தேசிய ஊரடங்கு இந்த மாதம் 17-ந்தேதி முடிவடையும் நிலையில், மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்டறியும் வகையில் 11-ந்தேதி மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார் பிரதமர் மோடி. இதற்கு முந்தைய கலந்துரையாடலின்போது, முதலமைச்சர்கள் பலருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டவில்லை என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்ததால், இந்த முறை அனைத்து மாநில முதல்வர்களுக்கும் பேசும் வாய்ப்பை வழங்கினார் மோடி.
இதனால் 5 மணி நேரத்தில் முடிய வேண்டிய காணொலி காட்சி விவாதங்கள் 9 மணி நேரம் நீடித்தது. முதல்வர்கள் பலரும் விரிவாக தங்கள் மாநில நிலவரங்களை விவரித்துப் பேசினர். பிரச்சனைகளையும் தேவைகளையும் இந்த விவாதத்தின்போது அனைவரும் முன் வைத்தாலும், மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் பேச்சு அதிரடியாக இருந்திருக்கிறது.
கரோனா விவகாரத்தில் தனது மாநிலத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளையும், நிதி நெருக்கடி சூழல்களையும் விவரித்து பேசிய மம்தா, ஒரு கட்டத்தில், மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பை தருகிறோம். ஆனால், நீங்கள் எங்களை குற்றம்சாட்டுவதிலேயே குறியாக இருக்கிறீர்கள்? கரோனாவை வைத்து எங்களிடம் அரசியல் விளையாட்டை விளையாடுகிறீர்கள். இதனை நாங்கள் அனுமதிக்க முடியாது என ஏகத்துக்கும் பொங்கித் தீர்த்திருக்கிறார். மம்தாவின் இந்த கோபம்தான் தற்போது வடமாநில முதல்வர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கடந்த 2 நாட்களாக பேசு பொருளானது.