தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்ட செயலாளர்களை ஓ.பி.எஸ்.ஸும், இ.பி.எஸ்.ஸும் நியமித்து வருகிறார்கள். அதுபோல்தான் திண்டுக்கல் அதிமுக மாவட்ட செயலாளராக இருந்த மருதராஜ்க்கு கழக அமைப்பு செயலாளர் பதவி கொடுத்துவிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தை இரண்டாக பிரித்து வனத்துறை அமைச்சர் சீனிவாசனுக்கும், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கும் மாவட்ட செயலாளர் பதவியை கொடுத்து இருக்கிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளை மேற்கு மாவட்டமாக பிரித்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை மாவட்ட செயலாளராக நியமித்துள்ளனர். அதுபோல் மீதமுள்ள நத்தம், நிலக்கோட்டை, ஆத்தூர், பழனி ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளை கிழக்கு மாவட்டமாக பிரித்து முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை மாவட்ட செயலாளராக நியமித்துள்ளனர். இப்படி திண்டுக்கல் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கிழக்கு, மேற்கு என உருவாக்கி கட்சி வளர்ச்சியை பலப்படுத்தி இருப்பதை கண்டு ர.ர.க்களும் உற்சாகமடைந்து வருகிறார்கள்.
அதுபோல் வனத்துறை அமைச்சர் சீனிவாசனை மேற்கு மாவட்ட செயலாளராக நியமித்து இருப்பதை கண்டு மாவட்டத்தில் உள்ள கட்சி பொறுப்பாளர்கள் முதல் தொண்டர்கள் வரை திண்டுக்கல்லில் உள்ள அமைச்சர் சீனிவாசன் வீட்டுக்கு படையெடுத்து வந்து மாலை சால்வைகளை கொடுத்து வாழ்த்து கூறி வருகிறார்கள்.
இப்படி வரக்கூடிய கட்சிகார்களை சமூக இடைவெளியுடன் அமைச்சர் சீனிவாசனும் முககவசம் அணிந்து, இருகரம் கூப்பி நன்றி சொல்லியும் உட்கார சொல்லி டீ, காபி கொடுத்து கட்சி பணியை வழக்கம்போல் சிறப்பாக செய்ய வேண்டும். அதுபோல் உங்களுக்கு என்னென்ன தேவையோ தயங்காமல் கேளுங்கள், அதை செய்ய தயாராக இருக்கிறேன் என உற்சாகபடுத்தியும் அனுப்பி வைத்து வருகிறார்.
ஏற்கனவே அமைச்சர் சீனிவாசன் கட்சியில் ஆரம்ப காலத்திலிருந்து இருப்பதின் மூலம் நகர செயலாளர், யூனியன் சேர்மன் ஆகியவற்றை தொடர்ந்து நான்கு முறை திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்ததின் மூலம் தொகுதி மக்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் நிறைவேற்றி கொடுத்தார். அதோடு கழக பொருளாளராகவும் இருந்தார். அதன்பின் அவைத் தலைவராக இருந்துகொண்டு கட்சி பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில்தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு முன்னாள் முதல்வர் ஜெ. ஆசியுடன் வெற்றி பெற்றதின் மூலம் வனத்துறை அமைச்சர் பதவியும் திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஜெ. கொடுத்தார். அதன்பின் ஜெ. மறைந்தபின் இ.பி.எஸ்.ஸும், ஓ.பி.எஸ்.ஸும் கழக அமைப்பு செயலாளர் பதவியையும் அமைச்சர் சீனிவாசனுக்கு கொடுத்திருந்தின் மூலம் அமைச்சர் பணியோடு, கட்சி பணியையும் கடந்த நான்கு வருடங்களாக செய்து வந்தார்.
இந்த நிலையில் கட்சி வளர்ச்சிக்காக திண்டுக்கல் மாவட்டத்தை இரண்டாக பிரித்து அதில் திண்டுக்கல், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் ஆகிய மூன்று தொகுதியை கொண்ட மேற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் சீனிவாசனை நியமித்து தொடர்ந்து கட்சிபணியாற்ற உத்தரவிட்டு இருப்பதை கண்டு மாவட்டத்தில் உள்ள ர.ர.க்களும் உற்சாகத்துடன் தொகுதியில் வளம் வருகிறார்கள்.