அமேதியில் வழக்கமாக போட்டியிடும் ராகுல் காந்தி இந்தமுறை கேரளா மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்தது. இந்த அறிவிப்பு பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
அமேதியில் தோல்வி பயத்தால்தான் ராகுல் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார் என்று பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்தார். இடதுசாரிகளுடன் மோதல் போக்கை வெளிபடுத்தவே ராகுல் கேரளாவில் போட்டியிடுகிறார் என்று சிபிஎம் மூத்த தலைவர் பிரகாஷ் காரத்தும் கருத்து தெரிவித்துள்ளனர்.
கேரளா மாநில காங்கிரஸ் தலைவர்கள் விருப்பத்திற்காகவே வயநாடு தொகுதியில் போட்டியிடுவதாக கூறிய ராகுல், மோடி ஏன் சொந்த மாநிலமான குஜராத்தில் போட்டியிடாமல் வாரணாசியில் போட்டியிடுகிறார் என்று வினா எழுப்பி இருக்கிறார்.
மோடி 2014 தேர்தலில் குஜராத் மாநிலம் வதோதராவிலும், உ.பி.மாநிலம் வாரணாசியிலும் போட்டியிட்டதை பாஜக மறந்துவிட்டு பேசியிருப்பதை யாரும் சுட்டிக்காட்டவில்லை. அப்போது, மோடி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டபோது இதுபோன்ற விவாதம் நடைபெற்றது. சொந்த மாநிலத்தில் தோல்வி பயம் காரணமாகவே மோடி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக அப்போது கூறினார்கள்.
மேலும், இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெற்றால் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டுமே, அது வீண் செலவுதானே என்று பிரச்சாரம் செய்தார்கள். அதற்கு பதிலளித்த பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், மோடி இரண்டு தொகுதிகளிலும் உறுப்பினராக தொடரும் வகையில் அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவோம் என்றுகூட பேசினார். பாஜக முழுமையான பெரும்பான்மையோடு வெற்றிபெற்றால் இத்தகைய திருத்தம் கொண்டுவரப்படும் என்று நா கூசாமல் பேசினார்.
அதாவது கிரிக்கெட்டில் பல புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்படுவதைப் போல, நாடாளுமன்றத்திலும் இது சாத்தியப்படும். இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு ஜெயித்தால் ஏதேனும் ஒருதொகுதியை ராஜினாமா செய்ய வேண்டியது கட்டாயமில்லை என்று சட்டமியற்றுவதில் தவறில்லை என்றும் அவர் கூறினார்.
இப்படியெல்லாம் கூறிய ராஜ்நாத் சிங் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தும் அத்தகைய சட்டத்திருத்தத்தை கொண்டுவரவே இல்லை.
இப்படியெல்லாம் பேசிய பாஜகவும் மோடியும்தான் இப்போது ராகுல் காந்தி இரண்டாவது தொகுதியில் போட்டியிட முடிவெடுத்தவுடன் பதற்றப்படுகிறது. தனது பதற்றத்தை மறைக்கவே ராகுலை கிண்டல் செய்கிறது.
ராகுல் கேரளாவில் போட்டியிடுவதால் தெற்கில் உள்ள நான்கு மாநிலங்களில் காங்கிரஸார் உற்சாகமாக வேலை செய்வார்கள் என்பதே பாஜகவின் பதற்றத்துக்கு காரணம். குறிப்பாக பிரதமர் வேட்பாளர் தெற்கில் போட்டியிட்டு ஜெயிப்பது நல்ல வரவேற்பை பெறும் என்ற கருத்தே நிலவுகிறது.
கடைசியாக ஒன்று சொல்ல வேண்டியது அவசியம்…
மோடியும், ராகுலும் மட்டும் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்ல. நெருக்கடி நிலைக்கு பிறகு பதவியேற்ற ஜனதா அரசு குறுகிய காலத்தில் கவிழ்ந்தது. அதைத்தொடர்ந்து வந்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளரான இந்திரா காந்தியும் உத்தரப்பிரதேசத்தில் ரேபரேலி தொகுதி மற்றும் ஆந்திராவில் மேடக் தொகுதியில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.