ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 30 வாகனங்கள் அங்கும் இங்கும் கடந்து செல்லும் பரபரப்பு சாலை அது. இந்த சாலையில் கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த விபத்துகளில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2000க்கும் மேற்பட்டோர் கை, கால்களை இழந்துள்ளனர். இப்படி ஒவ்வொரு நாளும், இந்த சாலையில் நடைபெறும் விபத்துக்களால் வாகன ஓட்டிகளின் மரண ஓலமும் அவர்களை அள்ளிக்கொண்டு போகும் 180 ஆம்புலன்சின் அலறல் சத்தமும் ஓயாமல் கேட்டுக்கொண்டே இருக்கும் அளவிற்கு இது ஒரு மரண சாலையாக மாறியுள்ளது. இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் உயிரோடு வீடுபோய் சேர வேண்டுமென பிரார்த்தனை செய்ய சொல்லி சாலையில் எச்சரிக்கை பலகை வைக்கும் அளவிற்கு இது கொடூரமான சாலையும் கூட.
அப்படிப்பட்ட சாலை எங்கு உள்ளது என்கிறீர்களா? கடலூர் மாவட்டம் தொழுதூர் - விருத்தாசலம் பகுதியில் தான் இந்த நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் தான் பெண்ணாடம் - திட்டக்குடி நகரம் உள்ளது. இந்த 45 கிலோமீட்டர் தூர நெடுஞ்சாலையே அதிக அளிவிலான விபத்து ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக திகழ்கிறது.
இப்படி, அளவிற்கு அதிகமான உயிர்பழி வாங்கி வரும் இந்த சாலையில் தான் இறையூர் அம்பிகா சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலைக்கு தினமும் 600க்கும் மேற்பட்ட வாகனங்கள் கரும்பு ஏற்றி வந்து செல்கிறன.
இதேபோல், இந்த சாலை அருகிலேயே ராம்கோ, இந்தியா சிமெண்ட் நிறுவனங்களின் நான்கு சிமெண்ட் ஆலைகள் இயங்கி வருகின்றன. இதனால், இங்கு சராசரியாக தினசரி 2000க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள், லாரிகள் வந்து செல்கின்றன.
இவையில்லாமல் 100க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகள் செல்லும் வாகனகங்கள், இவைகளோடு மக்கள் பயணிக்கும் அரசு தனியார் பேருந்துகள், டூவிலர்கள், கார்கள் இப்படி நாம் சொல்லும் போதே மூச்சு வாங்குகிறது என்றால் இந்த சாலையில் பயணம் செய்பவர்கள் நிலை எப்படி இருக்கும்?
நக்கீரன் இதழ் வாசகர் விடுதி வார்டன் பணி செய்த கருணாநிதி, ஓய்வு பெற்ற ஆசிரியர் மாணிக்கம், ஆவினங்குடி பாபு, தேவேந்திரன், ராஜுவ்காந்தி, பாலகிருஷ்ணன், பெரியசாமி என இந்த சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன எண்ணிக்கை போலவே இந்த சாலையிலும் வாகனங்கள் அதிவேகமாக பறக்கின்றன. ஆனால் அவ்வளவு வாகனங்கள் அதிவேகமாக செல்லும் அளவுக்கு ஏற்றசாலையா என்றால்? நிச்சயமாக இல்லை. இந்த நெடுஞ்சாலையானது, கிராம பஞ்சாயத்து சாலை போல குறுகிய சாலையாக திகழ்கிறது.
இப்படிப்பட்ட சாலையை அகலப்படுத்தக் கோரி பல கட்சிகள், இயக்கங்கள் தொடர்ந்து போராடி ஓய்ந்து போய்விட்டன. மோட்டார் வாகன அதிகாரிகள், போக்குவரத்து போலீசார், சட்டம் ஒழுங்கு போலீசார் என ஏகப்பட்ட அதிகாரிகள், அலுவலகர்கள் இருந்தும் போதிய அளவு கண்காணிப்பு, ஆய்வு பணிகளை மேற்கொள்வதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஆனால் அதிகாரிகளோ, கடந்த 2009ம் ஆண்டே வாகனப் பெருக்கத்தைக் கணக்கிட்டோம். இந்த சாலை போக்குவரத்துக்கு ஏற்ற சாலையில்லை என்பதை அறிந்து, சாலை விரிவாக்கம் செய்வதற்கான திட்டங்களை தயார் செய்து அனுப்பியுள்ளோம் என்கிறார்கள்.
புகார்களை சொல்லி பல ஆண்டுகளாகிறது. சாலையில் ஒரு சின்ன மாற்றம் கூட நடைபெறவில்லை. இந்த கொலைகாரச் சாலையை மக்கள் பாதுகாப்பாக செல்லக்கூடிய சாலையாக மாற்ற வேண்டியது அரசின் கடமையே. ஆனால் இத்தனை ஆண்டுகளில் திமுக, அதிமுக என ஆட்சி மாற்றம் மட்டுமே நிகழ்ந்துள்ளது. இந்த சாலையில் எந்த மாற்றமுமில்லை. எப்போது தான் அமைச்சர்களும், அதிகாரிகளும் இந்த சாலையை விரிவுப்படுத்த போகிறார்கள் என்று மனமுடைந்து குமுறுகிறார்கள் இப்பகுதி மக்கள்.
தமிழக அளவில் 2017ஆம் ஆண்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் 16,157 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சாலை பாதுகாப்பு கூட்டத்தில் தெரிவித்துள்ளார். இப்படியிருக்க, இதுபோன்று அதிகரித்து வரும் சாலை விபத்துகளை தடுக்க, தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக விபத்துக்கள் ஏற்படும் பகுதிகள் குறித்து அறிந்து, அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலை பாதுகாப்பு குழு வலியுறுத்துகிறது.