Skip to main content

கஜாவின் கோரதாண்டவம்.. திரும்பியதா இயல்பு வாழ்க்கை ?

Published on 16/11/2019 | Edited on 16/11/2019

2018 நவம்பர் 15 நள்ளிரவுக்கு பிறகு கஜா என்றும் புயல் தமிழக கடற்கரையில் கரையை கடக்கிறது. கடலூர் பக்கம் கரையை கடக்கலாம், இல்லை இல்லை கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையில் கரை கடக்கும்.. இல்லை டெல்டா மாவட்ட கடலில் கரை கடக்கும் என்று மாறி மாறி வானிலை அறிக்கைகள் வந்து கொண்டிருந்த நேரம். மக்கள் சற்று உஷாரகவே இருந்தனர்.

15 ந் தேதி இரவு 10 மணிக்கு பிறகு புதுக்கோட்டை மாவட்டத்தின் உள் பகுதியில் உள்ள கிராமங்களில் மழை தொடங்கியது. காற்றும் வீசத் தொடங்கியது. கடல் கரை ஓரத்தில் புயல் கரையை கடந்தாலும் உள்மாவட்டங்களில் பாதிப்பு இருக்காது என்று நினைத்துக் கொண்டு படுக்கப் போனார்கள். ஆனால் படுக்கையில் நிம்மதியாக தூங்க முடியவில்லை. காற்றின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது. நள்ளிரவு 12 மணிக்கு பிறகு காற்றின் வேகத்தில் கூடுதல் சக்தி இருந்தது.

விண்ணைத் தொட முயற்சித்து வளர்ந்திருந்த தென்னை மரங்களை அசைத்துப் பார்த்தது காற்று மண்ணைத் தொட்டுவிட்டு மீண்டும் எழுந்தது. ஆனால் காற்று அசுரன் மறுபடி மறுபடி தென்னையை ஆட்டிப் படைத்தது. அந்த அகோர ஆட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை தென்னையால். 16 ந் தேதி அதிகாலை 3 மணிக்கு பிறகு கஜா வின் ஆட்டம் அதிகமானது. நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் தோப்புகளாக நின்ற தென்னை மரங்கள் ஒன்றோடு ஒன்றாக சாய்ந்தது. பல மரங்கள் முறிந்து விழுந்தது. 

தென்னை மட்டுமா விழுந்தது மா, பலா, வாழை, தேக்கு, சந்தனம், சவுக்கு, மட்டுமல்ல பல புயலை பார்த்துவிட்டுட்டு 100 வருடங்கள் கடந்து நின்ற புளி, ஆல், அரசு மரங்களும் உடைந்து சாய்ந்தது. ஒட்டுமொத்த மரங்களும் சாய்ந்து மின்கம்பங்கள், மதில் சுவர்கள், கட்டிடங்கள் எல்லாம் உடைந்த போதும் கஜாவின் உக்கிரம் குறையவில்லை. பல ஆயிரம் வீட்டுச் சுவர்களை உடைத்து கொட்டகைகளை பிய்த்துக் கொண்டு பறந்தது. 

கரை ஏற்றி நிறுத்தி இருந்த படகுகளை காணவில்லை. உடைத்துக் கிடந்தது. அதிகாலை 5 மணிக்கு பிறகு இன்னும் உச்சத்தில் நின்று ஆடிய கஜா வின் ஆட்டத்திற்கு எந்த மரமும் மிஞ்சவில்லை. விடியும் போது வீட்டைவிட்டு யாரும் வெளியே வரமுடியவில்லை. ஆசை ஆசையாய் வீட்டு வாசலில் வளர்த்த மரங்கள் வீட்டு வாசலை அடைத்துக் கொண்டு கிடந்தது. அடுத்த வேளை சமைக்க முடியவில்லை. அடுத்த நாள் குடிக்க தண்ணீர் இல்லை. உள்ளூர் இளைஞர்கள் அரிவாளும் கையுமாக களமிறங்கி முதலில் சாலைகளில் கிடந்த மரங்களின் கிளைகளை வெட்டி அகற்றி புதிய வழிகளை ஏற்படுத்தினார்கள். வெளியூர்களில் இருக்கும் நண்பர்களுக்கு தகவல் சொல்லி மரம் அறுக்கும் இயந்திரம் வாங்கி வரச் சொன்னார்கள். அந்த இயந்திரங்கள் வந்து சேர 3 நாட்களுக்கு மேல் ஆனாது. இயந்திரங்களைக் கொண்டு மரங்களை அறுத்து போக்குவரத்துகளை தொடங்கிவிட்டனர். அதுவரை அதிகாரிகளும் வரவில்லை. அமைச்சர்களும் எட்டிப்பார்க்கவில்லை. காரணம் வழியில்லை என்பதை சொல்லிக் கொண்டனர். 

2 நாட்களுக்கு பிறகு குடிக்க தண்ணீர் இல்லை. குடிதண்ணீர் எற்ற மின்சாரம் இல்லை. மின்கம்பங்கள் மரங்களுக்குள் சிக்கிக் கிடந்தது. மின் கம்பிகள் மரக்கிளைகளில் பின்னிக் கிடந்தது. உடனடியாக ஜெனரேட்டர்களை கொண்டு வந்து குடிதண்ணீருக்கு வழி செய்த இளைஞர்கள் கிடைத்த பொருளை வைத்து சமைத்து கொடுத்தார்கள்.

3 நாட்களுக்கு பிறகு தன்னார்வலர்கள் அவர்களால் முடிந்த உணவு, உடைகளுடன் கிராமங்கள் நோக்கி வந்தனர். அரசாங்கம் வந்து பார்க்க வாரம் ஆனது நிவாரணம் கொடுக்க மாதம் ஆனது. கொடுத்த நிவாரணமும் சரியாக கிடைக்கவில்லை. இழப்பீடு கொடுப்போம் என்றார்கள். இன்றுவரை கிடைக்கவில்லை என்பது தனிக்கதை.

தன் வீட்டு தோட்டத்தில் விழுந்து கிடந்த மரங்களை வெட்டி அகற்ற 7, 8 மாதங்கள் வரை ஆனது. அகற்றப்பட்ட தென்னை மரங்களை செங்கல் சூளைக்கு விறகாக ஏற்றிச் சென்றனர். இன்று வரை ஏற்றிச் செல்கிறார்கள்.  மற்ற மரங்களை விற்க முடியவில்லை. அடிமாட்டு விலைக்கு கொடுத்துவிட்டு அந்த பணத்தில் மற்ற மரங்களை வெட்டி அகற்றினார்கள். தென்னைக்கு நிவாரணம் கொடுத்து அந்த பணமும் பத்தவில்லை என்றார்கள். அதிலும் பதிவு இல்லை என்று புறக்கணித்தார்கள். அனைத்து மரங்களுக்கும் நிவாரணம் உண்டு என்று கணக்கெடுத்தார்கள். அத்தோடு சரி.

நெடுவாசல் வந்த மத்திய  அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அசாம், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து ராணுவ கப்பலில் தென்னங்கன்றுகளை கொண்டு வந்து விவசாயிகளுக்கு வழக்குவோம் என்று சொல்லிவிட்டு போனவரை இதுவரை காணவில்லை.

முதல்வர் எடப்பாடி ஒரு லட்சம் வீடுகள் கட்டிக் கொடுப்போம் என்று சொன்னார்.. முதல்வர் சொன்ன வீடு நமக்கும் வரும் என்று காத்திருந்தார்கள். வருடம் ஒன்று ஓடிவிட்டது ஒரு வீடு கூட வரவில்லை. தனியாரும், அரசும் கொடுத்த பிளாஸ்டிக் தார்பாய்கள் வீட்டின் கூரைகளானது. அந்தக் கூரைகளும் வெயிலில் கிழிந்து அந்த ஓட்டையை அடைக்க தென்னை மட்டைகள் நிழல் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

ஒரு வருடமாக மக்கள் படும் துயரம் சொல்ல முடியாது. கடன் மேல் கடன் வாங்கி கன்றுகளை நட்டுவிட்டு வளர்க்க முடியாமல் தவித்து வருகிறார்கள். மகன், மகள்களின் எதிர்காலத்தை எண்ணி செம்மரங்களை நட்டு வளர்த்த விவசாயிகள் அந்த மரங்களை விற்க முடியாமல் இன்றளவும் தவித்து வருகிறார்கள்.

புயலில் அழிந்த மரங்களை மீட்க மறுபடியும் களமிறங்கிய இளைஞர்கள், தன்னார்வ அமைப்புகள் கோடிக்கணக்காண மரக்கன்றுகளை நட்டு வளர்க்கத் தொடங்கிவிட்டனர். பிறந்த நாளை கூட மரக்கன்று நட்டு கொண்டாடி வருகிறார்கள்.

கோடி கோடியான மரங்கள் அழிந்ததைப் பார்த்த திருவரங்குளம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கோகுலகிருஷ்ணன் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை வளர்த்து கிராமங்கள் தோறும் பழத்தோட்டங்களை அமைத்து வருகிறார். நெடுஞ்சாலைத் துறையினர் சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கிறார்கள்.

புயலின் தாக்கம் அன்றோடு முடியவில்லை. இன்றளவும் அதன் வெளிப்பாடு இருக்கிறது. உயிரோடு நின்ற மரங்களும் பட்டுக் கொண்டிருக்கிறது. தென்னை மரங்கள் காய்க்க மறந்துவிட்டது. இதனால் லட்சக்கணக்காண விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், தென்னை சார்ந்த தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்கிறார்கள். மற்றொரு பக்கம் மனநிலை பாதிப்பு, சுவர் இடிந்து பலி என்ற இன்றைக்கும் நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் அரசாங்கம் சொன்னது என்னாச்சு என்ற கேள்வி இன்றளவும் புயல் பாதித்த பகுதியில் கேட்கிறது.. மீள முடியாத வேதனையில் விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்கள் உள்ளனர் என்பதே நிதர்சனம்.