Skip to main content

“உங்களுக்கெல்லாம் கேவலமாக இல்லையா; அடுத்தவன் ஓட்ட நீங்களே போட்டு ஜெயிக்கிறதுக்கு பேரு வெற்றியா...?” - சீமான் கேள்வி

Published on 06/12/2022 | Edited on 07/12/2022

 

ிுப

 

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவரிடம் நடப்பு அரசியல் தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, " குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்ற கருத்துக் கணிப்புக்கு என்ன பதில் சொல்வது, இது ஒரு வெற்றியா? கேவலமாக இல்லையா, இதற்கு எங்கேயாவது தொங்கி விடலாம். வாக்களிக்க வருகிறவனைத் தூரத்திலேயே நிறுத்தி வைத்துவிட்டு நீங்களே வாக்குகளைப் போட்டுக்கொள்வதுதான் மெகா வெற்றியா? இந்த மாதிரி தேர்தல் நடத்தினால் 8 முறை அல்ல 80 முறை கூட யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம். இதில் பெரிய மக்கள் செல்வாக்கு இருக்கிறதா? 

 

இன்றைக்கு அம்பேத்கருக்கு பாஜக உரிமை கொண்டாடுகிறார்கள். இவர்களுக்கும் அம்பேத்கருக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? இருக்கிறது என்றால் அவர்களை ஒன்றையாது சொல்லச் சொல்லுங்கள். இன்றைக்கு பட்டேலுக்கு 3 ஆயிரம் கோடிக்கு குஜராத்தில் சிலை வைத்துள்ளார்கள். பட்டேல் அவ்வளவு பெரிய தலைவரா? இந்த இந்தியாவைத் தாண்டினால் வேறு யாருக்காவது அவரை தெரியுமா? காந்தி, அப்பேத்காரை விட இவர் பெரிய தலைவரா? நீங்கள் யாரை ஏமாற்ற தற்போது அம்பேத்கரை கையில் எடுத்துள்ளீர்கள் என்று அனைவருக்கும் தெரியும். குஜராத் மட்டும்தான் இந்தியா என்று நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்காதீர்கள். அந்த உலகத்திலிருந்து மீண்டு வாருங்கள் இல்லை என்றாலும் மக்கள் அதை உங்களுக்குப் புரிய வைப்பார்கள்.

 

தமிழகத்தில் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் தமிழகம் வருகிறார்கள். இவர்களைப் பற்றிய முறையான தகவல்களைத் தமிழக அரசு சேகரிக்க வேண்டும். அவர்களுக்கு எக்காரணத்தை முன்னிட்டும் வாக்குரிமை வழங்கக்கூடாது. ரேஷன் கார்டு கூட கொடுங்கள் சாப்பிட்டுவிட்டுப் போகட்டும். அதனால் எந்த பாதிப்பும் வரப்போவதில்லை. ஆனால் ஒருபோதும் வாக்குரிமை வழங்கக்கூடாது. அவர்களுக்கு வாக்குரிமை வழங்கினால் ஈழத்தில் தமிழர்களுக்கு என்ன நடைபெற்றதோ அதுதான் நமக்கும் நடைபெறும். இதனை ஒருபோதும் நாம் அனுமதிக்கக்கூடாது. இது நம் எதிர்காலத்தோடு விளையாடுவதைப் போல் ஆகிவிடும். இதில் நாம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 

 

இல்லை என்றால் இவர்கள் வாக்களிக்கும் நபர்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்லும் நிலைக்கு நாடு சென்றுவிடும். அதைத் தவிர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி நிலைப்பாடு என்பது ஏற்கனவே கூறியது போலத்தான், 40 தொகுதிகளில் நேரடி போட்டியில் ஈடுபடும், 20 ஆண் வேட்பாளர்கள் 20 பெண் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளார்கள். நாங்கள் தனித்தே தேர்தலை எதிர்கொள்வோம். இதில் எந்த சந்தேகமும் யாருக்கும் எழத் தேவையில்லை. எங்களைப் புறக்கணித்தவர்கள் எல்லாம் எங்களை நோக்கி வரும் சூழலைத் தேர்தல் முடிவுகள் நிச்சயம் ஏற்படுத்தும். தமிழகத்தில் அசைக்க முடியாத சக்தியாக நிச்சயம் நாம் தமிழர் கட்சி மாறும் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். 

 

குறிப்பாக நாம் தமிழர் கட்சியோ நானோ ஒருவரை ஆதரிக்கிறேன் என்பதற்காக அவர்களின் அனைத்து கருத்துக்களையும் செயல்களையும் ஏற்றுக்கொண்டேன் என்று அர்த்தப்படுத்திக்கொள்ளக் கூடாது. ஒவ்வொருவருக்கும் தனித்தனி கருத்துக்கள் இருக்கும், கோட்பாடுகள் இருக்கும், யாரையும் நாங்கள் கூறுவதுதான் சரி என்று கட்டாயப்படுத்தக் கூடாது. நம்மையும் யாரும் கட்டப்படுத்த முடியாது. எனவே சம்பவங்கள் அடிப்படையில் நாம் யாரையும் அடையாளப்படுத்த முடியாது. நமக்குத் தவறு என்று படும் விஷயங்களில் நான் கருத்துச் சொல்கிறேன். அதில் மற்றவர்களுக்கு மாற்றுக்கருத்து கூட இருக்கலாம். ஆனால் அதை நீங்கள் பேசவே கூடாது என்பது தவறான முன் உதாரணமாகிவிடும்" என்றார்.