Skip to main content

இதுனாலதான் இரண்டு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என்று சொன்னாரா ?

Published on 28/03/2019 | Edited on 28/03/2019

கொங்கு மண்டலத்தின் பல்ஸைக் காட்டக் கூடிய கரூர் எம்.பி. தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் சிட்டிங் எம்.பி. தம்பிதுரையும், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணியும், அ.ம.மு.க. தங்கவேலும் போட்டியிடுகின்றனர். இவர்கள் மூவரும் ஒரே குலதெய்வத்தை வணங்கும் பங்காளிகள்.

துணை சபா தம்பிதுரை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பே கரூர் உள்ளடக்கிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் கலெக்டர், அதிகாரிகள் படைபலத்தோடு 40 முறைக்குமேல் வலம்வந்து மக்களிடம் குறைகேட்டார். பல இடங்களில் மக்கள் மறித்தும், ஆத்திரம் காட்டியும்கூட தனது பயணத்தை நிறுத்தவில்லை. செல்லும் இடங்களிலெல்லாம் "மத்திய அரசுதான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம்' எனவும் பேசிக்கொண்டிருந்தார். 

 

jothimani



இப்போது அதே மத்திய அரசுக்கு ஆதரவாகப் பேசி தம்பிதுரை ஓட்டுக் கேட்பதை அ.தி.மு.க.வினரே ரசிக்கவில்லை. இதற்கிடையே சுகாதாரத்துறை அமைச்சரின் தந்தையும், அ.தி.மு.க. சீனியருமான சின்னசாமி கரூரில் போட்டியிட விருப்ப மனு அளித்ததில் தம்பிதுரை அதிருப்தியில் இருக்கிறார். இருந்தாலும் சென்ற தேர்தலைப் போலவே வைட்டமின் "ப'வை வாரி இறைத்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கை பலமாக உள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கரூர் சட்டமன்றம், நாடாளுமன்றம் என இரண்டு தேர்தல்களில் போட்டியிட்டும் தோல்வியைத் தழுவியவர். இந்தமுறையும் அவருக்கே வாய்ப்பு கொடுக்கப்பட்டிருப்பதை காங்கிரஸில் இருக்கும் சில கோஷ்டிகள் விரும்பவில்லை. பேங்க் சுப்பிரமணியன் தரப்பு எதிர்த்தது. முன்னாள் எம்.எல்.ஏ. ராமநாதன் தரப்பு எதிர்ப்புத் தீர்மானம் போட்டது. அதற்கு ஒருபடி மேலே போன மாநில விவசாயிகள் அணி செயலாளர் ஜெயப்பிரகாஷ், "ஜோதிமணி தனது சொந்த கிராமமான பெரிய திருமங்கலத்திலேயே ஏழு ஓட்டுகள்தான் வாங்கினார். அவரை வேட்பாளராக்கியது தவறு' எனக் கூறி தனது ஆதரவார்களுடன் அ.தி.மு.க.வில் இணைந்துவிட்டார். ஆனாலும் ராகுலின் நேரடி பரிந்துரையில் கரூர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார் ஜோதிமணி.

 

senthil balaji



சென்றமுறை தம்பிதுரையின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக செயல்பட்ட செந்தில் பாலாஜி, இந்தமுறை தி.மு.க. கூட்டணிக்காக 90% வேலைகளை முடித்துவிட்டார். வாரம் ஒருமுறை கட்சியின் ரிவியூவ் கூட்டம், வார்டுக்கு எத்தனை ஓட்டு என்கிற கணக்கெடுத்து, 10 ஓட்டுக்கு இரண்டுபேர் வீதம் ஓட்டுகளை கேன்வாஸ் செய்த விவரங்களை ஒரு நோட்டில் குறித்துக் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். செயல்வீரர்கள் கூட்டங்களை செந்தில்பாலாஜி தொடர்ச்சியாக நடத்திவருகிறார். இதன் அடிப்படையில்தான் வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு வரும்போது, "2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்'’என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் ஜோதிமணி. 
 

அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் மா.செ. தங்கவேலு, செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர்' என்கிறார்கள் பழைய கட்சிக்காரர்கள்.