‘குன்று இருக்குமிடமெல்லாம் குமரன் இருக்குமிடம்’ என்பார்கள். அதுபோல், மயிலம் என்றாலே முருகன் கோயில்தான் பிரபலம். மலைக்கு கீழே மயிலியம்மன் என்ற அம்மன் கோயிலும் உள்ளது. முருகன் கோயில் பலருக்கும் தெரியும், மயிலியம்மன் கோயில் பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. இந்த மயிலியம்மன் பெயராலேயே இந்த ஊருக்கு மயிலம் என்ற பெயர் உருவானதாக கூறுகிறார்கள் அவ்வூர் மக்கள்.
நகராட்சி, பேரூராட்சி இல்லாத முழுக்க முழுக்க கிராமங்களைக் கொண்ட தொகுதி மயிலம். அப்படிப்பட்ட இந்தத் தொகுதியில் திமுக சார்பில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றிபெற்ற டாக்டர் மாசிலாமணியையே திமுக தலைமை மீண்டும் களத்தில் இறக்கியுள்ளது. டாக்டர் மாசிலாமணி கரோனா காலத்தில் ஊர் ஊராகச் சென்று மக்களுக்கு நிவாரணம் வழங்கியது, இவருக்கு மிகுந்த நல்ல பெயர் பெற்றுத்தந்துள்ளது. அதேபோல், அரசு திட்டங்களை தொகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கும் கொண்டு சென்று சேர்த்துள்ளார். மிகவும் அமைதியான நல்ல மனிதர், அதனால் கட்சி கடந்து பலரும் இவரை நேசிப்பார்கள். அப்படிப்பட்டவர் மீண்டும் களத்தில் மக்களை சந்திக்கிறார் என்ற பேச்சு தொகுதி வாக்காளர்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.
அதிமுக கூட்டணி சார்பில் பாமக இந்த தொகுதியைப் பெற்று, அன்புமணி ராமதாசுக்கு நெருக்கமானவரும், கட்சியின் மாநில துணைப் பொறுப்பில் இருப்பவருமான திருவாமாத்தூர் சிவகுமாருக்கு வழங்கியுள்ளது. இந்தத் தொகுதி மீது பாமக முன்னோடிகள் பலர் கண்வைத்திருந்தனர். ஆனால் சிவகுமார், தலைமை மூலம் காய் நகர்த்தி தொகுதியைத் தட்டிச்சென்றுள்ளார். இந்தமுறை அதிமுக கூட்டணி பலத்தின் மூலம் பாமக வெற்றிபெற வேண்டும் என்பதற்காக பரபரப்போடு கூட்டணிக் கட்சி தொண்டர்களுடன் ஓட்டு வேட்டை நடத்தி வருகிறார் சிவக்குமார்.
திமுக, டாக்டர் மாசிலாமணி திண்டிவனத்தில் குடியிருந்தாலும், அவரது சொந்த ஊர் மயிலம் தொகுதியில் உள்ளது. உற்றார் உறவினர்கள், சுற்றத்தார் என்று பல கிராமங்களில் பரந்து விரிந்து இருக்கின்றனர். அவர்கள் கட்சி பாகுபாடு பார்க்காமல் டாக்டருக்கு வாக்களிப்பார்கள் என்று உடன்பிறப்புக்கள் கூறுகின்றனர். அதோடு காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் ஆதரவும் உள்ளதால் இந்தமுறை வெற்றிபெறலாம் என்று மாசிலாமணியும் மிகுந்த நம்பிக்கையோடு மக்களை சந்தித்து வருகிறார்.
இவர்களோடு போட்டியில் உள்ளனர் தினகரன் கட்சி கூட்டணியில் உள்ள தேமுதிக வேட்பாளர் சுந்தரேசன், நாம் தமிழர் கட்சி சார்பில் உமா மகேஸ்வரி, பாரிவேந்தர் பச்சமுத்துவின் ஐஜேகே சார்பில் ஸ்ரீதர் உட்பட பலர் களத்தில் உள்ளனர். இருந்தும் பாமக வேட்பாளர் சிவகுமாருக்கும் திமுக வேட்பாளர் டாக்டர் மாசிலாமணிக்கும் இடையேதான் பிரதான போட்டி நடந்து வருகிறது.