கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளிகள் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை உடனே செலுத்த வேண்டுமென பெற்றோர்களுக்கு அழுத்தம் தருவதால் சம்மந்தப்பட்ட தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்களும், சமுக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கரோனா எனும் கொடிய நோய்த் தொற்று இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தற்போது இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பலமடங்கு உயர்ந்துகொண்டே இருக்கிறது. இந்தக் கொடிய ஆபத்தில் இருந்து விடுபட மக்கள் சொல்லமுடியாத துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் மத்திய மாநில அரசுகள் மாணவர்கள், பெற்றோர்களின் நிலமையை அறிந்து நாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களையும் காலம் தேதி குறிப்பிடாமல் முழுமையாக மூட உத்தரவிட்டனர். பல்வேறு மாநிலங்களில் பள்ளிக் கல்லூரிகளுக்கு இறுதித் தேர்வுகள்கூட நடத்தப்படாமல் உள்ளது. தமிழகம், உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் பள்ளி மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என அறிவித்துள்ளது. மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே அடுத்த வகுப்புகளுக்கு அனுப்பபட்டுள்ளனர். எப்போதுமே ஏப்ரல், ஜூன் மாதங்களில் கல்வியாண்டு தொடங்குவது வழக்கம்.
இந்தநிலையில், மாணவர்கள் அனைவரும் அடுத்த வகுப்புகளுக்கு உயர்த்தப்பட்டுள்ளதால், சில தனியார் பள்ளி நிறுவனங்கள் உடனே கல்வி மற்றும் பேருந்து கட்டணத்தைச் செலுத்த வேண்டும் எனப் பெற்றோர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
கும்பகோணம், திருபுவனம், அசூர் பைபாஸ் பகுதிகளில் உள்ள சில தனியார் பள்ளிகள், பள்ளிக் கட்டணத்தை உடனே டெபாசிட் செய்யுமாறு மாணவர்களின் பெற்றோரைக் கட்டாயபடுத்தி நச்சரிக்க துவங்கியுள்ளனர். அதோடு வருகிற கல்வி ஆண்டில் முதல் பருவ கட்டணம் ரூ 17 ஆயிரம், மற்றும் நோட்டு, புத்தகங்களுக்கு ரூ 18 ஆயிரம் கட்ட வேண்டும் என வாய்மொழி உத்தரவையும் பிறப்பித்துள்ளனர்.
மேலும் பள்ளி பேருந்தில் செல்லும் மாணவர்கள் உடனே வரும் ஆண்டு கட்டணம் முழுவதையும் உடனே செலுத்த வேண்டும் என்றும் கரோனா காலங்களுக்கு முன்பு பெற்றோர்கள் கொடுத்த கல்விக் கட்டண காசோலைகளில் கணக்கில் வங்கிகளில் பணம் செலுத்த வேண்டும் என்றும் மாற்றுச் சான்றிதழ் கேட்டுப் பெற்றோர்கள் விண்ணப்பித்தால் ரூ 10 ஆயிரம் கட்ட வேண்டும் என்றும் பள்ளி நிர்வாகத்தின் பல்வேறு உத்தரவுகளால் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் படிக்க வைத்த நடுத்தர, ஏழைக் குடும்பத்து மாணவர்களின் பெற்றோர்கள் கலங்கி தவிக்கின்றனர்.
இது குறித்து பெற்றோர்கள் சிலர் கூறுகையில், "பள்ளிகளுக்கு ஏற்படும் நிர்வாக சுமை அதிகம் என்பது பெற்றோர்களான எங்களுக்கும் தெரியும், ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் குடும்பம் நடத்தவே சிறமப்படும் லாக் டவுனின்போது கட்டணம் வசூலிப்பதை ஒத்திவைக்க வேண்டும் என்றுதான் கூறுகிறோம்.
தனியார் பள்ளிகளில் ஊரடங்கின்போது மாணவர்களிடம் கல்விக் கட்டணம் கட்டாய வசூல் செய்யப்படுவது குறித்து எங்களது கவனத்திற்குக் கொண்டு வந்தால் அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அவரது எச்சரிக்கைகளை ஒரு பொருட்டாகவே கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளிகள் எடுத்துக்கவில்லை.
கரோனா கட்டுப்பட்டால் அனைத்து வகையான தொழில்களும், வணிகமும் முழுமையாக முடங்கிவிட்டது. வருவாய் இல்லாமல் வாடி வருகிறோம். இந்த நேரத்தில் கல்விக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் எனக் கூறுவது வருத்தமளிக்கிறது. கல்விக் கட்டணத்தை எப்படிச் செலுத்துவது, அரசு இதில் தலையிட்டு எங்களுக்கு உதவிட வேண்டும்" என்று மிகுந்த கவலையோடு கூறுகின்றனர்.
கும்பகோணம் தனியார் பள்ளிகளின் கட்டாயக் கல்விக் கட்டண கொள்ளைக்குப் பல்வேறு பொதுமக்களும், சமுக ஆர்வளர்களும், சமூக வலைத்தளங்கள் மூலம் எதிர்ப்புகளைப் பதிவு செய்து எதிர்த்து வருகின்றனர். "கரோனா பாதிப்பு உள்ள இந்தச் சூழலில் கல்விக் கட்டணம் கேட்டு நெருக்கடி தரும் கல்வி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பள்ளிகள் தொடங்கி, முதலாம் பருவம் முடிவடையும் வரை தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று அரசாணை பிறப்பிக்க வேண்டும்" என்று பெற்றோர்களும், சமுக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.