தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாட்டை அரசியல் கட்சிகள் தீவிரமாக செய்து வருகின்றன. ஆளும் அதிமுக, திமுக கட்சிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு தற்போது தொகுதிகளை ஒதுக்கியுள்ளார்கள். திமுக தரப்பில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், விசிகவுக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நடப்பு அரசியல் தொடர்பாக பல்வேறு கேள்விகளை திராவிட ஆதரவாளர் நாஞ்சில் சம்பத்திடம் நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,
காங்கிரஸ் கட்சிக்கு அதிகமான தொகுதிகளை திமுக தரப்பு தரவில்லை என்ற ஆதங்கம் அக்கட்சியில் இருந்து வெளிப்பட்டு வருகிறது. இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள். காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதி என்பது போதுமான ஒன்றாக நீங்கள் கருதுகிறீர்களா?
கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 40 தொகுதிகளுக்கும் மேல் கொடுத்தார்கள். 8 தொகுதிகளில் அவர்கள் வெற்றி பெற்றார்கள். தற்போது அவர்களுக்கு 25 தொகுதிகளை ஒதுக்கியுள்ளார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது. திமுக அவர்களை சரியான முறையில்தானே கையாள்கிறார்கள். இதில் கண்ணீர் வடிக்க வேண்டிய தேவை எங்கிருக்கிறது.
காங்கிரஸ் கட்சி தொடர்பாக பேசிய நடிகர் கமல் அவர்களும், பாஜக, காங்கிரஸ் இல்லாத இந்தியாவை அமைக்க வேண்டும் என்ற திட்டம் போடுகிறார்கள். அதற்கு தற்போது திமுக உறுதுணையாக இருக்கிறது. எனவே திமுகதான் பாஜகவின் பி டீம் என்று கூறியுள்ளார். இந்தக் கருத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். தேனியில் போட்டியிட்ட இளங்கோவன் மட்டும்தான் தோல்வி அடைந்தார். 8 நாடாளுமன்ற உறுப்பினர்களை திமுக காங்கிரஸ் கட்சிக்குப் பெற்று கொடுத்துள்ளது. இன்றைக்கு காங்கிரஸ் கட்சிக்கு 40க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்கு மிக முக்கியக் காரணம் திமுக என்கிற கட்சி. இதை அவர்கள் மறந்துவிட முடியாது. இந்தியாவில் யாரும் ராகுலை பிரதமர் வேட்பாளர் என்று சொல்ல முன்வராதபோது, திமுக தலைவர் ஸ்டாலின் ராகுல்தான் எங்களின் பிரதமர் வேட்பாளர் என்று துணிந்து அறிவித்தார். திமுகவின் இந்த முன்மொழிவை அனைத்து மாநில கட்சிகளும் ஏற்றுக்கொண்டிருந்தால் காங்கிரஸ் கட்சிக்கு இந்தப் பின்னடைவு வந்திருக்காது. பிஜேபி இந்த அளவுக்கு வெற்றியைப் பெற்றிருக்காது. காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பதை ஒரு கட்சி சொல்லக்கூடாது. ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு தந்த திமுக மீது தவறான விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. காங்கிரஸின் இருப்பை திமுக குறைத்ததாக கமல் கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இதே கமல் திமுக தொடர்பாக மற்றொரு குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்கிறார். சமூகநீதி பேசும் திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு வெறும் 6 தொகுதிகளைக் கொடுத்தது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். ‘தம்பி திருமாவளவன் எங்களுடன் இருக்க வேண்டியவர், அவர் எங்களுடன் விரைவில் வருவார்’ என்றும் பேசி இருக்கிறார். இதை எப்படி பார்க்கிறீர்கள்?
திருமாவளவன் அரசியல் செறிவு மிக்கவர்; தமிழக அரசியல் களத்தை நன்கு அறிந்தவர்; கொள்கை சார்ந்த அரசியலை ஆரம்பகாலம் தொட்டே மிகச் சரியாக செய்து வருபவர். திருமாவளவனை எல்லாம் கமல் கூப்பிடக்கூடாது. ஏனென்றால் கமல் இருக்கும் இடம் வேறு, திருமாவளவன் இருக்கும் இடம் வேறு. அழைத்ததே முதலில் பெரிய தவறு. ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்குத் தலைமை ஏற்று செயலாற்றி வருபவர் திருமாவளவன். எனவே கமல் அவரை அழைப்பதே மிகப்பெரிய தவறு. திருமா கொள்கை இல்லாதவர் அல்ல, அவர் சமூகநீதி பேசுபவர், மக்களுக்காக போராடுபவர். எனவே கமலின் இந்த அழைப்பைப் புறந்தள்ளிவிட்டு அவர் செல்வார்.
அவர் எதற்காக கட்சி தொடங்கியுள்ளார். ஊழலை ஒழிக்கப் போகிறேன் என்று கூறுகிறார். ஆட்சிக்கு வந்தால்தானே அதைக் கூற முடியும். அடுத்து திமுகவை எதிர்க்கிறார். 10 ஆண்டு காலம் ஆட்சியில் இல்லாத ஒரு கட்சியை ஏன் எதிர்க்கிறார். அவர் திமுகவை ஏன் எதிர்கிறார் என்றால், திமுக ஆட்சிக்கு வர போகிறது, அதனால் அதனை எதிர்க்கிறார் என்பது மட்டுமே உண்மை. 10 ஆண்டு காலமாக ஒரு கட்சி ஆட்சியில் இருக்கிறது. 22 ரூபாய் பல்பை ஆயிரக்கணக்கான ரூபாய் என்று பில் போடுகிறார்கள். 30 ரூபாய் முக கவசத்துக்கு 300 ரூபாய் என்று பில் போடுகிறார்கள். பச்சையாக பட்டவர்த்தனமாக இவ்வளவு கொள்ளைகள் அடித்துக்கொண்டிருக்கிறார்கள். இதைப்பற்றி அவர் அவர் பேசியிருக்கிறாரா? திருமணம் ஆகி குழந்தை இல்லை, என்ன காரணம் என்று கேட்டால், எதிர்வீட்டுக்காரனைக் கைகாட்டுவதைப் போல் இருக்கிறது கமலின் பேச்சு. ஆட்சியில் இல்லாத திமுகவை தொடர்ந்து அவர் ஏன் விமர்சனம் செய்து வருகிறார். இதிலேயே அவர் யாருக்கு வேலை செய்கிறார் என்பது நமக்கு புலப்படுகிறது.