17- வது மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று, அதற்கான வாக்கு எண்ணிக்கை மே- 23 நடந்து முடிந்துள்ளது. மக்களவை தேர்தலுடன் சேர்த்து அருணாசல பிரதேசம், ஆந்திர பிரதேசம், சிக்கிம், ஒடிஷா உள்ளிட்ட நான்கு மாநில சட்டமன்ற தேர்தல்களும் நடைப்பெற்றது. இதில் அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை பாஜக கைப்பற்றியது. இந்த மாநிலம் சீனாவின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. மாநில சட்ட சபையில் மொத்தம் 60 உறுப்பினர்களை கொண்டது. இதில் பாஜக தலைமையிலான கூட்டணி 41 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்தது.
இதனை தொடர்ந்து அருணாசல பிரதேசத்தின் முதல் அமைச்சராக பெமா காண்டு தொடர்ந்து 2- வது முறையாக இன்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு அருணாச்சல பிரதேச ஆளுநர் பி.டி. மிஷ்ரா முறைப்படி பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காண்டுவின் 11 சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். பொதுவாக வட கிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியே ஆட்சி செய்த நிலையில், தற்போது பெரும்பாலான வட கிழக்கு மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.