Skip to main content

ராஜேந்திர பாலாஜி மீது தேர்தல் ஆணையம்

Published on 21/10/2017 | Edited on 22/10/2017
ராஜேந்திர பாலாஜி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?


'சரஸ்வதி சபதம்' படத்தில் திடீரென்று பேச்சு வந்த சிவாஜி கணேசன் மகிழ்ச்சியில் சரளமாக  பாடத்  தொடங்குவார். அதுபோல பேசத் தொடங்கியிருக்கிறார்கள் நமது அமைச்சர்கள். இப்பொழுது பேசியிருப்பவர் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. 

''ஒபாமா வந்தாலும் சரி, ட்ரம்ப்பே வந்தாலும் சரி பயமே கிடையாது. நமக்கு பிரதமர் மோடி இருக்காரு. எல்லாத்தையும் அவர் பார்த்துக்கொள்வார். பிரதமர் மோடி இருக்கும் வரை அதிமுகவை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. எல்லாம் மேல இருப்பவன் பார்த்துக்கொள்வான். டெல்லி பார்த்துக்கொள்ளும். சின்னம் நமக்கு தான் வரப்போகிறது. கட்சியும் நமக்கு தான் வரப்போகிறது'' என பெரியகுளத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார். 

அமைச்சரின் பேச்சு குறித்து நக்கீரன் இணையதளத்திற்கு கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உண்மையான அதிமுக தொண்டர்கள் தவிக்கின்றனர்

நாகை எம்.எல்.ஏ.வும், ம.ஜ.க. பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி:- இப்போதுதான் தெரிகிறது ஏன் இந்த அமைச்சர்களையெல்லாம் ஜெயலலிதா அம்மா அவர்கள் வாய்த்திறக்காமல் அடக்கி வைத்திருந்திருந்தார்கள் என்று. இவர்களெல்லாம் பொது அறிவு குறைவானர்கள் என்பதை தெரிந்திருந்த காரணத்தினால்தான் இவர்களையெல்லாம் மிகவும் கட்டுப்பாட்டுக்குள் அவர் வைத்திருந்திருக்கின்றார்.

இன்று வெட்கமில்லாமல் தங்கள் கட்சிக்கு தலைமை பொறுப்பாளர் நரேந்திர மோடி என்ற மனநிலையில் இவர்கள் செயல்படுவது வெட்கக்கேடானது. உண்மையான அதிமுக தொண்டர்கள் இதுபோன்ற பேச்சுகளை சகிக்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அதிமுகவுடைய கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்று சொன்னால் ராஜேந்திர பாலாஜி போன்ற அமைச்சர்கள் வாயை மூடிக்கொண்டு மவுனமாக இருப்பதே நல்லது. பா.ஜ.க. என்பது பாலைவனத்தில் படம் எடுத்திருக்கும் பாம்பு. அதன் நிழலில் ஓய்வு எடுக்கும் தவளைகள் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

உண்மையை ஒப்புக்கொண்டார்

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவன தலைவர் தனியரசு எம்எல்ஏ:- நடப்பதை சொல்லியிருக்கிறார். உண்மையை ஒப்புக்கொண்டார். அதிமுகவை ஆதரிப்பதும், அதில் நடக்கும் அணிகள் பிரச்சனையில் பஞ்சாயத்து செய்வதும், குறிப்பிட்ட ஒரு குடும்பத்தை பிரித்து வைப்பதும் பாஜகதான் என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான். ராஜேந்திர பாலாஜி சொன்னது நடக்கலாம். 

நமக்கு ஏற்றாற்போல தலையாட்டுபவர்களுக்கு கட்சியும், சின்னமும் கிடைக்க அவர்கள் உதவி செய்வதாக அமைச்சர் கூறியதில் ஆச்சரியப்படுவதற்க்கு ஒன்றுமில்லை. ஏனென்றால் நாங்கள் ஏற்கனவே கூறிவருகிறோம் தமிழகத்தை பாஜகதான் ஆட்டி வைக்கிறது என்று.

தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

டி.டி.வி.தினகரன் அணியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்:- தேர்தல் ஆணையம் எங்களுக்குத்தான் இரட்டை இலை சின்னத்தை வழங்கும் என்று ஒரு பொறுப்புள்ள அமைச்சர், பொதுக்கூட்ட மேடையில் உளறிக்கொட்டியிருப்பது அநாகரிகமானது என்பதைவிட தேர்தல் ஆணையத்தையே சந்தேகத்திற்கிடமாக்கியிருக்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாகத்தான் செயல்படும் என்பதை ஒரு பொறுப்புள்ள அமைச்சர் பேசுவதிலிருந்து அவர் மீது எந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்கப்போகிறது என்பதை பொதுமக்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறார்கள்.

எங்களை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது, மோடி இருக்க என்ன பயம் என அந்த அமைச்சர் பேசியிருப்பதன் மூலம், மோடியின் அடிமைகள் இவர்கள் என்பது இப்போது அம்பலமாகிவிட்டது. சுருக்கமாக சொன்னால் பூனைக்குட்டி இப்போது வெளியே வந்துவிட்டது.

ஆகவே யார் சூத்தரதாரி என்பதை ஒரு அமைச்சரே பொதுக்கூட்ட மேடையில் அம்பலப்படுத்தியிருக்கிறார். ஆகவே இந்த விளையாட்டை டெல்லியில் இருப்பவர்கள்தான் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.

எங்களிடம் 46 மாவட்டச் செயலாளர்கள் இருக்கிறார்கள், எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள், ஆகவே எங்களுக்குத்தான் சின்னம் வரவேண்டும் என்று சொல்கிறார். சசிகலாவை பொதுச்செயலாளராக கொண்டிருக்கிற அதிமுக அம்மா அணியிலும் மாவட்டச் செயலாளர்கள் இருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு தென்சென்னை வடக்கு மாவட்டச் கழகச் செயலாளர் வி.பி.கலைராஜன், சசிகலாவின் தலைமையை ஏற்றுக்கொண்டிருக்கிறார். ஆனால் அவர்களுக்கு தென்சென்னை வடக்கு மாவட்டத்திற்கு செயலாளரே இல்லை. தேனி மாவட்ட கழகச் செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன். துணை முதல் அமைச்சரின் சொந்த மாவட்டத்திற்கு அவர்களுக்கு மாவட்டச் செயலாளரே இல்லை.

ஆகவே ஒரு கட்சியினுடைய தலைமையை தீர்மானிப்பது அக்கட்சியினுடைய தொண்டர்கள்தான். ரத்த நாளமாய், விளா எலும்பாய், விதை முடிச்சாய் இருக்கிற தொண்டர்கள் பக்கம்தான் தேர்தல் ஆணையம் சின்னத்தை வழங்க வேண்டும். அதுதான் அறம். அறத்திற்கு எதிராக எந்த முடிவையும் தேர்தல் ஆணையம் நிச்சயம் எடுக்காது என்பதை நம்புகிறேன். ராஜேந்திர பாலாஜி உளறிக்கொண்டிருப்பதற்கு தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று பொதுமக்கள் போலவே நானும் காத்திருக்கிறேன்.

மக்களின் ஆதரவை இழப்பார்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்:- இவர்கள் எப்போது மோடி கட்டுப்பாட்டுக்குள் போனார்களோ, அப்போதே இந்த கட்சிக்கு பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. இவர்களை அவர்கள் விழுங்கிவிடுவார்கள். அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலேயும் பாதிப்பை உண்டாக்கும். 

மோடியை இவர்கள் நம்பியுள்ளனர். மோடி தனது கட்சியின் நலனை பார்ப்பாரேயொழிய, இந்தக் கட்சிக்கு எதுவும் செய்யமாட்டார். மொத்தத்தில் இவர்கள் மக்களின் ஆதரவை இழப்பார்கள்.

பாஜகவின் அடிமைகள் என ஒப்புக்கொண்டார்கள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்:- ராஜேந்திர பாலாஜி மிகச் சரியாகவே சொல்லியிருக்கிறார். என்னக் காரணமென்றால் இன்றைக்கு அதிமுக ஆட்சி என்பது மக்களின் செல்வாக்கை முற்றிலும் இழந்துவிட்டது. சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் இழந்துவிட்டது. மத்தியில் பிரதமர் மோடியின் தலைமையிலான பாஜக ஆட்சி இருப்பதினால், அந்த ஆட்சியின் தயவில்தான் இந்த ஆட்சி நடைபெறுகிறதே தவிர, மக்களின் ஆதரவிலோ, சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவிலோ இந்த ஆட்சி நடைபெறவில்லை. 

அதிமுகவும், அதன் ஆட்சியாளர்களும் மோடிக்கு எதுவரை அடிமையாக இருக்கிறார்களோ அதுவரை மோடி அரசாங்கம் இந்த ஆட்சியை பாதுகாக்கும். தற்போது தமிழகத்தில் அதிமுக என்ற பெயரில் பாஜக ஆட்சிதான் நடக்கிறது. அந்தக் கட்சியின் அமைச்சர்களாகத்தான் இருக்கிறார்கள். 

ஆகவே மோடி இருக்கும் வரை பயமில்லை என்ற கருத்தினை ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருக்கிறார்.  இவர்கள் பாஜகவின், மோடியின் பினாமிகள் என ஏற்கனவே எதிர்க்கட்சிகள் சொல்லி வந்தோம். எதிர்க்கட்சிகள் சொன்னது சரிதான் என உண்மைப்படுத்த இந்த கருத்தினை அவர் தெரிவித்திருக்கிறார்.

பாஜக பிடியில் அதிமுக என உறுதி செய்துள்ளார்

காங்கிரஸ் சட்டமன்ற கொறடா விஜயதாரணி:- ஏற்கனவே பாஜகவின் நிழல் ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது. அதனை உறுதி செய்யும் விதத்தில் ராஜேந்திர பாலாஜியின் பேச்சு அமைந்துள்ளது. தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடக்கவில்லை என்பதையும் அவர் உறுதி செய்துள்ளார். 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இந்த ஆட்சி முழுக்க முழுக்க பாஜக பிடியில் சிக்கியிருப்பது என்பதில் மாற்று கருத்து இல்லை என்பதை உறுதி செய்திருக்கிறார்.

ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை

பாஜகவின் செய்தித்தொடர்பாளர் கரு.நாகராஜன்:- ராஜேந்திர பாலாஜி இப்படி பேசுகிறார். பாஜக அதிமுகவை உடைக்க பார்க்கிறது என ஏ.கே.போஸ் சொல்கிறார். உதயகுமார், ஓ.எஸ்.மணியன், செல்லூர் ராஜூ போன்றவர்கள் ஒவ்வொரு முறையும் மாற்றி மாற்றி பேசுகிறார்கள். 

எடப்பாடி பழனிசாமி, அவருக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள் பேசினால் அதை ஒரு கருத்தாக எடுத்துக்கொள்ளலாம். இவர்கள் சொல்வதெல்லாம் அதிமுகவின் அதிகாரப்பூர்வ கருத்து இல்லை. 

இவர்கள் கருத்து சொல்லும்போது அந்தக் கட்சியில் இருப்பவர்ளே, அவரவரின் தனிப்பட்ட கருத்து என பதில் சொல்கிறார்கள். ஆகவே இவர்களின் கருத்துக்களை ஒரு பொருட்டாகவே நாங்கள் நினைக்கவில்லை.

சொந்தக் கருத்து

அதிமுக முன்னாள் அமைச்சரும், எடப்பாடி அணியைச் சேர்ந்தவருமான வைகைச் செல்வன்:- 

மத்திய, மாநில அரசுகள் நல்லுறவைப் பேணிக்காக்கிறது. மாநில நலன் சார்ந்து, மக்கள் நலன் சார்ந்து மத்திய அரசோடு ஒரு இணக்கமான போக்கை கடைப்பிடித்து வருகிறது தமிழக அரசு. பாஜக என்ற கட்சியோடு எங்களுக்கு எந்த உறவும் இல்லை. 

பாஜக ஆட்சியோடு ஒரு நல்லுறவை பேணிக்காக்கிறோம். மத்திய அரசோடு மற்றப்படி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறிய கருத்து, அவரது சொந்தக் கருத்து. கட்சியின் கருத்து அல்ல.

-வே.ராஜவேல்


சார்ந்த செய்திகள்