Skip to main content

"இப்படி ஒரு மனிதரை இனி இந்த பூமி பார்க்குமா?" -மனிதன் என்பவன் தெய்வமாகலாம்!

Published on 21/12/2020 | Edited on 21/12/2020
Shanthi Social Services - Subramanian - coimbatore -

 

அம்மா... எனக்கு வேலைக்கு டைம் ஆயிருச்சு . நீ கஷ்டப்பட்டு அவசரமா சமைக்க வேணாம். நான் அப்படியே போற வழியில "சாந்தி கியர்ஸ்' ஷாப்ல இட்லியோ , உப்புமாவோ சாப்பிட்டு வேலைக்கு போயிர்றேன். ரெண்டு இட்லியே 5 ரூபாய்தானே...'' என்ற குரல்கள் கோவையில் காலை நேரத்தில் சகஜம்.

 

""மாப்ளே, மதியம் சாப்பாட்டு டைம்ல சாந்தி கியர்ஸ்க்கு போயி 30 ரூபாய்க்கு புல் சாப்பாடு சாப்பிட்டுக்கலாம்டா'' என பலரின் குரல்கள் இயல்பாக கேட்கும். இரவு நேரத்தில் குடும்பத்தினர் பலரும் சாந்தி கியர்ஸ் போகலாம் என்பார்கள்.

 

""சாப்பாடு மட்டுமல்ல, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கணும்னா 3000 ரூபாய்க்கு குறையாது. சாந்தி கியர்ஸ் போனா 500 ரூபாய் தான். மருந்து -மாத்திரைகளும் நியாயமான விலையில் அங்கேயே வாங்கிடலாம்'' என கோவை சிங்காநல்லூரில் இருக்கும் "சாந்தி கியர்ஸ்' சோஷியல் சர்வீஸ் கம்பெனி பற்றிப் பேசாத அந்தப் பகுதி மக்களே கிடையாது. அதற்கு காரணம், "சாந்தி கியர்ஸ்' முன்னாள் உரிமையாளரும், "சாந்தி சோசியல் சர்வீஸ்' அறங்காவலருமான சுப்பிரமணியம். உடல்நலக் குறைவால் டிசம்பர் 11 அன்று 78 வயதில் காலமானார்.

 

இவரது இறப்பு செய்தியை அறிந்த கோவை மக்கள் பெருந்திரளாய் திரண்டுவிட்டனர்.

 

பட்டணம் பகுதியைக் சேர்ந்த பெருமாள்சாமி நம்மிடம் ""எப்படிப்பட்ட மனிதருங்க அவரு. ஒரு தனியார் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய அவர், 1972-ல் ஒரே ஒரு லேத் இயந்திரத்தை வைத்து கியர் வீல்கள் தயாரிக்க ஆரம்பித்தார். ஆரம்ப கால கட்டத்தில் ஜவுளி இயந்திரங்களுக்கு உதிரிப்பாகங்கள் தயாரித்தவர், அதற்குப் பிறகு அவரின் கடுமையான உழைப்பால் தொழிலை விரிவாக்கம் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவந்தார். "இஸ்ரோ' நிறுவனத்திற்கும் இவரது தயாரிப்புகள் கொடுக்கப்பட்டன .

 

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு "சாந்தி கியர்ஸ்' கம்பெனியை விற்கவேண்டிய நிலை வந்தாலும், பொதுமக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் 1996-ம் ஆண்டு "சாந்தி சோசியல் சர்வீஸ்' என்ற அமைப்பினைத் துவங்கினார் சுப்பிரமணியம். இந்த அமைப்பின் மூலம் லாப நோக்கமின்றி சேவை மனப்பான்மையுடன் உணவகம், மருத்துவமனை, மருந்தகத்தை அந்த வளாகத்தில் அமைத்தார். 60 வயதுக்கு மேற்பட்ட 300 பேருக்கு தினமும் இலவச உணவை வழங்கினார் சுப்பிர மணியம். அவருடைய அறக்கட்டளையில் மருத்துவர் கட்டணம் வெறும் 30 ரூபாய், மருந்துகளுக்கு 30 சதவீதம் தள்ளுபடி என பல்வேறு சலுகைகள் கொடுக்கப்பட்டதால், எப்போதும் மக்கள் கூட்டமாகவே காணப்படும் அந்த வளாகம்.

 

Shanthi Social Services - Subramanian - coimbatore -

அவர் நடத்தும் பெட்ரோல் பங்க்கில், ஸ்டாக் வரும்போது என்ன விலையோ , அதே விலைதான் அந்த ஸ்டாக் முடியும் வரை விற்பனை செய்யப்படும். அதனால் அங்கே கூட்டம் அதிகமாக இருக்கும். இலவச மின் மயானம் ஒன்றையும் அமைத்தார் சுப்பிரமணியம். பள்ளிக் கூடங்கள் கட்டிக்கொடுத்தார். படிக்கவரும் குழந்தைகளுக்கு காலையில் இலவசமாய் பாலும், வேர்க்கடலையும் இலவசமாய் ஸ்கூல் ட்ரெஸ்சும் கொடுத்தார்.

 

ஓர் அரசாங்கம் செய்ய வேண்டியதை செய்துகாட்டியவர். அம்மா உணவகத்துக்கு முன்னோடியாக இருந்தவர். இவ்வளவு செய்தும், மனிதர் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளவே மாட்டார். தன் முகம் வெளியே தெரியக்கூடாது என்பதிலும் பிடிப்போடு இருந்தார்.

 

சில சமயங்களில் உணவுக்காக வரிசையில் நிற்கும் மக்களோடு மக்களாக நின்று கொள்வார். உணவின் தரத்தையும் வழங்கும் முறையையும் பரிசோதிக்கும் முறை அது. அப்படிப்பட்ட மனிதரின் இறப்பு யாராலும் தாங்கிக் கொள்ள முடியாதது. "தான் இறக்க நேரிட்டாலும், உணவகம் உள்ளிட்ட எதற்கும் விடுமுறை அளிக் கக் கூடாது. என் மரணம் எந்த மனிதனையும் பசியோடு வைத்திருக்கக்கூடாது . ஊழியர்கள் தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருக்கவேண்டும்' எனச் சொல்லித்தான் உயிரையே விட்டிருக்கிறார்.

 

"இப்படி ஒரு மனிதரை இனி இந்த பூமி பார்க்குமா என்பது சந்தேகம்தான்' என கண்ணீர் ததும்பச் சொல்லுகிறார் பெருமாள்சாமி. "உப்பிட்டவரை உள்ளளவும் நினை' எனக் சொல்லியது போலவே, ஆயிரக்கணக்கான மக்கள் சுப்பிரமணியம் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் கண்ணீரோடு கலந்துகொண்டனர்.

 

"ஒரு மனிதன் எப்படியான வாழ்வை வாழ்ந்தான் என்பதை அவன் மரணமே சொல்லும்' என்பதை கண்களில் நீர் ததும்ப நின்று பார்த்துக்கொண்டிருந்தனர் சுப்பிரமணியம் அவர்களின் மூன்று மகள்களும்.

 

 

 

சார்ந்த செய்திகள்