Skip to main content

எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே அரசியலாக்குகிறது..! ஹத்ராஸ் சம்பவம் குறித்து நாராயணன் பேட்டி..!

Published on 03/10/2020 | Edited on 03/10/2020

 

rrrr

 

உ.பி.யில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க இன்று மீண்டும் ஹத்ராஸ் செல்ல இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

 

காங்கிரஸ் கட்சியின் எம்.பிக்கள் குழுவுடன் தான் செல்ல இருப்பதாகவும், ஹத்ராஸ் பெண்ணின் குடும்பத்தினரை தான் சந்திப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார். ராகுல் காந்தி வருகை தருவதாகக் கூறியுள்ளதால், உத்தரபிரதேச நொய்டா எக்ஸ்பிரஸ் சாலையில் போலீசார் குவிக்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சியினரின் போராட்டத்திற்குப் பின்னர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்பட ஐந்து பேருக்கு போலீசார் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க அனுமதி அளித்தனர்.

 

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க ராகுலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்ததும் அவசரம் அவசரமாக, அவரின் உடலை எரியூட்டப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குடும்பத்தினருக்கு தெரியாமலேயே அப்பெண்ணின் உடல் எரியூட்டப்பட்டது ஏன்? என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு பாதுகாப்பு இல்லை என்றும் கூறியுள்ளது.

Narayanan Thirupathy

 

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுகள், புகார்கள் குறித்து பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் திருப்பதி நாராயணன் கூறுகையில், 

 

செப்டம்பர் 14ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணும், தாயாரும், சகோதரும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகார் அளிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் கொலை செய்ய முயற்சி, வன்கொடுமை சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அப்போது பலாத்கார குற்றச்சாட்டைச் சொல்லவில்லை என்பதை அவர்களே ஏற்றுக்கொள்கிறார்கள். 

 

காவல்நிலைய காவலர்கள் உதவியோடு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறார்கள். அங்கே வைத்து மருத்துவம் பார்க்க முடியாததால் மேல் சிசிக்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அந்தப் பெண்ணை ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அதன் பிறகு பலாத்கார முயற்சி நடந்துள்ளதாக புகார் அளிக்கிறார்கள். அதன் அடிப்படையில் பலாத்காரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. 

 

இந்த நேரத்தில்தான் மிகப்பெரிய அரசியல் ரீதியான பிரச்சனையாக காங்கிரஸ் கட்சியினர் உருவாக்குகிறார்கள். இதனிடையே பாதிக்கப்பட்ட பெண் மரணம் அடைந்ததால் உடனடியாக பிரதமர், முதலமைச்சரிடம் பேசுகிறார். நியாயமாக எது செய்யப்பட வேண்டுமோ அது செய்யப்பட வேண்டும், உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார்.

 

நிர்வாகம் ஒன்று சொல்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பம் ஒன்று சொல்கிறது. உண்மை என்ன என்பதை அறிய சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்திருக்கிறார்கள். அவர்கள் உரிய நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள். இந்தநிலையில் வேண்டுமென்றே அரசியல் ஆக்குகிறது காங்கிரஸ் கட்சி. 

 

ராகுல்காந்தி அங்கே சென்றிருந்தபோது, யாரும் அவரை தொடக்கூட இல்லாதபோது, தனக்கு எதுவும் ஆகாத அளவுக்கு ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அந்த இடத்தில் வேண்டுமென்றே தள்ளிவிடப்பட்டதாக அவரே குதித்துக்கொண்ட காட்சிகள் வெளிவந்தது. இது மிகமிக மலிவான அரசியல். அந்த மாவட்டத்தில் ஜாதி ரீதியிலான பதட்டத்தை உருவாக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டதாலேயே, மாவட்ட நிர்வாகம் யாரும் நுழையாத அளவுக்குக் கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும் இது தேவையில்லாத பதட்டத்தை உருவாக்கும் என்பதால் இன்று அவர்களை அனுமதித்திருக்கலாம். யார் செய்திருந்தாலும் தவறுதான். 

 

பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலை இரவோடு இரவாக எரித்ததாகக் குற்றச்சாட்டு இருக்கிறது. மாவட்ட நிர்வாகமானது பதட்டமான சூழ்நிலையில் குடும்பத்தினுடைய அனுமதி பெற்றுத்தான் செய்திருக்கிறோம் எனச் சொல்லி வருகிறார்கள். சிலர் அந்தக் குடும்பத்தினரிடம் இப்படிப் பேசுங்கள் என்று வலியுறுத்துவதாகவும் தகவல்கள் வெளி வருகின்றன. 

 

Ad

 

இதனால் சிறப்புப் புலனாய்வுக் குழு இந்த விவகாரத்தில் உரிய விசாரணை செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே இதனை அரசியலாக்குகிறது. மலிவான அரசியல் செய்வது கண்டிக்கத்தக்கது என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்