Skip to main content

“உடல் தீண்டல் எதுவும் இல்லை; இது பாலியல் வழக்கல்ல!” -நிர்மலாதேவியை வைத்து விளையாடுவதாக வழக்கறிஞர் குற்றச்சாட்டு!

Published on 05/12/2019 | Edited on 05/12/2019

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் விசாரணை ஒன்றுக்கு ஆஜராகாததால் பேராசிரியர் நிர்மலாதேவியின் ஜாமின் மனு ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து,   அவர்  கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் உள்ளார்.

இந்நிலையில்,  நிர்மலாதேவிக்கு  ஜாமின் கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் 5-ஆம் தேதி  மனு தாக்கல் செய்தார்.  மனுவை விசாரித்த மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி பரிமளா, வழக்கு விசாரணையின்போது நிர்மலாதேவி ஒழுங்காக ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன்  ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.  

 

There is no physical harm- Lawyer of Nirmaladevi  alleges

 

அதன்பிறகு, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற வளாகத்தில் நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

“நிர்மலாதேவி வழக்கில் அவருடைய ஜாமின் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அரசுத்தரப்பில் கடுமையாக ஆட்சேபனை தெரிவித்தார்கள்.  ‘அவர் தலைமறைவாகி விடுவார். அவர் ஒரு மனநோயாளி. அவரை வெளியில் விடக்கூடாது’ என்று கடுமையாக எதிர்த்தார்கள். அப்போது நிர்மலாதேவி தரப்பில் நான்  ‘அவர் நீதிமன்றத்துக்கு ஒழுங்காக வந்து கொண்டிருந்தார். ஒருநாள் அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வரமுடியவில்லை என்று வழக்கறிஞர் மூலமாக இங்கே 317 பெட்டிசன் ஃபைல் பண்ணினார். அரசுத்தரப்பின் நெருக்கடி காரணமாக மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதனால் அவர் நீதிமன்றத்தில் சரண்டர் ஆவதற்காக வந்துகொண்டிருந்தார். அப்போது சிபிசிஐடி போலீசார் வலுக்கட்டாயமாக அவரை இழுத்து கைதுசெய்து மீண்டும் சிறையில் அடைத்தார்கள். அவருக்கு பிணை வழங்க வேண்டுமென்று வாதாடினோம். அவருக்கு பிணை வழங்கப்பட்டிருக்கிறது.

 

lawyer


இந்த வழக்கை இன் – கேமரா – ப்ரசீடிங்ஸ்.. அதாவது, பூட்டிய அறையில் வைத்து விசாரணை நடத்த வேண்டுமென்ற வாதத்தை அரசுத்தரப்பு மீண்டும் மீண்டும் இன்று வலியுறுத்துகிறது. அதற்கு நிர்மலாதேவி தரப்பில் நான்,  ‘இந்த வழக்கு பூதாகரமாக்கப்பட்ட வழக்கு. இது பாலியல் வன்கொடுமை வழக்கல்ல. நோ பாடி டச்சஸ். பாடிகூட டச் ஆகல. பாலியல் வழக்கு கிடையாது. இது பாலியல் வழக்காக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆகவே, பாலியல் வழக்கைத்தான்,  இன் – கேமரா – ப்ரசீடிங்ஸாக..  பாலியல் சம்பந்தப்பட்ட விசாரணை நடத்துவார்கள். இந்த வழக்கு அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வழக்கு. ஆகவே, இன் – கேமரா – ப்ரசீடிங்ஸ் தேவையில்லை என்று வாதாடினேன். அதுபோல், பத்திரிகையாளர்கள் இந்த வழக்கு சம்பந்தமாக, வழக்கின் தீர்ப்பு வரும்வரை எதுவும் செய்தி வெளியிடக்கூடாது என்று அரசுத்தரப்பில் இன்று வாதிட்டனர்.  நிர்மலாதேவி தரப்பில் நான்  ‘பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கின் ஆரம்பமே ஒரு ஆடியோதான். அந்த ஆடியோ வீடியோவாக மீடியாவில் வெளியானதால், இது மீடியா ஆடியோ வழக்கு.  ஆகவே, இந்த வழக்கு குறித்து  தற்சமயம் ஊடகங்களில் செய்தி வெளிவருவதை நிறுத்துவதென்பது, பத்திரிகை சுதந்திரத்தின் மீது இந்த அரசு தொடர்ந்து கை வைக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.’ என்றேன்.  இதற்கு அரசுத்தரப்பில் கடுமையாக ஆட்சேபனை தெரிவித்தார்கள்.  

நிர்மலாதேவி தரப்பில் நான்,  ‘நிச்சயமாக பத்திரிகை சுதந்திரத்திற்கு முழு உரிமை அளிக்க வேண்டும். இதனை மீறுவதென்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. பத்திரிககை சுதந்திரத்தை,கருத்து சுதந்திரத்தைப் பறிப்பது போன்றது. ஆகவே, இந்த வழக்கில் முழு முடிவு வெளிவரும் வரை பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்’ என்று வாதிட்டிருக்கிறேன். இதற்கான முடிவையும் 13-ஆம் தேதி அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்திருக்கிறார். 13-ஆம் தேதி சாட்சி விசாரணை நடைபெறுமென்றும், முதல் சாட்சி விசாரணைக்கு அழைக்கப்படுவாரென்றும், அன்றைக்கு அனைவரும் நீதிமன்றத்திற்கு வரவேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்றைக்கு நீதிமன்றத்திற்கு நிர்மலாதேவி அழைத்து வரப்படவில்லை. அவர் சிறைக்குச் சென்றதிலிருந்து இன்றுவரை அவரைப் பார்ப்பதற்கு யாரையும் சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்கனவே முன்வைத்திருக்கிறேன். இன்றைக்கும் சொல்கிறேன். நேற்று வழக்கறிஞர்களை அனுப்பியிருந்தோம். வழக்கறிஞர் மனுவிலும் அவரைப் பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை. அவருடைய உறவினர்களும் அனுமதிக்கப்படவில்லை.  ஏனென்றால், சிறையில் அவரை வழக்கு சம்பந்தமாக மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதனைச் சொல்வதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன். அது மட்டுமல்ல, நேற்றும் சிறையில் அவர் தாக்கப்பட்டிருக்கிறார். அவர் வந்தால் அவருடைய காயம் தெரிந்துவிடும். வெளியில் சில விஷயங்களைக் கூறிவிடுவார் என்பதற்காக, அவரை இன்று அழைத்து வரவில்லை என்ற குற்றச்சாட்டை பகிரங்கமாக முன்வைக்கிறேன்.

இது தமிழக அரசும், அரசு இயந்திரமும், தமிழக அமைச்சர் ஒருவரும் முழுமையாகத் தங்களது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி இந்த வழக்கிலே ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டையும் வைக்கிறேன். நிர்மலாதேவி  மதுரை சிறையில்தான் இருக்கிறாரா? அல்லது, வெளியில் இருக்கிறாரா? அல்லது, அமைச்சருடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்களா? என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? அந்த அம்மையாரை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்களா என்ற விபரம் எங்களுக்குத் தெரியவில்லை. இது மனித உரிமை சம்பந்தப்பட்ட விஷயம். அவர் ஜாமினில் வெளியில் வந்தபிறகுதான், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கையை - அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்தக்கூடிய அமைச்சர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவோம். மனநல மருத்துவரை அணுகி, நிர்மலாதேவியின்  மனநலம் சரியான பிறகு, அந்த சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்றார்.

தமிழக அரசுக்கும், தமிழக அமைச்சருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்களை ஒவ்வொரு விசாரணையின் போதும்  வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் அடுக்கிக்கொண்டே போகிறார். ஆனால் அரசுத் தரப்பு ஏனோ எந்த ஒரு எதிர்வினையும் ஆற்றாமலேயே  இருக்கிறது.  

 

 

சார்ந்த செய்திகள்