‘தேர்தல் பிரச்சாரங்கள், விளம்பரங்கள் மற்றும் பரப்புரைகளில், தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், ராணுவத் தலைமை அதிகாரிகள் அல்லது வீரர்களின் படங்கள் மற்றும் ராணுவ விழாக்களின் படங்கள் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. அனைத்துக் கட்சியினரும், அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் இதைப் பின்பற்ற வேண்டும்.’ என உத்தரவிட்டிருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம்.
அதிரடியாகப் பேசுபவராகத் தொடர்ந்து தன்னை வெளிப்படுத்திவரும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், பிரதமரின் சாதனையாக விமானப்படை வீரர் அபிநந்தன் குறித்தும், புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி தந்தது குறித்தும் பேசியிருக்கிறார். தனிப்பட்ட முறையிலும் வேட்பாளர்களை விமர்சிக்கக் கூடாது என்பது தேர்தல் விதிமுறை. கே.டி.ராஜேந்திரபாலாஜியோ, “மாணிக்கம் தாகூர் என்று ஏன் பெயர் வைத்திருக்கிறார்? வடநாட்டுப் பெயரை வைத்திருக்கும் அவர் உத்தரப்பிரதேசத்தில் போட்டியிட வேண்டியதுதானே?” என்று கேட்கிறார். அதேபோல், விருதுநகர் பாராளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் பரமசிவ ஐயப்பனையும், கந்துவட்டிக்காரரான அவருக்கு வாக்களிக்காதீர்கள் என்று பிரச்சாரத்தின்போது பேசிவருகிறார்.
அமைச்சரின் இந்தப் பேச்சு தேர்தல் விதிமீறல் அல்லவா? ஆளும் கட்சியினரின் கைப்பாவையாகச் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் இந்தியத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா? என்பது தேர்தல் களத்தில் எழுந்திருக்கும் பொதுவான கேள்வியாக உள்ளது.