தமிழ்நாட்டிலேயே அதிகமான வரலாற்றுச் சின்னங்களும், சான்றுகளும் விரவிக்கிடக்கும் மாவட்டம் புதுக்கோட்டை. புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்தப் பக்கம் போனாலும் வரலாற்றுச் சான்றுகளை காண முடியும். இப்போது புதிய சான்றாக ஆயிரம் ஆண்டு பழமையான பெருமடை கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து விவசாயத்திற்கு உதவிய கல்வெட்டுடன் கூடிய பெருமடைக்கு ஆடிப் பெருக்கில் வாழைமரம் தோரணங்கள் கட்டி வழிபாடுகளும் நடத்தி உள்ளனர் அந்த கிராம மக்கள். அருகிலேயே கண்மாயை காவல் காத்து மடிந்த வீரனை பெருமடை கருப்பர் என்று கிராம மக்கள் கடவுளாக வழிபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா சத்தியமங்கலம் அருகேயுள்ள மேலூர் பாசன கண்மாயில் குமிழிக்காலில் எழுத்துப் பொறிப்பு இருப்பதாக கீரனூர் சேர்ந்த வேளாண் பொறியாளர் என்.நாராயணமூர்த்தி கொடுத்த தகவலையடுத்து, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனரும், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லறிவியல் துறை ஆய்வாளருமான மங்கனூர் ஆ.மணிகண்டன் கல்வெட்டை படியெடுத்து வாசித்துள்ளார். இதில் 'தட்டான் திறமன்' என்பவர் நீர்ப்பாசனக் கண்மாய்க்கு பெருமடைக்கால் அமைத்துக் கொடுத்த தகவல் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் இக்கல்வெட்டு ஆயிரமாண்டுகளுக்கு முற்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லறிவியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் ஆ.மணிகண்டன் கூறியதாவது,
தமிழகத்தில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பாசனக்குளங்கள், கண்மாய்கள், ஏரிகள் உள்ளன. அவற்றில் சுமார் 250 குமிழி கல்வெட்டுகளே இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களில் நீர்ப்பாசன அமைப்புகள் பற்றிய கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் அதிகமான குமிழி கல்வெட்டுகள் புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி பகுதிகளைச் சேர்ந்தவையாக உள்ளன. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 42 கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலனவை புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தலைவர் கரு.ராசேந்திரன் அவர்களால் கண்டுபிடித்து பதிவு செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய கல்வெட்டுகள் பழங்கால பாசனமுறையில் தமிழர்கள் கொண்டிருந்த நீர்ப்பாசன மேலாண்மை நுட்பத்தையும், நீர்ப் பங்கீட்டில் பின்பற்றப்பட்ட சமூக நடைமுறைகளை வெளிப்படுத்துபவையாக உள்ளன.
குமிழிக்கல்வெட்டுகள்:
புதுக்கோட்டையின் கவிநாடு கண்மாயில் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோமாறன் சடையன் என்கிற முதலாம் வரகுணபாண்டியன் என்பவரால் அமைக்கப்பட்ட குமிழி கல்வெட்டு காணப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம் நொடியூரில் உள்ள கல்வெட்டு ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் ஆதித்தன் சோழன் ஆட்சிக் காலத்தில் மங்கல நல்லூர் என்றழைக்கப்பட்ட தற்போதைய மங்கனூரைச் சேர்ந்த இரணசிங்க முத்தரையன் என்பவர் மருதனேரிக்கு குமிழி அமைத்து கொடுத்த கல்வெட்டை சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்து வெளிப்படுத்தியுள்ளோம்.
கம்மாளர்களின் சிறப்பு:
பழங்கால அறிவியல், எண்கணிதம், வானியல் நகர்வுகள் அடிப்படையில் நன்கு தேர்ந்த கட்டுமான அறிவை பெற்றவர்களாகவும் இருந்துள்ளனர். செப்பு, இரும்பு, தங்கம், மரம், கல் என ஐந்து தொழில்நுட்பத்திலும் திறம்பட இயங்கிய கன்னார், கொல்லர், தட்டார், தச்சர், கற்தச்சர் என ஐந்தொழிலை அடிப்படையாக கொண்டவர்களாக சங்க இலக்கியங்களிலும் பழங்கால சான்றுகள் மூலமும் அறிந்து கொள்ள முடிகிறது. பழங்கால உலோக அறிவியலில் கோலோச்சிய கம்மாளர் இனத்தவருள் ஒரு பிரிவினரான பொற்கொல்லர்கள் கல்வெட்டுகளில் தட்டான் என்று அழைக்கப்படுகின்றனர்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள குண்டூர் பெருங்குளத்தில் முதலாம் ஆதித்த சோழன் ஏழாம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டில் குண்டூர் பெருந்தட்டான் மாறன் குவாவன் என்பவர் குமிழி அமைத்துக் கொடுத்த தகவல் பொறிக்கப்பட்டுள்ளது.
தட்டான் என அழைக்கப்படுவோர் சோழர் காலத்தில் பொன்னிலும் வெள்ளியிலும் மணிகளை இழைத்து உருவாக்கிய நுண்கலைஞர்கள் ஆவர். மன்னர் குடும்பத்திற்கான தட்டார்கள் பெருந்தட்டான் என அழைக்கப்பட்டுள்ளனர். இதற்கு சான்றாக திருவையாற்றில் உள்ள முதலாம் இராசேந்திரனின் கல்வெட்டு உலகமகாதேவி ஈசுவரம் கோயில் பணிக்கெனச் சக்கடி சமுதையனான செம்பியன் மாதேவிப் பெருந்தட்டான் அதாவது செம்பியன் மாதேவியருக்கான ஆபரணங்கள் செய்வதை தனிப்பணியாகக் கொண்டவருக்கு தட்டாரக்காணி வழங்கப்பட்டதையும். திரிபுவனியில் உள்ள முதலாம் இராசாதிராசனின் கல்வெட்டு தட்டாரக் காணியாக இரண்டு வேலி நிலத்தினை அரங்கன் கோமாரனான இராசராசப் பெருந்தட்டான் என்பவருக்கு வழங்கப்பட்ட செய்தியைக் கூறுகிறது.
மேலும் தட்டார்களுக்கென தட்டிறை, தட்டோலை, தட்டார் பாட்டம் உள்ளிட்ட வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. உருக்குலைகளுக்கு வரி விதிப்பு செய்த தகவலை புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அரங்குளநாதர் கோவில் கல்வெட்டு தெரிவிக்கிறது.
மேலூர் பெருமடைக்கால் புதிய கல்வெட்டு
புதுக்கோட்டை மாவட்டம் மேலூர் மேலி(ழி)க்கண்மாயின் பெரிய குழுமிக்கருப்பர் கொம்படி ஆலயத்தின் அருகேயுள்ள குமிழிக்கால் கல்வெட்டில், "ஸ்வஸ்தி ஶ்ரீ சிறுவாயி ஞாட்டு மேலூர்த்தட்டான் திறமன் திருவிளப்படிக்கு நட்டுவித்த பெருமடைக்கால்" அதாவது சிறு வாயில் நாட்டு மேலூர் தட்டான் திறமன் என்பவர் இறைவனின் எண்ணப்படி (திரு உளப்படிக்கு) பெருமடைக்கால் நட்டுவித்தாக செய்தி பொறிக்கப்பட்டுள்ளது. இப்புதிய கல்வெட்டு பராந்தகன் காலத்தைய எழுத்தமைதியோடு காணப்படுவதால் ஒன்பதாம் நூற்றாண்டைச்சேர்ந்ததாக கணிக்கலாம். இந்தக் கல்வெட்டின் மூலமாக பொதுமக்களும் தொழில் புரிவோரும் அனைத்திற்கும் அடிப்படையாக இருக்கும் பயிர் தொழிலையும் அதற்கு தேவையான பாசன ஏற்பாடுகளையும் இறைத்தொண்டாக நினைத்து செயற்படுத்தியதை இக்கல்வெட்டின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.
தமிழகத்தில் சோழ, பாண்டியர், வணிக குழுக்கள், உள்ளூர் நிர்வாக அமைப்புகள், உள்ளிட்டோருடன் பொதுப்பணியில் நாட்டமுடைய செல்வந்தர்களும், நீர்நிலைகளை பாதுகாப்பதிலும் புதிய குளங்களை அமைப்பதிலும் பாசன கட்டமைப்புகளை ஏற்படுத்துவதிலும், சீரமைப்பதிலும் பெரும்பங்காற்றி இருக்கின்றனர் என்பதற்கான சான்றாக இக்கல்வெட்டு திகழும் என்றார்.
மேலும் இக்கல்வெட்டு வாசிப்பை உறுதி செய்த மூத்த கல்வெட்டறிஞர் முனைவர் சு.ராஜகோபால், படியெடுக்கும் போது உதவி புரிந்த முருக பிரசாத், ராகுல் பிரசாத், தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் உறுப்பினர் பீர்முகமது ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.