![jk](http://image.nakkheeran.in/cdn/farfuture/yExqnaUWI_cwRZeZRETA1JE0D9DrccdaRjj1ZYyf3xA/1601533281/sites/default/files/inline-images/12309.jpg)
உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தார். பட்டியல் இனத்தை சேர்ந்த அந்த பெண்ணை இரவோடு இரவாக காவல்துறையினர் எரித்து அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியையும், கண்டனத்தையும் ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய அரசியில் கட்சி தலைவர்களும் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இதுதொடர்பான முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தின் வடுவே இன்னும் ஆறாத நிலை இன்று காலை மற்றொரு பெண் அதே போல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த பலாத்காரங்கள் ஏன் தொடர்ந்து நடைபெறுகிறது, இதற்கும் சாதிக்கும் தொடர்பு உள்ளதா, இதனை எப்படி தடுப்பது போன்ற பல்வேறு கேள்விகளை நாம் மருத்துவர் ஷர்மிளா அவர்களிடம் கேள்விகளாக நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,
உத்தரபிரதேசத்தில் 19 வயது இளம் பெண் ஒருவர் நேற்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். எலும்பு உடைக்கப்பட்டு, நாக்கு வெட்டப்பட்டு கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. அதையும் தாண்டி அந்த பெண்ணின் சடலத்தை அவர்களின் பெற்றோரிடமே காட்டாமல் எரித்துள்ளனர். இதற்கு நாடெங்கிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவத்தை எப்படி பார்க்கிறீர்கள், காவல்துறையின் நடவடிக்கையை ஏற்றுக் கொள்கிறீர்களா?
இந்த சம்பவம் தற்போது புதிதாக நடைபெற்ற ஒரு நிகழ்வு அல்ல, தொடர்ச்சியாக இது மாதிரியான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. இதை சிலர் தனி நிகழ்வாக பாருங்கள் என்று கூறுகிறார்கள், அவ்வாறே சிலர் கருதி தங்களின் வருத்தங்களை ஒரு ட்விட்டர் பதிவாகவோ, பேஸ்புக் பதிவுகளாகவோ போட்டுவிட்டு கடந்து செல்கிறார்கள். ஆனால் நாம் இந்த சம்பவத்தில் இருக்கும் நிஜத்தை ஆழமாக பார்க்க வேண்டும். ஒரு தலித் பெண்ணை நான்கு பேர் சேர்ந்து சூறையாடி இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த தைரியம் எப்படி வந்தது, யார் கொடுத்தது. இந்த சம்பவத்திற்கு பிறகும் நம்மை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற மனநிலையை அவர்கள் எப்படி பெறுகிறார்கள். அவன் சாதியில் உள்ள பெண்ணை இந்த மாதிரி நான்கு பேர் தொட முடியுமா? தொட்டுவிட்டு அவர்களால் நிம்மதியாக வாழ முடியுமா? அப்படி என்றால் அவர்களின் நோக்கம் என்னவாக இருக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும்.
சில பாலியல் பலாத்காரங்களில் சாதியை பார்ப்பதில்லையே இதில் ஏன் பார்க்கிறீர்கள் என தொடர்ச்சியாக சிலர் கேட்கிறார்கள். இதில் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நான்கு பேர் கூட்டு பலாத்காரம் செய்துள்ளார்கள் என்றால் நம்மை நம்முடைய சாதியை வைத்து தப்பித்துக்கொள்ளலாம் என்ற எண்ணமே பிரதானமாக இருந்ததுதான் அதற்கு காரணம். காவல்துறையினரும் தவறு செய்தவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவே காலம் தாழ்த்தி வரும் சூழ்நிலையில், அந்த பெண்ணின் சடலத்தை மட்டும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இரவோடு இரவாக எரித்துள்ளனர். இதில் இருந்து என்ன தெரிய வருகிறது. தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்குமா என்ற எண்ணம் தற்போது மேலோங்கி இருக்கிறது. அரசியல்வாதிகள் முதல் சாதி பெரியவர்கள் முதல் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்றால் அந்த துணிச்சல் தானே இவர்களை போன்றவர்கள் தப்பு செய்ய காரணமாக அமைகிறது. எனவே இதை ஒரு தனிப்பட்ட சம்பவமாக பார்க்க இயலாது. இதன் பின்னணியில் இருக்கின்ற அரசியலை நாம் பார்க்க வேண்டும்.
என்னால் உன்னை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும், எங்களை யாரும் எதிவும் கேட்க முடியாது என்ற எண்ணமே அந்த பெண்ணிடம் அவர்கள் கொடூரமாக நடந்து கொள்ள வைத்துள்ளதுள்ளது. அதன் வெளிப்பாடே எலும்பு முறிக்கப்பட்டது, நாக்கு வெட்டப்பட்ட சம்பவமும். இந்த எண்ணத்திற்கு அந்த பெண் ஒரு தலித் என்பதும், நாம் உயர் வகுப்பை சார்ந்தவர்கள் என்பதே காரணமாக இருந்திக்க முடியும். அந்த வன்மமே அவர்களை இந்த கொலையை செய்ய வைத்திருக்க முடியும். பவர் சென்டர்கள் அனைத்துமே அந்த குற்றவாளிகளின் பின்னால் நின்று அவர்களுக்கு உதவி தானே வருகின்றது. எனவே இதை தனி சம்பவமாக பார்க்க இயலாது. சாதியின் கொடூர முகத்தை அந்த பெண்ணின் முகத்தின் வழியாக நாம் பார்க்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. எனவே இதற்கான நீதியை நாம் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.