1953ஆம் ஆண்டு அண்ணா தலைமையில் சிதம்பரத்தில் நடந்த மாநாட்டில் டால்மியாபுரம் என்கிற பெயரை எடுத்துவிட்டு மீண்டும் கல்லக்குடி என்கிற பூர்வீக பெயரையே வைக்க வேண்டும் என்று தீர்மானம் போடப்பட்டது. அந்த பெயரை மாற்றக் கோரி நடந்த போராட்டத்தில் கலைஞர், கண்ணதாசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். போராட்டத்தில் பங்கேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரை அடுத்துள்ள கீழையூர் கிராமத்தைச் சேர்ந்த ராமையா. தற்போது அவருக்கு 96 வயது.
வயோதிகத்தால் உடல் நலிந்து ஒவ்வொரு நொடியும் கலைஞரின் பெயரை கூறியபடியே படுத்திருக்கிறார். அவரது மனைவியும் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருக்கிறார். அவரது பிள்ளைகள் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு பெற்றோரை கவனித்து வருகின்றனர் என்றும், இன்று பெருத்த சோதனையில் வறுமைக் கோட்டிற்கு கீழே அவரது குடும்பம் உள்ளது, திமுக தலைவர் இதனை கவனித்தில் கொள்ள வேண்டும் என்றும் கீழையூர் ராமையாவுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் தெரிவித்ததாக நக்கீரன் 2021 அக்.30-நவ.02 இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
கீழையூர் ராமையா குறித்து நக்கீரன் இதழில் செய்தி வெளிவந்த சில மணி நேரத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் உத்தரவை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினருமான நிவேதா எம்.முருகன், கீழையூரில் உள்ள இராமையா அவர்களை சந்தித்து உடல்நலம் விசாரித்துவிட்டு ருபாய் ஒரு லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
நிகழ்வின் போது மாவட்டக் கழக துணைச் செயலாளர் மு.ஞானவேலன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் அப்துல்மாலிக், பிஎம் அன்பழகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பிஎம் ஸ்ரீதர், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் VSN செந்தில், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தென்னரசன் ஆகியோர் உடனிருந்தனர்.