கப் பெற்று ஒரு Virtual உலகத்தில் வசிக்கும் 2k kids, வளரும் முறையிலேயே பெரிய அளவில் மாற்றம் இருக்கிறது இதைக் கலாச்சார மாற்றம் என்று அறிஞர்கள் விளக்குகிறார்கள்.அதனாலேயே 90ஸ் கிட்ஸ் க்கும் 2K கிட்ஸ்க்கும் ஒரு ஆரோக்கியமான போட்டி ஒன்றும் நிலவுகிறது. அது ஒரு விதத்தில் இளையோரை வழிநடத்தும் போக்காகக் கூட எடுத்துக் கொள்ளலாம்.
இப்படி 90ஸ் கிட்ஸ் என்பவர்களை கலாச்சார வளர்ச்சியில் ஒரு திருப்பு முனையாகவோ, காலக்ககோட்டில் சற்று தடித்த கோடாகவோ பார்க்கலாம். அவர்களின் உளவியல் என்பது கட்டுப்பாடு, இயற்கை, அன்பு, மற்றும் அறம் ஆகியவற்றை தங்கள் எல்லைகளாகக் கொண்டது. அது சமூக மற்றும் கலாச்சார மாற்றங்களில் குறிப்பிடத்தக்க விளைவை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே 90ஸ் கிட்ஸ் அனைவரும் மற்ற அனைவரையும் விட சற்று அதிகமாக ஆசிர்வதிக்கப்பட்டவர்களே!!
எழுத்தாக்கம் - கார்த்திக் கண்ணன்