மாற்று அரசியலை முன்வைத்து தேர்தல் களத்தை சந்திக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், கோவை தெற்கு தொகுதியில் களமிறங்குகிறார். அக்கட்சியின் அண்ணாநகர் தொகுதியின் வேட்பாளராக களமிறக்கப்பட்டிருக்கும் அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகராக பணியாற்றிய மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவர் பொன்ராஜை நக்கீரனுக்காக சந்தித்தோம்.
தேர்தல் களம் எப்படி இருக்கும் என கணித்திருக்கிறீர்கள்?
தமிழகத்தை நீண்ட நெடிய வருடங்களாக கோலோச்சிய அரசியல் தலைவர்கள் தற்போது இல்லை என்பதால் ஒரு வெற்றிடமும் வெறுமையும் இருப்பதாக பொதுமக்கள் நினைக்கின்றனர். தங்களுக்கான சரியான ஒரு தலைவரை, நேர்மை யான முதல்வரை, ஊழலற்ற ஆட்சியை தேர்வு செய்ய வேண்டும் என்கிற சிந்தனை அவர்களுக்கு இருக்கிறது. அதனால் ஒரு மாற்று தலைவரை தேடு கிறார்கள். அதற்கான முதல்படியாக இந்த தேர்தல் களம் இருக்கப் போகிறது. கடந்தகால தேர்தல்களில் தி.மு.க.வுக்கு மாற்று அ.தி.மு.க.; அ.தி.மு.க. மாற்று தி.மு.க. என்கிற சிந்தனையில் அவர்களை ஆட்சியில் அமர்த்தினர். ஆனால், மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் ஏமாற்றமே மிஞ்சியது. இந்தமுறை அந்த தவறை செய்யமாட்டார்கள்.
மாற்று அரசியலுக்கான தலைவர் கமல்தான் என்கிறீர்களா?
அ.தி.மு.க., தி.மு.க. இரண்டு கட்சிகளுக்குமே தொலைநோக்கு சிந்தனை இல்லை. அதற்கான ஆற்றலும் அக்கட்சிகளின் தலைவர்களுக்கு இருப்ப தாக எனக்குத் தோன்றவில்லை. தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்து வாக்குகளை வாங்கி ஜெயித்துவிட லாம் என்பது மட்டுமே அவர்களின் குறிக்கோள். இந்தச்சூழலில், ஆரோக்கியமான அரசியலையும், ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்களையும், அழுத்த மான அரசியல் முடிவுகளையும் முன்னெடுத்துச் செல்லும் கமல்ஹாசன்தான் மாற்று அரசியலுக்கான தலைவர்.
தமிழகத்தின் அரசியல் கூறுகளாக இருக்கும் சமூகநீதி, மதச்சார்பின்மை, மாநில சுயாட்சி, இட ஒதுக்கீடு, மொழி உரிமை, இன நலன், வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் இதுவரை தெளிவாக எந்தக் கருத்தையும் கூறாத கமல்ஹாசன், எப்படி மாற்று அரசியலுக்கான தலைவராக இருக்க முடியும்?
மேம்படுத்தப்பட்ட சமூகநீதியை உருவாக்குவது, இழந்த மாநில சுயாட்சியை மீட்டெடுப்பது குறித்த தெளிவான சிந்தனை கமல்ஹாசனுக்கு உண்டு. அதனடிப்படையில் பலமுறை பேசியிருக் கிறார். மதச்சார்பற்ற அரசியலைப் பேசக்கூடிய திராவிடக் கட்சிகள்தான் தங்களுடைய கட்சிப் பதவிகளிலும், தேர்தல் சீட் வழங்குவதிலும் சாதி அரசியலை புகுத்தி சமூகத்தை குட்டிச்சுவ ராக்கி வைத்திருக்கின்றன. தமிழகத்தில் 8 கோடி பேரில் 14 லட்சம் பேருக்குத்தான் அரசு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. இது வெறும் 2 சதவீதம். அந்த 2 சதவீதத்தில்தான் 69 சதவீத இட ஒதுக்கீட்டை செயல்படுத்துபவர்களாக இருக்கிறோம். அப்படி யானால், வேலைவாய்ப்புகளை பெற தகுதியான மீதியுள்ள 2 கோடி பேருக்கு சமூக நீதி எங்கே உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது? இதுபற்றி கமல் சிந்தித்துள்ளார். அதேபோல நீடித்த பொருளா தார வளர்ச்சியை உருவாக்குவதன் மூலமே வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பவர்களை செழுமைக் கோட்டுக்கு கொண்டு வர முடியும். அத்தகைய பொருளாதார நீதியை பெறுகிறபோது அரசியல் நீதியும் சமூகநீதிக்குமான அங்கீகாரம் கிடைத்துவிடும். இதுபோன்ற அனைத்து அரசியல் கூறுகளில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இவற்றை உயர்த்திப் பிடிப்பதால் மாற்று அரசியலுக்கான தலைவர் தகுதி கமலுக்கு உண்டு.
கமல்தான் மாற்று அரசியலுக்கான தலைவர் எனில் அவரிடம் நீங்கள் இணைவதற்கு ஏன் இவ்வளவு கால தாமதம்? ரஜினியின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்ததாலா?
அரசியலுக்கு வருவதை ரஜினி உறுதிப்படுத்திய காலத்தில் என்னை அழைத்துப் பேசினார். அவர், சிஸ்டத்தை முழுமையாக மாற்ற வேண்டும் என விரும்பினார். ஒவ்வொரு விசயத்திலும் ஆழ்ந்து அவர் என்னிடம் கேட்ட கேள்விகள், மிக வலிமை யானவை. அரசியலுக்கு வர நினைத்த ரஜினியின் முடிவுக்கு ஒரு வகையில் என்னுடைய சந்திப்பும் உறுதுணையாக இருந்திருக் கிறது. அதனால் அவருக்காக நான் காத்திருந்ததாக ஒரு தோற்றம் உருவானது. அவரால் அரசியலுக்கு வரமுடியாமல் போன நிலையில், கமல் என்னை அழைத்தார். விவாதித்தோம். "நாம் எல்லோரும் சேர்ந்து அரசியல் மாற்றத்தை கொண்டு வர முடியும்' என நம்புகிறேன் என்றார். அவருக்கு உறுதுணையாக என்னை மக்கள் நீதி மய்யத்தில் இணைத்துக் கொண்டேன்.
சுயசார்பு தன்மையை உயர்த்திப் பிடிக்கும் நீங்கள் திரைக் கவர்ச்சி அரசியலோடு(கமல்) இணைந்து பொது வாழ்விற்கு வந்திருப்பது உங்களுக்கு நெருடலாகத் தெரியவில்லையா?
தமிழக அரசியலில் அறிவுஜீவி களுக்கான இடம் வெற்றிடமாக இருப் பதை உணர்பவர் கமல். அறிவுஜீவிகளை ஒருங்கிணைத்து, தான் நினைக்கிற மாற்று அரசியலை நிலை நிறுத்த பொதுவாழ்க்கையில் இறங்கியிருக்கும் கமல்ஹாசன், தனது அரசியலை ஒரு வேள்வி யாகவே நடத்துகிறார். அவரது வேள்வியில் ஈர்க்கப்பட்ட எனக்கு அவர் மீதான திரைக் கவர்ச்சி என்னை ஆக்கிரமிக்கவில்லை. அனைத்து தளங்களிலுமுள்ள வல்லுநர்களுடன் அவர் விவாதித்து, மிகச்சரியானதை தேர்ந் தெடுத்து அதனை முன்னெடுத்துச் செல்லும் கமலும் சுயசார்பு தன்மையாளர்தான். அதனால் எனக்கு நெருடல் இல்லை.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு திட்டங்களான 7 அம்ச திட்டங்களை எப்படி பார்க்கிறீர்கள்?
திராவிட ஆட்சிக்காலத்தின் ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும் தமிழகத்தின் பொருளாதாரம் 4 மடங்காக இருந்து வருகிறது. வரிவருவாயை வைத்தே திட்டங்களை கொண்டுவந்ததால் 4 சதவீத பொருளாதார வளர்ச்சியை அவர்களால் தாண்டமுடியவில்லை. இதனால் அரசின் கடன் 5,70,000 கோடியாக உயர்ந்ததுதான் மிச்சம்! ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட விஷன்-2023 இலக்கினை எடப்பாடி அரசால் அடைய முடியவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் அடுத்த 10 ஆண்டுகளில் அதாவது 2031-க்குள் தமிழகத்தின் பொரு ளாதார வளர்ச்சியை 35 லட்சம் கோடியாக உயர்த்துவோம் என்கிற இலக்கினை அடைவதற்கான 7 அம்ச செயல்திட்ட கொள்கைகளை பிரகடனப்படுத்தியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதனை கணக்கிட்டால் அடுத்த 10 ஆண்டுகளுக்கான பொருளாதார வளர்ச்சி என்பது 1.75 மடங்காகத்தான் இருக்கும். கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரால் காட்டப்பட்ட 4 மடங்கு பொருளாதார வளர்ச்சியோடு ஸ்டாலினின் பொருளாதார வளர்ச்சி இலக்கை ஒப்பிடும்போது ஸ்டாலின் பாதி கிணறைக் கூட தாண்டவில்லை. இந்தச்சூழலில் ஸ்டாலின் முதல்வரானால் தமிழகத்தின் கடன் சுமை அதிகரிப்பதை தவிர வேறு எந்த பொருளாதார வளர்ச்சியும் இருக்கப் போவதில்லை.
ஐந்து லட்சம் கோடி கடனில் இருக்கும் தமிழகத்தை கமல்ஹாசன் முதல்வரானால் மீட்டெடுத்து விடுவாரா?
அதற்கான செயல்திட்டங்கள் எங்களிடம் இருக்கிறது. 20 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடுத்த 5 ஆண்டுகளில் கொண்டுவர முடியும். அதன்மூலம் 73 லட்சம் கோடியாக தமிழகத் தின் வருவாயை உயர்த்த முடியும். வேளாண்மை, எரிசக்தி, கல்வி, சுகாதாரம், மின்சாரம், உள்கட்டமைப்பு என பல்வேறு துறை களுக்குமான இலக்கை நிர்ணயிக்கும் செயல் திட்டங்கள் எங்க ளிடத்தில் உண்டு. குறிப்பாக, அப்துல்கலாம் அவர்களின் கனவை நிறைவேற்றினாலே 20 சதவீத வளர்ச்சியை எளிதாக அடைய முடியும். அப்துல்கலாமின் லட்சியங்களைத் தாங்கி அவரது நினைவிடத்திலிருந்து கட்சியை துவக்கிய கமல்ஹாசன் எங்களைப் போன்றவர்களின் உறுதுணையுடன் மீட்டெடுப்பார்.
வாக்கு வங்கி அரசியல்தான் வெற்றி-தோல்வியை தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கும் நிலையில் வாக்குவங்கியில் பின்தங்கியிருக்கும் மக்கள் நீதி மய்யத்தால் ஆட்சி கனவு எப்படி சாத்தியம்?
அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கியை கடந்து வாக்களிக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை 1 கோடியே 50 லட்சம். இதில் 30 சதவீதத்தை அ.தி.மு.க.வும், 20 சதவீதத்தை தி.மு.க.வும் பெற்றுவிடும். அதுபோக, 20% சதவீதத்தை மக்கள் நீதி மய்யம் பெறும். எந்தக் கட்சிக்கும் வாக்களிக்காதவர்களென 30% பேர் இருக்கின்றனர். இந்தமுறை அவர்களில் 20% பேர் மக்கள் நீதி மய்யத்தின்மீது நம்பிக்கை வைத்து வாக்களிப்பீர்கள். அந்த வகையில் எங்களால் 120 இடங்களில் வெற்றிபெற முடியும். இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்.சிடம் அமித்சா கொடுத்த ஒரு ரிப்போர்ட் டில் 67+46+121 என இருந்துள்ளது. இதில் 121 என்பது இழுபறி. ஆக, 121 தொகுதிகளிலும் மக்கள் மாற்றத்தை எதிர்பார்க் கிறார்கள். ஆனால், மாற்றத்திற்கான தலைவர்களாக ஸ்டாலின், இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.சை மக்கள் பார்க்கவில்லை. அதனால் அவர்களின் எதிர்பார்ப்பு மக்கள் நீதி மய்யம்தான்.