"நான் அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன்' என சசிகலா அறிவித்தாலும், அவர் உண்மையிலேயே ஒதுங்குகிறாரா? அல்லது பாய்வதற்காகப் பதுங்குகிறாரா? என்பது புரியாமல் இருக்கிறார்கள் தமிழக மக்கள். "30 ஆண்டுகள் ஜெ.வின் நிழலாக இருந்து அரசியலில் ஆதிக்கம் செலுத்திய சசிகலாவின் அரசியல் துறவறம் பற்றி தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்கள்' என ஒரு பெரிய கருத்துக் கணிப்பைத் தமிழகம் முழுவதும் நக்கீரன் நடத்தியது.
சசிகலா ஒதுங்கியது ஏன்?
சசிகலா மீண்டும் அரசியலுக்கு வருவாரா?
மீண்டும் வந்தால் அ.தி.மு.க.வை வசப்படுத்துவாரா?
சசிகலா ஒதுங்கியதால் யாருக்கு லாபம்?
சசிகலாவின் அரசியல் துறவு என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?
என ஐந்துவிதமான கேள்விகளுடன் தமிழக மக்களின் மனதை படம்பிடித்தோம்.
"சசிகலா ஒரு நிழலுலக ஆளுமை தான். மேலோட்டமாகப் பார்த்தால் தமிழகத்தை கொள்ளையடித்த மன்னார்குடி மாஃபியாவின் தலைவி என்ப தோடு கடந்து போய்விடும். ஆழமாகச் சிந்தித்தால் ஜெயலலிதாவிற்காகவும் அ.தி.மு.க.விற்காகவும் தனது இளமைக்கால சுக துக்கத்தை துறந்து கணவனைக் கூடப் பிரிந்து துறவற வாழ்க்கையை வாழ்ந்தவர்.
"கடைசியாக ஜெ.வுடன் சேர்ந்து செய்த குற்றத்திற்காக நான்காண்டு சிறைத் தண்டனை அனுபவித்துவிட்டு வந்தவர். திடீரென அரசியலில் இருந்து துறவறம் பெற்று ஒதுங்கிவிட... அவர் சாதாரணமான ஆளுமை இல்லை, அவர் பிரம்மாண்டம்'' என்கிறார் திருவிடைமருதூர் ஜெய்சங்கர்.
"எங்க கிராமங்களில் ஒருசிலரை அவங்க வயனமிருக்காங்கன்னு சொல்லுவாங்க... எதுக்குத் தெரியுமா?
ஒரு காரியத்தை நெனைச்சா அதைச் செய்து முடிக்கிறதுக்குத் தேவையான சக்தியைப் பெற அமைதியாக இருப்பதற்கு அர்த்தம்தான் வயனம் காப்பாத்துறது. அதுபோல யானை தனது கோவத்தைக் கடவாயில் ஒதுக்கிவச்சிருக்கும். சமயம் வரும்போது பழி தீர்த்திரும். அது போல சசிகலாவின் அரசியல் துறவறம்'' என்கிறார்கள் நெல்லை, தூத்துக்குடி மக்கள்.
தமிழக மக்களில் 44 சத விகிதத்தினர் சசிகலா மீண்டும் அரசியலுக்கு வருவார் என உறுதியாகச் சொல்கிறார்கள். அதில் 43 சதவிகிதம் பேர் அவர் வந்தால் அ.தி.மு.க.வை வசப்படுத்துவார் என நம்புகிறார்கள்.
சசிகலா துறவற முடிவை ஏன் மேற்கொண்டார் எனக் கேட்டதற்கு... பா.ஜ.க.வின் அழுத்தம்தான் காரணம் என 30 சதவிகிதம் பேர் சொல்கிறார்கள்.
பா.ஜ.க. மட்டுமல்ல... எடப்பாடியின் பிடிவாதம்தான் என 26 சதவிகிதம் பேரும்... இல்லை தினகரனின் அடாவடி செயல்கள்தான் காரணம் என 11 சதவிகிதம் பேரும் சொல்கிறார்கள்.
"சசிகலா மீது ஊழல் கறை இருக்கிறது. அவர் சிறையிலிருந்து வந்தவர். அவரை சேர்த்துக்கொண்டால் கெட்டபெயர் வரும் என எடப்பாடி நினைக்கிறார். சசிகலா மீது ஜெ. மரண சந்தேகம் படிந்திருந்தது. இப்பொழுது மறைந்துவிட்டது. ஆனாலும் எடப்பாடி, சசியை ஏற்க மறுத்து, தினகரன், எடப்பாடிக்குப் போட்டியாக, " 'நான்தான் முதல்வர்' என சொன்னது எல்லாம் சசிகலாவை பாதித்துவிட்டது'' என்கிறார் பெண்ணாடத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தங்கசெல்வி.
சசிகலாவின் துறவறத்தின் காரணமாக அவரது சமூக மக்கள் அ.தி.மு.க.வுக்கு எதிராகத் திரும்புவார்கள் எனவும், அவர் அரசியலுக்குத் திரும்பிவருவார் எனவும் அதே 44 சதவிகித மக்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.
"ஒட்டுமொத்த சமூகமே அ.தி.மு.க. மீது கடுமையான எதிர்ப்பில் உள்ளது. எடப் பாடி தென் மாவட்டத்துக்கு வரும்போது மக்கள் எதிர்ப்பைக் காட்டுவாங்க. என்னதான் இருந்தாலும் சசிகலா எங்கவீட்டுப் பொம்பளை. சசிகலா காலில் விழுந்துதான் எடப்பாடி முதல்வரானார். கட்சியைக் காப்பாற்றிய சசிகலாவைத் தூக்கி எறிந்ததை நாங்க எப்படி ஏற்போம்'' என்கிறார்கள் உணர்ச்சிப்பிழம்பாக.
அதேநேரத்தில் 'சசிகலா ஒதுங்கியதால் யாருக்கு லாபம்' எனக் கேட்டதற்கு, "தி.மு.க.விற்கு லாபம்" என 30 சதவிகிதம் பேரும் தெரிவிக்கிறார்கள்.
"கடந்த நான்கு ஆண்டுகளாக சின்னம்மா பெயரைச் சொல்லியே நாங்க குறிப்பிட்ட வாக்கு வங்கி வைத்துள்ளோம். அ.தி.மு.க. சின்னம்மாவை ஏற்காதவரை எதிரியான தி.மு.க. எளிதில் வெற்றிபெறும்'' என்கிறார் அ.தி.மு.க. தொண்டரான கண்டரமாணிக்கத்தைச் சேர்ந்த கனக கருப்பையா.
"சசிகலாவின் துறவறம் தி.மு.க.வுக்கு கூடுதல் பலம்'' என்கிறார் ஈரோட்டைச் சேர்ந்த பவானி.
"சசியின் நேரடி ஆதரவாளர்கள் அ.தி.மு.க. மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்'' என்கிறார் வீரபாண்டி மாஜி தலைமை ஆசிரியர் உதயகுமார்.
அதே நேரத்தில், "சசியின் துறவறம் அரசியலில் எந்தப் பாதிப்பையும் ஏற் படுத்தாது'' என 20 சதவிகிதம் பேர் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.
"சசிகலா துறவறம் என்பது நாடகமே. நான்தான் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் என்கிற சசிகலாவை அ.தி.மு.க. ஏற்கவில்லை. அ.ம.மு.க.வை வழிநடத்தினால் பிற்காலத்தில் அ.தி.மு.க.வை தன்னால் சொந்தம் கொண்டாட முடியாது, ஆகையால் நான் ஒதுங்கிவிடுகிறேன் என அறிக்கை விட்டிருக்கிறார்'' என்கிறார் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த செல்வி.
"ஜெ.வுக்குப் பிறகு சசி அரசியலுக்கு வருவது முடியாத காரியம். காரணம் ஜெ. சினிமாவில் இருந்து மக்களைக் கவர்ந்தவர். திரைமறைவு அரசியல் செய்த சசிகலா, திரைமறைவில் துறவறம் அறிவித்துள்ளார். அதனால் எந்தப் பாதிப்பும் இல்லை'' என்கிறார் ஜெயங்கொண்டம் சக்திவேல்.
"பெட்ரோல், க்யாஸ் விலை ஏறிக்கொண்டே போகிறது. அதை குறைப்பதற்கு யாரும் முன்வரவில்லை. இதில் சசிகலாவாவது கத்திரிக்காயாவது'' என கோபத்தில் படபடக்கிறார் கள்ளக்குறிச்சி தனலட்சுமி.
"சசிகலாவால் பெரிய அளவில் சாதிக்க முடியாது. அவர் ஒன்றும் மக்கள் தலைவர் இல்லை. அவரை பெரிய தியாகிபோல சித்தரிப்பது நகைப்புக்குரிய செயலாகத்தான் தோன்றுகிறது'' என்கிறார் கூத்தக்குடியைச் சேர்ந்த ஏழுமலை.
பா.ஜ.க.வுடன் கூட்டணி! அ.தி.மு.க. வெற்றியைப் பாதிக்குமா?-நக்கீரன் சர்வே
-நக்கீரன் சர்வே குழு
ராம்கி, ஜீவாதங்கவேல், பரமசிவன், சக்திவேல், எஸ்.பி.எஸ், ராஜா, பகத்சிங், அருள்குமார், செல்வகுமார், மணிகண்டன், அரவிந்த், அருண்பாண்டியன், நாகேந்திரன், அண்ணல், சுந்தரபாண்டியன், இளையராஜா, மகேஷ், காளிதாஸ்
தொகுப்பு: -தாமோதரன் பிரகாஷ்
படங்கள்: ராம்குமார், விவேகானந்தன், விவேக்