சமீபத்தில் நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து சம்பந்தமாக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் காலம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் அவர்களைச் சந்தித்துப் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு.
முன்னாள் மத்திய ரயில்வே துறை அமைச்சர்களான லாலு பிரசாத் யாதவ் மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் கூறுகையில் மத்திய அரசினுடைய அலட்சியத்தாலும் ரயிலில் பாதுகாப்புக் கருவி பொருத்தப்படாமல் இருப்பதன் காரணமாகவும் தான் மிகப் பெரிய இரயில் விபத்து நடந்துள்ளது என்று குற்றம் சாட்டி வருகிறார்களே?
ரயில்வேயின் முதன்மை அதிகாரி இதைப் பற்றி ஏற்கனவே அறிக்கை கொடுத்த போதும் அதற்குண்டான நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசின் அலட்சியப் போக்கினால் தான் இப்படி ஒரு விபத்து நடந்துள்ளது. மேலும் மத்திய அரசு ரயில்வேயின் பாதுகாப்புக்காக வைத்திருக்கும் பட்ஜெட் மிக மிகக் குறைவு. 2018ல் ரயில்வே பாதுகாப்புக்கு மத்திய அரசு 82% தான் பட்ஜெட் ஒதுக்கியது. பின்பு ஒவ்வொரு வருடமும் இந்த சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில்வே துறையை அதிகப்படுத்துவதற்கு 2,40,000 கோடியை ஒதுக்கிய மத்திய அரசு. ஆனால் ரயில்வே பாதுகாப்பு படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. இரவில் வேலை பார்க்கும் ரயில்வே ஊழியர்களுக்கு ஊதியத்தை கணிசமாகக் குறைத்துள்ளது மத்திய அரசு. இப்படி ரயில்வே ஊழியர்களுக்கு ஊதியத்தைக் குறைத்தால் அவர்கள் எப்படி வேலை பார்ப்பார்கள்? மேலும், ரயில்வேயில் ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு அந்த பணியில் இன்னும் அமர்த்தப்படாமல் இருக்கின்றார்கள். ஆகவே இந்த 300 பேர் குடும்பத்தின் பரிதவிப்புக்கு மத்திய அரசின் அலட்சியப்போக்கு தான் காரணம்.
சிக்னல் தொடர்பாகத் தான் விபத்து நடந்துள்ளது. இது பற்றி சிபிசிஐடி விசாரணைக்குப் பரிந்துரை செய்திருக்கிறோம். அதற்குள் ஏன் பதவி விலக வேண்டும் என்று கூறி அரசியல் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று மத்திய அரசு கூறுகிறதே?
இந்த விபத்து நடந்ததுக்கு முக்கிய காரணம் இன்டர்லாக்கிங் சிஸ்டம் தோல்வி அடைந்தது தான். மத்திய அரசு கூறியபோதும் இந்த வழக்கை ஏன் சிபிசிஐடிக்கு கொடுக்க வேண்டும். இன்டர்லாக்கிங் சிஸ்டம் என்றைக்கும் மாறாமல் நிலையாக இருக்கக் கூடிய ஒரு கருவி ஆகும். இந்த இரண்டு இரயில் தண்டவாளத்தில் வரும்போது அதற்கு கொடுக்கக் கூடிய தகவல் சரியாக இருக்கும் பட்சத்தில் இன்டர்லாக்கிங் சிஸ்டத்தில் கோளாறு நடந்துள்ளது. அதற்கு ரயில்வே துறை அமைச்சர் தான் காரணம். ஒரு ரயில்வே துறை அமைச்சர், ரயில்வே பாதுகாப்புக்கு ஏன் பட்ஜெட் சதவீதத்தை குறைத்துள்ளீர்கள் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தவே இல்லையே. மேலும், இந்த விபத்து நடந்ததுக்கு ரயில்வே துறை ஊழியர்கள் தான் காரணம் என்று பழியை அவர்கள் மீது திருப்புவதற்குத் தான் சிபிசிஐடிடம் இந்த வழக்கை ஒப்படைத்துள்ளது மத்திய அரசு.
மேலும் 66,000 கிலோ மீட்டர் உள்ள ரயில்வே துறைக்கு வெறும் 1600 கிலோமீட்டர் உள்ள ரயிலில் தான் பாதுகாப்பு கருவியான கவாச் கருவியை பொருத்தியுள்ளனர். ஒரு விபத்து நடைபெறுவதற்கு முன்னாள் 400 மீட்டருக்கு முன்னரே தகவல் தரக்கூடிய கருவியை பொருத்தப்படாமல் மேம்போக்காக இந்த விஷயத்தைக் கையாளுகிறது மத்திய அரசு. ஒரு நாளைக்கு சுமார் 25 லட்சம் பேர் பயணிக்கும் ரயில்வேயில் கழிப்பறை சுத்தமாக இல்லை. அதில் பயணிக்கும் ஒவ்வொரு பெட்டி பயணிகளுக்கு அவசர மருத்துவக் குழு இல்லை. அல்லது முதலுதவி கருவி கூட இல்லாத ரயில்வேக்கு அமைச்சராக இருந்து என்ன பயன்? தேசத்திற்காகப் பல திட்டங்களைக் கொண்டு வந்து என்ன பயன்? இதற்கு மத்திய அமைச்சர் பதவி விலகுவதே மேல்.
விமான கட்டணங்கள் கடுமையாக உயர்ந்து இருக்கிறதே அதைப் பற்றி ?
வருடத்திற்கு ஒரு கோடி மக்கள் விமானத்தில் பயணம் செய்யும்போது இந்திய அரசிடம் பன்னிரண்டு விமானம் இருந்தது. ஆனால், இன்றைய சூழலில் 12 கோடி மக்கள் பயணிக்கும் இந்த விமானங்களில் இந்திய அரசிடம் வெறும் ஒரே ஒரு விமானம் மட்டுமே உள்ளது. அனைத்து துறைகளையும் இப்படி தனியார்மயமாக்கியதன் காரணமாகத்தான் இன்று ரயில்வே சேவை பற்றாக்குறை ஏற்பட்டபோது விமான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு ஏன் அமைச்சரவை? அனைத்து துறைகளையும் கலைத்து தனியார் துறைகளிடம் கொடுக்க வேண்டியதுதானே? தற்போது கட்டி இருக்கும் நாடாளுமன்றம் பாஜக அலுவலகமா அல்லது ஆர்எஸ்எஸ் மன்றமா? என்று தெரியவில்லை. ஆக மொத்தம் இதனால் பாதிக்கப்படுவது விபத்தில் இறந்து போன 300 பேரும்... அப்பாவி பொது மக்களும் தான்.