கரோனா நெருக்கடியால் தள்ளி வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரை வருகிற செப்டம்பரில் நடத்த பிரதமர் மோடி தீர்மானித்துள்ளதாக டெல்லி தகவல்கள் கூறுகின்றன. இதற்கான ஒப்புதலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், நாடாளுமன்றம் கூடும் போது மத்திய அமைச்சரவையை மாற்றியமைக்க பிரதமர் மோடி திட்டமிட்டிருக்கிறாராம். மாற்றியமைக்கப்படும் அமைச்சரவையில், அண்மையில் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனை இணைத்துக்கொள்ள மோடி முடிவு செய்திருப்பதாக த.மா.கா. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், பா.ஜ.க. மேலிடத்தில் தொடர்பில் உள்ளவர்களோ, ’’பா.ஜ.க.வில் இணைய ஜி.கே.வாசனை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவரோ பிடிகொடுக்காமல் நழுவியபடி இருக்கிறார். அதேசமயம், அமைச்சரவையில் சேரும் எண்ணம் மட்டும் அவரிடமிருந்து விலக வில்லை. ஒருவேளை வாசன் மத்திய அமைச்சரானால், சட்டமன்றத் தேர்தலின் போது அவர் பா.ஜ.க.வில் இணைந்து விடுவார். இந்த டீலிங்கிற்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே அமைச்சரவையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் ‘’ என்கிறார்கள்.
இது குறித்து த.மா.கா. மூத்த தலைவர் ஒருவரிடம் கருத்து கேட்டபோது, "அமைச்சர் பதவிக்கும் த.மா.கா.வை பா.ஜ.க.வில் இணைப்பதற்கும் சம்மந்தமில்லை. அமைச்சர் பதவிக்காக கட்சியை பா.ஜ.க.வில் அடகு வைக்க மாட்டார் ஜி.கே.வாசன்" என்கிறார் மிக அழுத்தமாக.