மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சேலம் சீலநாயக்கன்பட்டியில் ஒரே மேடையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 28) பரப்புரையில் ஈடுபட்டனர்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். அவர் பேசியதாவது, "கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று விட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிற அ.தி.மு.க. ஆட்சி, மத்தியில் இருக்கக் கூடிய பா.ஜ.க. ஆட்சிக்கும், பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் அடிபணிந்து கிடக்கிறது. நீட் தேர்வு, புதிய கல்விக்கொள்கையை கொண்டு வந்து கல்வியைப் பாழாக்கிவிட்டனர். நம் தாய் மொழியான தமிழ் மொழிக்கு ஆபத்து உண்டாக்கும் வகையில் ஹிந்தி மொழியைத் திணிக்கின்றனர்.
தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. ஆகவே, வரும் சட்டமன்றத் தேர்தல் என்பது ஏதோ ஆட்சி மாற்றத்துக்கானது மட்டும் அல்ல. நாங்கள் எல்லாம் வெற்றி பெற்று பொறுப்பேற்க வேண்டும் என்பதற்காக மட்டும் அல்ல. தமிழக மக்களையும், சுயமரியாதையையும் காப்பாற்றுவதற்காகவும், நாம் ஏற்றிருக்கிற உரிமையை நிலைநாட்டுவதற்காகவும்தான் இந்த தேர்தல் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மக்களைப் பற்றி கவலை இல்லை. அவர்களின் நோக்கம் எல்லாம் பணம் தான். ஊழல்தான். கரெப்ஷன், கமிஷன், கலெக்ஷன்தான் குறிக்கோள். அதுதான் இந்த ஆட்சியில் தொடர்ந்து நடந்து வருகிறது.
காவிரி உரிமையை தர முடியாத மத்திய அரசு; அந்த உரிமையைத் தட்டிப்பறிக்க முடியாத மாநில அரசு. இதனால் பாதி தமிழகம் பாழ்பட்டு விட்டது. ஹைட்ரோ கார்பன், மீத்தேன், நியூட்ரினோ, கூடங்குளம் அணு உலைகள், சேலம் - சென்னை 8 வழிச்சாலை என மத்திய அரசு தமிழகத்தை தாக்கக்கூடிய ரசாயனத் தாக்குதலாக இருக்கிறது. மற்றொரு புறம் ஹிந்தி, சமஸ்கிருதம் மொழிகளின் திணிப்பையும் செய்கிறது.
தமிழக அரசுப்பணிகளில் வடமாநிலத்தினரை நியமித்துள்ளனர். இது ஒரு கலாச்சார தாக்குதலாகும். மத்திய அரசு நடத்தும் ரசாயனத் தாக்குதலையும், கலாச்சார தாக்குதலையும் எதிர்க்கக் கூடிய ஆற்றல் தி.மு.க.வுக்கு உண்டு. ஆனால் அ.தி.மு.க.வால் அது முடியாது என்பதை, கடந்த 5 ஆண்டுகளாக நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
தமிழகத்தில் பா.ஜ.க.வால் வேரூன்ற முடியாததால் அ.தி.மு.க.வை மிரட்டி, அச்சுறுத்தி அவர்களின் நிழலில் பயணம் செய்யப் பார்க்கிறார்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடந்திருக்கக் கூடிய எல்லா விஷயங்களிலும் பா.ஜ.க.வின் சதி இருக்கிறது.
ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது, அவருடைய பினாமி வீடுகளிலும், தலைமைச் செயலகத்திலும், டி.ஜி.பி. அலுவலகத்திலும் ரெய்டு நடந்தது. ஆனால் இப்போது தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி பேசும்போது, மத்திய அரசுடன் இணக்கமாக உறவு வைத்திருப்பதால்தான் தேவையான நிதியை மாநில அரசு பெற்றிருக்கிறது என்று ஒரு அபாண்டமான, வடிகட்டின பொய்யைக் கூறி வருகிறார். நான் பழனிசாமியிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்.
அதாவது, தமிழகத்தில் வர்தா புயல் ஏற்பட்டபோது மத்திய அரசிடம் 22 ஆயிரத்து 523 கோடி ரூபாய் கேட்டது. ஆனால், தமிழகத்திற்கு வந்தது 266 கோடி ரூபாய் மட்டுமே. அதேபோல் ஒக்கி புயல் வந்தபோது 9,302 கோடி ரூபாய் கேட்டதில், 133 கோடி ரூபாயும், கஜா புயல் ஏற்பட்டபோது 17,899 கோடி ரூபாய் கேட்டதற்கு 1,147 கோடி ரூபாய் மட்டுமே தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.
மேலும் நிவர், புரெவி புயல் நிவாரணம் கிடைத்ததா? ஜி.எஸ்.டி. மூலம் தமிழகத்திற்கு வரவேண்டிய தொகை வந்ததா? 15- வது நிதிக்கொள்கை முறை நீக்கப்பட்டதா? கரோனா காலத்தில் வர வேண்டிய நிதியாவது வந்து சேர்ந்ததா என்றால் எதுவும் இல்லை. பிறகு எதற்கு அவர்களோடு கூட்டணி?
இளம் தலைவர் ராகுல்காந்தியிடம் உரிமையோடு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இன்றைக்கு இந்தியா ஒரு மதவாத பாசிச கும்பலிடம் சிக்கிக்கொண்டு மூச்சுத் திணறிக்கொண்டு இருக்கிறது. ஆகவே இந்தியாவைக் காக்க வேண்டிய பெரும் கடமை உங்களுக்கு இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் பாராளுமன்றத் தேர்தலாக இருந்தாலும், இப்போது நடக்கின்ற சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி ஒன்று சேர்ந்துள்ளது.
அப்படிச் சேர்ந்த காரணத்தினால் பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பா.ஜ.க.வால் வெற்றி பெற முடியவில்லை. அதேபோல் சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க. ஒரு இடத்திலும் கூட வெற்றி பெறாது என்ற நிலைதான் நிச்சயம் வரப்போகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் 37 சதவீதம் மட்டுமே வாக்குகளைப் பெற்று பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியில் உள்ளது. அதேசமயம் 63 சதவீத மக்கள் பா.ஜ.க.வை எதிர்த்து பல்வேறு கட்சிகளுக்கு பிரித்து வாக்குகளை அளித்து இருக்கிறார்கள். ஆகவே தமிழ்நாட்டைப் போல், இந்திய அளவில் கூட்டணி அமையவில்லை. எனவே காங்கிரஸ் கட்சித் தலைவராக நீங்கள் பொறுப்பேற்க வேண்டும்.
தி.மு.க. தலைவர் கலைஞர் மறைந்தபோது, அவருடைய உடலை அடக்கம் செய்ய அண்ணா நினைவிடம் அருகே 6 அடி இடம் கொடுக்க அதிமுக அரசு விரும்பவில்லை. எப்படி அனுமதி கொடுக்க முடியும் என்று கேட்டார்கள். பிரதமர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் என்னை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்கள். ஏதாவது உதவி செய்ய வேண்டுமா? என்று கேட்டனர். அதற்கு நான் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அண்ணாவின் சமாதி அருகே கலைஞரின் உடலைப் புதைக்க வேண்டும் என்றும், அதுதான் அவருடைய கடைசி ஆசை என்றும் தெரிவித்தேன்.
தமிழக முதல்வராக 5 முறை மட்டும் இல்லை; நாட்டிற்கு ஜனாதிபதி, பிரதமர்களை உருவாக்கிய தலைவருக்கு ஒரு இன்ச் இடம் கூட கொடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் கவலைப்படவில்லை. எனவே கலைஞரின் உடலை புதைப்பதற்குக்கூட 6 அடி இடம் கொடுக்க மறுத்தவர்கள், தமிழகத்தில் இனியும் அவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டுமா? என்பதையும் அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்" இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
முன்னதாக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பாலகிருஷ்ணன், ஜவாஹிருல்லா, வீரமணி, திருமாவளவன், முத்தரசன், வைகோ, கே.எஸ்.அழகிரி ஆகியோர் பேசினர். இதையடுத்து காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல்காந்தி சிறப்புரையாற்றினார்.