இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உரிய ஆவணங்கள் இல்லாததால் வீடற்றவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதில்லை எனப் புகார் எழுந்தது. இதற்கு மத்திய சுகாதாரத்துறை தற்போது விளக்கமளித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், " கோவின் செயலியில் பதிவு செய்யத் தேவையான ஆவணங்கள் இல்லாததால், வீடற்றவர்கள் தடுப்பூசி பெறுவதிலிருந்து தடுக்கப்படுகிறார்கள் எனவும் தடுப்பூசி செலுத்துவதில் கவனமாகத் தவிர்க்கப்படுகிறார்கள் எனவும் சில தகவல்கள் வந்துள்ளன. அவை ஆதாரமற்றவை. உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவையல்ல" எனத் தெரிவித்துள்ளது.
மேலும், "தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படும் ஒன்பது அடையாள அட்டைகளில் ஏதும் இல்லாதவர்களுக்கும், சொந்த தொலைபேசி எண் இல்லாதவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த சிறப்பு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதேபோல, முதியவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் வீட்டிற்கு அருகிலேயே தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது" எனவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.