மக்கள் நீதி மய்யத்திலிருந்து நேற்று மூவர் விலகியது, மற்றும் தேர்தல் பணி ஆகியவை குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் நக்கீரனுக்கு அளித்த பேட்டி.
தேர்தல் அறிக்கை எந்த அளவில் தயாராகிக்கொண்டிருக்கிறது?
நாளை வேட்பாளரை அறிவிக்கின்றோம். அதைத்தொடர்ந்து தேர்தல் அறிக்கை வரும்.
வேட்பாளர் அறிவிப்பில் புதிய விஷயங்களாக எதை எதிர்பார்க்கலாம்?
எங்களிடம் பிரபலமானவர்கள் மிகவும் குறைவு. அதனால் மற்ற தகுதி சார்ந்து சொல்லிக்கொள்ளும்படி அருமையான வேட்பாளர்களாக இருப்பார்கள். மக்கள் விரும்பக்கூடிய, மக்களுக்கு சரியான வேட்பாளர்களை அறிமுகப்படுத்துவோம்.
நேற்று மூவர் கட்சியிலிருந்து விலகியிருக்கிறார்களே என்ன காரணம்?
குமரவேல் சார் நேர்காணல் நடந்துகொண்டிருக்கும்போதே சமூக வலைதளத்தில் தேர்தலில் நிற்கிறேன், என பதிவிட்டுவிட்டார். கட்சி அறிவிக்கும் முன்னரே நீங்கள் வெளியிடுவது தவறாயிற்றே. எனக் கேட்டனர். அந்த விசாரணையில் ஏதும் வருத்தமிருக்கும் என நினைக்கிறேன். அவரை இன்று கேட்கவில்லையென்றால், நாளை ஏதோ ஒரு சின்ன பதவியில் இருப்பவர்களும் அப்படி நடந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. அப்படி நடந்தால் கட்சியின் கட்டுக்கோப்பு கலைந்துவிடும்.
அப்படி கேட்டால் அவரை கேட்டிங்களா என்ற கேள்வியும் வரும். அதிலும் அவர் தெளிவான ஒரு பிசினஸ் மேன், எதையும் முறைப்படுத்திக்கொள்ள தெரிந்தவர். ஆனால் என்னவென்று தெரியவில்லை, உடனே விலகிக்கொள்கிறேன் என தெரிவித்தார். அப்போதும் அது கிடப்பில்தான் இருந்தது. அது அடுத்தநாள் தொலைக்காட்சியில் பெரிய விவாதமானது. அதன்பிறகுதான் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது. மற்றவர் குமரவேலின் நெருங்கிய நண்பர், அவரோடுதான் கட்சிக்குள் வந்தார். அவரில்லாததால் இவரும் போய்விட்டார் என நினைக்கின்றேன்.
கட்சியில் புதிதாய் சேர்ந்தவர்களுக்கு பதவி கொடுத்துவிடுகிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு உள்ளதே?
பொறுத்தமானவர் கிடைக்கும்போது அவருக்கு பதவி கொடுப்பது வழக்கமான நடைமுறைதான். திறமையை பயன்படுத்துங்கள் என பொறுப்பை கொடுக்கிறோம். சீனியர், ஜூனியர் என்பதை நாங்கள் முக்கியமானதாக கருதவில்லை. கோவை சரளாவை நாம் காமெடி நடிகையாக மட்டும் பார்க்கக்கூடாது. பிரகாஷ் ராஜ் வில்லன் நடிகர்தான். அதற்காக அவரின் அறிக்கைகளையெல்லாம் வில்லன் அறிக்கைகளாக நாம் பார்க்க முடியுமா. அந்தக் குழுவில் கார்ட்டூனிஸ்ட் மதன், ராவ், வக்கீல் விஜயன் விஷயம் தெரிந்த பிரபலங்களும் இருந்தார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் கோவை சரளாவிற்கு மட்டும் விஷயம் தெரியாது என நினைக்கக்கூடாது.
வேட்பாளர் தேர்வில் எதை முக்கியமாக கருத்தில் கொண்டீர்கள்?
அவர்களுடைய தகுதிதான். டெல்லியில் போய் நமது மாநிலத்திற்காக, உரிமைக்காக குரல் கொடுப்பார்களா என்பது, அவரவர் தொகுதி குறித்த அறிவு, மாநில தேவைகள், இருக்கிற பிரச்சனைகள் இது குறித்த ஞானம், அர்பணிப்பு, மக்கள் சேவையில் ஆர்வம் இவற்றிற்குதான் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். மற்றபடி ஜாதி, மதம் இவற்றையெல்லாம் பெரிதாக நினைக்கவில்லை. ஒரு பிரபலமான வேட்பாளர் என்பது கடினமாக இருந்தாலும், ஒரு சிறந்த வேட்பாளராக அவர்கள் இருப்பார்கள்.
நேற்று குமரவேல் கூறியிருந்தார், கோவை சரளா தொகுதிக்கு எவ்வளவு செலவு செய்வீர்கள் என்பதை மட்டுமே கேட்டார் என்று. மக்கள் நீதி மய்யமும் பணத்திற்குதான் முக்கியத்துவம் தருகிறதா?
இதற்கு கோவை சரளாவும் குழுவில் இருந்தவர்களும் மட்டும்தான் பதில் சொல்ல வேண்டும், ஏனெனில் இது அவர்களுக்குள் நடந்த கருத்துரையாடல். வெளியில் அப்படி கேட்கப்படவில்லை என்பதுதான் பெரிய விஷயமாக பேசப்பட்டது. நேர்காணலுக்கு வந்தவர்கள் அனைவரும் மிக மகிழ்ச்சியாக கூறினார்கள், ஜாதியைப் பற்றி கேட்கவில்லை, பணத்தைப்பற்றி கேட்கவில்லை என்று.