Skip to main content

ரேஸில் முந்துவாரா விஜயகாந்த்? விட்டுக்கொடுக்குமா பாமக, பு.நீ.க.!

Published on 06/11/2019 | Edited on 07/11/2019

 

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்று போட்டியிட்டது தேமுதிக. முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்ட விஜயகாந்த் உள்பட அக்கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர். அதனைத் தொடர்ந்து 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றது தேமுதிக. கள்ளக்குறிச்சி, வடசென்னை, விருதுநகர், திருச்சி ஆகிய நான்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தது. 



 

Vijayakanth



நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகும் அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடித்து வருகிறது. கடைசியாக விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தது. விஜயகாந்த் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளருக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். விஜயகாந்த் வருகையும் அதிமுக வேட்பாளருக்கு கூடுதல் பலம் தந்தது. அதனால்தான் அதிக வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றது என்று தேமுதிக கூறி வந்தது. 

selfie


 

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் நாம், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அதிக இடங்களை பெற்று கட்சியை பலப்படுத்த வேண்டும். கண்டிப்பாக மேயர் பதவிக்கு போட்டியிட வேண்டும். அது வேலூர் அல்லது சென்னையாக இருக்க வேண்டும் என்று தேமுதிக நிர்வாகிகள் விஜயகாந்த் மற்றும் பிரேமலதாவிடம் வலியுறுத்தி வருகின்றனர். 


 

 

மேலும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கூட்டணி பேச்சுவார்த்தை காலதாமதமானதால்தான் அனைவருக்கும் வேண்டிய தொகுதிகளை எடுத்துக்கொண்டு நாம் விரும்பாத தொகுதிகளை நமக்கு திணித்தார்கள். ஆகையால் இந்த உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான கூட்டணி பேச்சுவார்த்தையை நாம் அதிமுக தலைமையிடம் முன்கூட்டியே தொடங்க வேண்டும். அதில் கூட்டணிக் கட்சிகளுக்கான முதல் ஒப்பந்தத்தை நாம்தான் பெற வேண்டும். அப்படி இருந்தால்தான் நாம் விரும்பிய, நமக்கு செல்வாக்கு உள்ள இடங்கள் கிடைக்கும் என்றும் விஜயகாந்த் மற்றும் பிரேமலதாவிடம் கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். 
 

இதனைத் தொடர்ந்துதான் 07.11.2019 வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதியில் தேமுதிக செல்வாக்கு உள்ளது. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட இடங்களில் தேமுதிகவுக்கு என்ன பலம் இருந்தது உள்ளிட்டவை குறித்தும், எந்தெந்த இடங்களை அதிமுகவிடம் இருந்து பெறலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. மேலும் விஜயகாந்த் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என்பதால் அக்கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Thiruvalluvar


 

இதேபோல் பாமகவும் உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. அக்கட்சியும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு தோல்வியை சந்தித்தது. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் மற்றக் கட்சியை விட முந்தி சென்று தங்களுக்கான தொகுதிகளை பெற்றும் தோல்வியை சந்தித்தது. அப்போது போடப்பட்ட கூட்டணி ஒப்பந்தத்தின்படி அன்புமணி ராமதாஸ் மட்டும் ராஜ்யசபா உறுப்பினரானார். தற்போது பாமகவை பலப்படுத்த வேண்டும் என்றால், உள்ளாட்சித் தேர்தலில் பாமக போதிய இடங்களை பெற வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பாமக முன்னாள் தலைவராக இருந்த பேராசிரியர் தீரன் தலைமையில் ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் அரங்க வேலு, கோவிந்தசாமி ஆகியோர் உள்ளனர். இந்த குழுவிடம் வேலூர் அல்லது சென்னை மேயர் பதவிக்கு பாமக போட்டியிட வேண்டும். ஆகையால் மேயர் பதவியை குறி வைத்து அதிமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று பாமக நிர்வாகிகள் கூறி வருகின்றனர். 


 

 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் அதிமுக சின்னத்தில் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிட்டார். அவருக்கு தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது, அதனால் அவர் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்று அதிமுக அவருக்கு அந்த வாய்ப்பை வழங்கியது. ஏ.சி.சண்முகமும் வெற்றி வேட்பாளர் தான்தான் என்று அதிமுகவினரையும், தனது கட்சியினரையும் உற்சாகப்படுத்தி வந்த நிலையில் அவர் தோல்வியை சந்தித்தார். அப்போது அவரை சமாதானப்படுத்திய அதிமுக தலைமை, வேலூர் மேயர் பதவியை உங்களுக்கு தருகிறோம் என்று கூறியிருந்தது. இந்த நிலையில் தேமுதிக, பாமகவும் சென்னை, வேலூர் மேயர் பதவிகளை குறிவைத்துள்ளது. 
 

உள்ளாட்சித் தேர்தலுக்கு கூட்டணி கட்சிகள் தயாராகிவிட்டது, அவைகள் ஒரே இடங்களை இரண்டுக்கும் மேற்பட்ட கட்சிகள் கேட்பதால் என்ன செய்வது, கூட்டணி கட்சிகளை எப்படி சமாதானப்படுத்தி இடங்களை பிரித்துக்கொடுப்பது, அதே நேரத்தில் தங்களது கட்சியினரையும் எப்படி சமாளிப்பது என்பது குறித்து அதிமுக தலைமை இன்று மாலை கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்துகிறது. ஆலோசனை முடிவில் கூட்டணிக் கட்சிகளிடம் பேச குழு ஒன்றை அதிமுக அமைக்கும் என்றும், அந்தக் குழு கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து பேசும் என்று கூறப்படுகிறது. 


 


 

சார்ந்த செய்திகள்