திடீரென்று அவ்வப்போது வானில் புயல்கள் உருவாகி, மழையாலும், புயலாலும் பல ஊர்கள் அடியோடு சாய்ந்து போகிற பல சம்பவங்களை நாம் கண் முன்னே பார்த்திருக்கிறோம் . "அப்படியொரு புயல் சோனாலி என்கிற பெயரில் கோவை அ.தி.மு.க.வில் வீசத் தொடங்கி இருக்கிறதா? இல்லையா?' என அ.தி.மு.க.வினர் பட்டிமன்றமே நடத்திக்கொண்டிருக்கிறார்கள் .
"அதென்ன சோனாலி புயல்?' கட்சிக்காரர்களிடமே கேட்டோம்.
"சார்... சோனாலி பிரதீப் ஒரு வட நாட்டுப் பெண். கல்யாணமாகி பையன் ஒண்ணு, பொண்ணு ஒண்ணு இருக்கு. இந்த சோனாலி சினிமா நடிகையையும் தோற்கடிக்கும் அழகோடு இருந்ததால வெளிநாட்டுல நடந்த "மிஸஸ் யுனிவர்சல்' போட்டியில கலந்துகிட்டு முதல் பரிசை ஜெயிச்சுட்டு வந்தாங்க. அப்படி வரும் போது கோவை ஏர்போர்ட்டுல முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிகூடயும், அமைச்சர் எஸ்.பி. வேலுமணிகூடயும் போட்டோ எடுத்துக்கிட்டாங்க. அதுக்கப்புறம்தான் சோனாலி ஆட்டம் தாங்க முடியலை. சோனாலியை நெனச்சு எங்க கட்சிக்காரங்க பலரும் உருக ஆரம்பிச்சுட் டாங்க. கட்சியில இருக்கற பெரிய பெரிய ஆளுக எல்லாம் சோனாலி பின்னாலயே சுத்த ஆரம்பிச்சுட்டாங்கன்னு பேச்சு.
சோனாலியும் கோவையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் நடத்தும் நிகழ்ச்சியில எல்லாம் கலந்துகிட்டு முன்னால நின்னாங்க. அமைச்சர் சென்னையில இருந்து கோவைக்கு வரும் போதெல்லாம் இந்த சோனாலி பொண்ணும் கரெக்ட்டா வந்திருது. "கட்சியில நான் சேர்ந்துட்டேன். மேயர் சீட் எனக்குத்தான்னு அமைச்சர் பிராமிஸ் பண்ணிட்டாரு. அதுனால தான் நான் மேயர் சீட் கேட்டு விண்ணப்பம் போட்டிருக்கேன்'னு அந்தப் பொண்ணு சொல்ல ஆரம்பிச்சுருச்சு. அந்த சோனாலி பொண்ணுக்கு சீட் கொடுக்கறதா இருந்தா கட்சியே காணாமப் போயிரும்...'' என எச்சரிக்கைவிடுக்கிறார்கள் பட்டிமன்றத்தின் ஒருசாரார் கோபமாய் .
பட்டிமன்றத்தின் இன்னொரு சாராரோ, "சார்... மொதல்ல அந்த சோனாலி தன்னம்பிக்கை பேச்சாளி. அதன் மூலமாகத்தான் பல அ.தி.மு.க. நிகழ்ச்சிகள்ல கலந்துகிட்டாங்க. கவுண்டம்பாளையத்துலதான் வீடு. இப்பதான் கட்சிக்கு வந்திருக்காங்க. எப்படி மேயர் சீட் கொடுப்பாங்க? பொதுக்குழுவிலேயே 5 வருடம் தொடர்ச்சியா கட்சியில் இருந்தவங்களுக்குத்தான் சீட்டுன்னு சொல்லிட்டாங்க. அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான ஆட்கள் இந்தப் பொண்ண வச்சு கேம் ஆடறாங்க. இப்ப வெளியான போட்டோ எல்லாமே அந்த சோனாலி பொண்ணோட பேஸ்புக்ல இருந்து எடுக்கப்பட்டது. அந்தப் பொண்ணே இந்த போட்டோக்களை வெளியிட்டு கட்சியில இருக்கற எல்லார் கூடயும் ரொம்ப பழக்கம் இருப்பதாக ஒரு மாயை உருவாக்க ஆரம்பிச்சுருச்சு.
அமைச்சர் வேலுமணிக்கு வலதுகரமா இருக்கக்கூடிய இன்ஜினியர் வடவள்ளி சந்திரசேகர் மனைவி ஷர்மிளாவுக்குதான் மேயர் சீட்டுங்கறது கட்சிக்காரங்களோட புள்ளைகள கேட்டா கூட சொல்லுவாங்க. அப்படியிருக்கும்போது... சோனாலி பற்றி கிளப்பிவிடுவதில் துளிகூட உண்மை இல்லை'' என்கிறார்கள் சிரிப்பாய். "சோனாலி புயல் கோவை அ.தி.மு.க.வை சாய்க்காமல் இருந்தால் சரி...' என்கிறார்கள் கட்சியின் உண்மை விசுவாசிகள்.
"எனக்கு அ.தி.மு.க.வில் அத்தனை பெரிய ஆட்கள் கூடயும் நல்ல தொடர்பு இருக்கிறது... நான் சொன்னால் தமிழ்நாடு கவர்மென்டில் என்ன வேணாலும் நீங்கள் சாதித்துக் கொள்ளலாம்... என சொல்லும் சோனாலி.. முன்னாள் பா.ஜ.க. ஆள். பா.ஜ.க. மெல்ல தங்கள் ஆட்களை அ.தி.மு.க.விற்குள் மறைமுகமாக நுழைக்கிறது. அதை எங்கள் ஆட்கள் இரு கரம் நீட்டி மறைமுகமாக வரவேற்கிறார்கள்'' என கொதிக்கிறார்கள் கோவை ர.ர.க்கள்.