ஜெயலலிதாவின் சொத்துகள் யாருக்குச் சொந்தம் என்ற கேள்வி மிக நீண்ட காலமாகத் தமிழகத்தில் கேட்கப்படுகின்ற ஒரு கேள்வியாகத் தொடர்ந்து இருந்து வருகின்றது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அந்தச் சொத்துத் தனக்குத்தான் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு ஜெயலலிதாவின் வீட்டை நினைவில்லமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று தீபாவை நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில் இந்த வழக்குத் தொடர்பாகவும், எதிர்கால நடவடிக்கை தொடர்பாகவும் அவரிடம் பல்வேறு கேள்விகளை நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
ஜெயலலிதா இறப்புக்குப் பிறகு கடைசி நேர காரியத்தைச் செய்யக்கூட என்னை அனுமதிக்கவில்லை என்று நீங்கள் ஏற்கனவே கூறியிருந்தீர்கள். ஆனால் உங்கள் சகோதரர் தானே எல்லா காரியங்களையும் செய்தார்? உங்களை மட்டும் புறக்கணிக்க என்ன காரணம் இருக்கிறது?
இந்தக் கேள்விக்கு எனக்கும் கூட விடை தெரியவில்லை. என்ன காரணத்துக்காக புறக்கணித்தார்கள் என்று இன்று வரை எனக்குத் தெரியாது. அத்தையுடன் அவர்கள் 80களின் இறுதியில் இருந்து இருந்தார்கள். அதன்பிறகு 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். அதற்கான காரணம் இன்றைக்கு வரைக்கும் யாருக்கும் தெரியாது. மீண்டும் அவர்கள் வந்தாலும் இந்த வெளியேற்றம் என்பது யாரும் எதிர்பாராமலும், அதிர்ச்சியாகவும் இருந்தது. அதுபோலவே என்னை ஏன் புறக்கணித்தார்கள் என்பதும் மர்மமாகவே இருக்கிறது.
அப்போது நான் படிப்புக்காக வெளிநாட்டில் வேறு இருந்தேன். மற்ற அனைவரும் சொல்கின்ற மாதிரி இவர்கள் அத்தைக்கு எதிராக என்ன செய்தார்களோ என்று அச்சப்பட்டேன். சோ ராமசாமி மாதிரியான ஆட்கள் எங்களுக்கு ஆலோசனை கூட கொடுத்தார்கள். அப்போது இங்கே வர வேண்டுமா இல்லையா என்று கூட தெரியாமல் இருந்தான். யூ.கே -வில் அப்போது படித்துக்கொண்டிருந்ததால் என்னுடைய அம்மாவின் முடிவுக்கு அதை விட்டுவிட்டேன்.
இனிமேல் சசிகலாவுடன் சமரசத்துக்கு வாய்ப்பு இருக்கின்றதா?
திரும்பவும் முதலில் இருந்துதான் நாம் போக வேண்டும். அத்தை மருத்துவமனையில் இருந்த போது அவர்களின் உடல்நிலை்குறித்து அவருடன் இருந்த சசிகலா உறவினர்கள் யாரும் எனக்கு எந்தத் தகவலையும் ஏன் கொடுக்கவில்லை. இதையும் கூட உங்கள் சேனலில் தான் மருத்துவமனை வாசலில் நின்று தெரிவித்திருந்தேன். என்ன நடந்தது என்று எனக்கு அப்போது சொல்ல ஒருவர் கூட ஆளிலில்லை. நாங்கள்தான் இரத்த உறவு என்று அவர்கள் அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கையில் எங்களை ஏன் அனுமதிக்கவில்லை. என் சகோதரரை மட்டும் அழைத்துவிட்டு என்னை அழைக்கவில்லை. இதற்கான காரணம் என்னவென்று அவர்கள் சொன்னால்தான் தெரியும்.
அத்தை இருந்தவரை இப்படிப்பட்ட சம்பவம் ஒரு முறை கூட நடந்தது கிடையாது. அழைத்தால் எங்கள் எல்லோரையும் அழைப்பார்கள், இல்லை என்றால் யாரையும் அழைக்க மாட்டார்கள். எங்களைப் பிரித்துப் பார்க்க மாட்டார். இதுதான் அவர்களுடைய இயல்பு. கடைசி காலம் வரை அவர் அப்படித்தான் இருந்தார். அவர்களுடன் நான் எப்படி சமரசம் செய்துகொள்ள வாய்ப்பு இருந்திருக்கும்? அத்தையுடைய இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள எல்லா விதமான அடிப்படை உரிமைகளும் எனக்கு இருக்கின்றது. அப்படி இருக்கையில் என்னை எதற்காக அனுமதிக்கவில்லை. இதற்கான விளக்கத்தை அவர்கள் கூறியே ஆக வேண்டும்.
இப்போது உங்கள் சகோதரர் என்ன நினைக்கிறார். அவர் பேட்டிகளில் கூட 'சின்ன' அத்தை என்றுதான் கூறுவார், இப்போதும் அதே நிலையில்தான் இருக்கிறாரா?
இப்போது அவர் என்ன நினைக்கிறார் என்று எனக்குச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. என்னிடம் கூட அவர்கள் அதே மாதிரி இருந்திருக்கிறார்கள். நானும் கூட ஆன்டி என்று அழைத்திருக்கிறேன். இந்தத் தீர்ப்புக்குச் சில ஆண்டுகள் முன்பு இருந்தே அவர்கள் என்னிடம் பேசுவதில்லை. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் 2010க்குப் பிறகு அவர்களுடனான தொடர்பு சுத்தமாக எங்களுக்கு இருந்தில்லை.