Skip to main content

நக்கீரன் EXCLUSIVE சாத்தான்குளம்! இருவரைக் கொன்ற கொலைகார போலீஸ்! அதிரவைக்கும் போஸ்ட் மார்ட்டம்! அம்பலப்படுத்திய சி.பி.ஐ.!

Published on 13/10/2020 | Edited on 13/10/2020

 

jayaraj fenix

 

காவல்துறையினரின் கொடூர சித்ரவதையால் படுகொலை செய்யப்பட்ட சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழப்பில், ஏறக்குறைய 95 நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 25 அன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் 105 சாட்சிகள், 38 சான்றாவணங்களுடன் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது சி.பி.ஐ. சாத்தான்குளம் சித்ரவதைக் கொலைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் நக்கீரனின் புலனாய்வு முயற்சியின் விளைவாக, சி.பி.ஐ.யின் குற்றப்பத்திரிக்கை பிரத்யேகமாக கிடைக்கப்பெற அதிலிருக்கும் செய்திகள் அதிர வைக்கின்றன.

 

19-06-2020 அன்று கொரோனா தொற்று நோய் ஊரடங்கு காலத்தில் பொதுமுடக்க விதிகளைமீறி கடை திறந்து வைத்ததாக கூறி தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் இருவர் மீது சாத்தான்குளம் காவல்துறையினர் 312/2020 U/S 188, 269, 294(b), 353, 506(ii) என்று ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்து கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைத்தனர். அதன் பின் 22-06-2020 அன்று பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகிய இருவரும் இறந்த நிலையில், 23.06.2020 கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் 649/2020, 650/20202 என்ற குற்றவழக்கு எண் கீழ் 176 (1)ஆ என்ற பிரிவில் (கஸ்டடியில் மரணம்) என வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

sathankulam

 

இதே நாளில் கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி பாரதிதாசன், தந்தை மகன் கொலை வழக்கு சம்பந்தமாக விசாரணையை தொடங்கினார். மதுரை உயர்நீதிமன்ற கிளை இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்கத் தொடங்கி தமிழக அரசுக்கும் இது குறித்து உத்தரவிட்டதன் பேரில் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. குற்ற எண்கள் 01/2020, 02/2020 என சி.பி.சி.ஐ.டி. போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து 12 குழுக்களாக பிரிந்து விசாரணையை தொடங்கி வரிசையாக கைது செய்தனர்.

 

நாடு முழுவதும் பரபரப்பான இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் முதலில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், சி.பி.ஐ. தனது எஃப்.ஐ.ஆரை (RC.0502020S0009) பதிவு செய்தது. ஆனால் குற்றவாளிகள் யார்? யாரென்று அப்பொழுது குறிப்பிடவில்லை.

 

குற்றவாளிகள் யார்...? யார்..?

 

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையில் முதல் குற்றவாளியாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதரும், அவரைத் தொடர்ந்து எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், எஸ்.ஐ.ரகுகணேஷ், போலீசார்கள் முருகன், சாமதுரை, முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ் மற்றும் வெயிலுமுத்து ஆகியோர் வரிசையாக குற்றவாளி களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ. பால்துரை மதுரை அரசு மருத்துவ மனையில் இறந்ததால் அவரை குற்றவாளியாக சேர்க்கவில்லை சி.பி.ஐ. தரப்பு. ஏனையோர் மீது உடலுக்கு தீங்கு விளைவித்தல், சதித்திட்டம் தீட்டுதல், கூட்டாக சேர்ந்து சம்பவம் செய்தல், அரசு ஊழியராக தன் கடமையை மறந்து அதிகார துஷ்பிரயோகம் செய்தல், பொய்புகார் அளித்தல், பிறழ் சாட்சிகள் உருவக்குதல் உள்ளிட்ட பல பிரிவுகளில் (120-B IPCr/w 302,342, 201, 182, 193, 211, 218 r/w34of IPC ) வழக்கினைப் பதிவு செய்துள்ளது.

 

sathankulam

 

மத்திய தடய அறிவியல் ஆய்வகம் நடத்திய பரிசோதனைக்கான ரத்த மாதிரிகள் சாத்தான்குளம் காவல் நிலைய லாக்அப் அறை சுவர், ஸ்டேஷன் அதிகாரியான எஸ்.ஐ.பாலகிருஷ்ணன் அறை, அங்கிருந்த டேபிளில், கோவில் பட்டி ஜே.எம்.1 பாரதிதாசனால் கைப்பற்றப்பட்ட இரண்டு மர லத்திகள், கழிப்பறை, எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களான மொபைல் போன்கள், டி.வி.ஆர்., சி.சி.டி.வி. கேமராக்கள் மற்றும் ஜெயராஜ், பென்னிக்ஸின் உடை ஆகியவற்றில் எடுக்கப்பட்டன. இந்த ரத்த மாதிரிகளும், காவல்துறையினரால் சித்ரவைதைக்குள்ளாக்கப் பட்டு கொலையுண்ட பென்னிக்ஸின் அம்மா (ஜெயராஜ் மனைவி) செல்வராணியிடம் எடுத்த ரத்த மாதிரியும் டி.என்.ஏ. பரிசோதனையில் ஒற்றுமையாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ள இவ்வறிக்கை, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை மர லத்தி கொண்டு அடித்து துன்புறுத்தியதற்காக சான்றாவணமாகவும் காண்பிக்கப்பட்டுள்ளது.

 

போஸ்ட் மார்ட்டம் அறிக்கை:

 

பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர்களான செல்வமுருகன், பிரசன்னா மற்றும் சுதன் ஆகியோரால் பிரேதப் பரிசோதனை நடத்தப்பெற்ற நிலையில், இருவருக்கும் பதினெட்டிற்கும் மேற்பட்ட-மாறுபட்ட அப்பட்டமான கொடூர காயங்கள் இருந்ததாகவும், குரூரமாக சிதைக்கப்பட்டதால் ஏற் பட்ட காயங்களின் அடிப்படையிலேயே இருவரும் இறந்திருக்கிறார்கள் (the deceased would appear to have died of complications of blunt injuries sustained) எனவும் அறிக்கையில் தெளிவாக வழங்கியுள்ளனர். இந்த அறிக்கையையே ஒப்புதல் வாக்குமூலமாக சி.பி.ஐ.யிடம் வழங்கிய நிலையில், இந்த வாக்குமூலங்கள் குற்றப் பத்திரிக்கை சான்றாவணத்தில் பக்கம் 110-124 பக்கங்கள் வரை பதியப்பெற்றுள்ளது. (deceased Jeyaraj and Benniks died due to injuries inflicted on them by the police 19.6.2020 in the Sathankulam Police Station)

 

எதனால்..?

 

ஜூன் 19 அன்று மாலை 7:30 மணியளவில் சாத்தான்குளம் காமராஜர் சிலைக்கருகில் மொபைல் கடையிலிருந்த ஜெயராஜை தங்களது டாடா சுமோ வாகனத்தில் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர் இன்ஸ் பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் மற்றும் காவலர் முத்துராஜா உள்ளிட்ட காவலர்கள். இந்த தகவல் கேள்விப்பட்டு தனது நண்பர் ரவிசங்கர் வாகனத்தின் மூலம் அங்கு வந்திருக்கின்றார் ஜெயராஜின் மகனான பென்னிக்ஸ். அப்பொழுது எஸ்.ஐ.பாலகிருஷ்ணன் ஜெயராஜை அடித்துக் கொண்டிருக்க, பென்னிக்ஸ் குறுக்கே பாய்ந்து தடுத்த நிலையில், எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் நிலை தடுமாறியுள்ளார். டென்ஷனான எஸ்.ஐ.பாலகிருஷ்ணனும், காவலர் முத்துராஜாவும் பென்னிக்ஸை தள்ளிவிட அங்கு களேபரமானது.

 

sathankulam

 

அதன்பின் ஸ்டேஷனிலிருந்து அதிகாரிகள் தொடங்கி அனைத்து போலீசாரும் ஒன்றிணைந்து ஜெயராஜையும், பென்னிக்ஸையும் இறுக பிடித்து ஆடையை உருவி அங்கிருந்த மரப்பலகையில் உள்ளாடையுடன் குப்புற படுக்க வைத்து அடித்து துவைக்க ஆரம்பித்துள்ளனர். மரலத்தியைக் கொண்டு அடித்து நொறுக்கிய நிலையில், அவர்களின் உடலில் பல காயங்கள் ஏற்பட்டது. இந்த கொலைவெறி தாக்குதல் மாலை 07:45க்கு தொடங்கி அதிகாலை 3:00 மணி வரைக்கும் நடைப் பெற்றுள்ளது. அங்கிருந்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், "என்ன சத்தம் கம்மியாக வருகின்றது?' என கத்திய நிலையில், மீண்டும் குரூரமாக கதறும் வரை அடித்துக் காயப்படுத்தியிருக்கின்றனர் அங்குள்ள அனைவரும். யாரோ ஒரு போலீசார் கூறிய தவறான தகவலின் அடிப்படையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் சட்டவிரோத கஸ்டடியில் வைத்து அத்துமீறி தாக்குதலை நடத்தியுள்ளனர் என்கிறது அந்த அறிக்கை.

 

மருத்துவர் மீது குற்றஞ்சாட்டும் சி.பி.ஐ.:

 

"கொடூரமான காயங்களுடன்தான் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர் ஜெயராஜூம், பென்னிக்ஸூம். இதற்கு அங்குள்ள சிசிடிவிக் காட்சிகள் சாட்சி. புட்டத்திலும், பின் பக்க தொடையிலும் ஏற்பட்ட காயத்தால் ரத்தம் நிற்காமல் ஒழுகிய நிலையில் இருக்க, சுகரும், ரத்த அழுத்தமும் உள்ளது எனக் கூறிவிட்டு ரிமாண்டிற்கு அனுப்பலாம் என சான்றிதழ் வழங்கியது எவ்வகையில் நியாயமாகும்..? இது குற்றமில்லையா.?"" என பல கேள்வி களுடன் சாத்தான்குளம் அரசு மருத் துவர் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி யுள்ளது சி.பி.ஐ. தரப்பு.

 

Ad

 

ஜூன் 20 அன்று மதியம் 2:30 மணியளவில் கோவில்பட்டி கிளைச் சிறைக்கு ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் வந்தடைய, பலத்த காயத்துடன் இருந்தவர்களை அனுமதிக்க சிறைத் துறையினர் முதலில் மறுத்துவிட்டனர். பின்பு காவல்துறையினர் சாத்தான்குளம் மாஜிஸ்திரேட்டின் கடிதத்தை அழுத்தமாக எடுத்துரைக்க, மாஜிஸ்திரேட் உத்தரவை மறுத்தால் சட்ட சிக்கலாகும் என்பதனை உணர்ந்து அனுமதித்துள்ளனர். எனினும் காயம் குறித்து சிறைத்துறை ஆவணங்களில் பதிந்து விட்டனர். அடுத்த நாள் (ஜூன் 21) சிறைத்துறை மருத்துவரும் காயம் குறித்து பதிவு செய்துள்ளார். விசாரணைக் கைதியாக அனுமதிக்கப் பட்ட இருவரும் 3ம் எண் அறையில் தங்க வைத்த நிலையில், அங்குள்ள ஏனைய கைதிகளிடமும் காவல் நிலையத்தில் தங்களுக்கு நடந்ததை கூறியுள்ளனர். அவர்களிடமும் விசாரிக்கப்பட்டது என்கின்றது சி.பி.ஐ. தரப்பு.

 

காவல்நிலையம், மருத்துவமனை, கிளைச்சிறை என எல்லா இடத்திலும் மேற்கொண்ட சி.பி.ஐ. விசாரணையின் அடிப்படையில், இருவரது உடலிலும் போலீஸின் சித்ரவதையால் ஏற்பட்ட காயங்களையும், அதுதான் அவர்களை மரணத்திற்கு இட்டுச் சென்றது என்பதையும் சி.பி.ஐ. அழுத்தமாகவே குற்றப் பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.

 

ஜே எம் 1 பாரதிதாசனின் அறிக்கை:

 

இருவரின் கொலையில் முன்னதாக விசாரணையை துவக்கிய கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பாரதிதாசனின் விசாரணை அறிக்கையும் தங்களுக்கு உதவியதாக குற்றப்பத்திரிக்கையில் சி.பி.ஐ. குறிப்பிட்டுள்ளது. அதிலிருந்து.,

 

1. ஸ்டேஷனில் சம்பவத்தின்போது முதலில் பென்னிக்ஸ் மீது தாக்குதல் நடத்தியவர் பால்துரை.

 

2. தனக்கு கீழிருந்த அதிகாரிகளை இருவர் மீதும் தாக்குதல் நடத்த தூண்டியவர் இன்ஸ் பெக்டர் ஸ்ரீதர்

 

3. ரத்தம் வரும் வரைக்கும், வந்த பின்னரும் அதிகளவில் கொடூரமாக தாக்கியது எஸ்.ஐ.க் கள் பாலகிருஷ்ணன் மற்றும் ரகுகணேஷ் ஆகியோரே.

 

4. இதே வேளையில் காவலர்கள் முருகன், தாமஸ், முத்துராஜா, சாமதுரை, வெயிலுமுத்து ஆகியோர் எஸ்.ஐ பாலகிருஷ்ணனின் கொடூர தாக்குதலுக்கு உதவியுள்ளனர் (பிடித்துக் கொள்வது)

 

Nakkheeran

 

5. இதன் பின் காவலர்கள் முருகன், தாமஸ், முத்துராஜா, சாமதுரை, வெயிலுமுத்து ஆகியோர் சேர்ந்து ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 

என இரு உயிர்கள் அணுஅணுவாக சித்ரவதைக் குள்ளாகி, கொல்லப் பட்டதை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டிய சி.பி.ஐ. -நீதித்துறை நடுவர் ஆகியோரின் அறிக்கையும் குற்றப்பத்திரிகையும் இந்த இரட்டைப் படு கொலையை மறைக்க முயன்ற எடப்பாடி அரசுக்கு கடும் நெருக்கடியை உண்டாக்கியுள்ளன.