Published on 23/09/2019 | Edited on 23/09/2019
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டப் பேரவை தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21 ஆம் தேதி தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து காங்கிரஸ் தமிழ்நாடு தலைவர் கே. எஸ். அழகிரி, சென்னை - அண்ணா அறிவாலயம் சென்று, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க.வும் நாங்குநேரி மற்றும் புதுச்சேரி- காமராஜர் நகர் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் என்றார்.
திமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்டம்பர் 23 -ஆம் தேதி மாலை 6 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் எனவும், போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கான நேர்காணல் செப்டம்பர் 24ஆம் தேதி நடைபெறும் எனவும் திமுக தலைமை அறிவித்துள்ளது.
இதையடுத்து இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பலர் விருப்ப மனு அளித்தனர். பொன்முடி மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம சிகாமணி, திமுக சார்பில் கட்சியின் இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார்.