அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான என்.டி.ஏ அரசாங்க ஆட்சியின் போது பாதுகாப்புத்துறை தளவாட கொள்முதலில் ஊழல் செய்த குற்றச்சாட்டில் சிக்கிய ஜெயா ஜெட்லி, அப்போதைய மேஜர் ஜெனரல் எஸ்.பி முர்காய் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம்.
கடந்த 2000 ஆவது ஆண்டு, பத்திரிகையாளர் மாத்யூ சாமுவேல் மற்றும் தெஹல்கா குழுவினர் மேற்கொண்ட ரகசிய விசாரணை மூலம் வெளியுலகிற்குத் தெரிய வந்த இந்தச் சம்பவம், அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் தனது பதவியிலிருந்து விலகும் அளவுக்குத் தீவிரமடைந்தது. லண்டனைச் சேர்ந்த ஒரு ஆயுத நிறுவனத்தின் பிரதிநிதிகளைப் போல அன்றைய பாதுகாப்புத்துறையுடன் தொடர்பிலிருந்த அனைவரிடமும் இந்த விசாரணையை மேற்கொண்டது தெஹல்கா. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கில் சிக்கிய ஜெயா ஜெட்லி, அப்போதைய மேஜர் ஜெனரல் எஸ்.பி. முர்காய் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம்.
இதுகுறித்து பத்திரிகையாளர் மாத்யூ சாமுவேல் கூறுகையில், "உயர் மட்டத்தில் பாதுகாப்புத்துறையில் நடந்த ஊழல்கள் குறித்து தெஹல்கா அம்பலப்படுத்திய பின்னர், குஜராத்தைச் சேர்ந்த ஒரு பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளர், 14.3.2001 அன்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்கிறார். அதில், மேத்யூ சாமுவேல் ஒரு அமெரிக்கக் கைக்கூலி எனக் கூறப்பட்டது. அந்த நபர்தான் தற்போது நமது நாட்டின் பிரதமர். அவரது ஆட்சிக் காலத்திலேயே, சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் ஜெயா ஜெட்லி மற்றும் மேலும் இரண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. .
ஒரு கிறிஸ்துமஸ் தினம், டிசம்பர் 25, 2000 அன்று, பாதுகாப்பு அமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நான் எப்படி அந்த ஸ்டிங் ஆபரேஷன் செய்தேன் என்பது இன்றும் நினைவுள்ளது. இது வி.வி.ஐ.பி. வட்டாரமான கிருஷ்ணன் மேனன் மார்க் பகுதியோடு தொடர்புடையது. அப்போது என் உடலில் படக்கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. கேபிள்கள், அனலாக் கேமரா, ரெக்கார்டர், லென்ஸ் மற்றும் ஒரு சுவிட்ச், 1 மணிநேரம் மட்டுமே சார்ஜ் நிற்கும் ஒரு பேட்டரி. இவற்றுடன் பாதுகாப்பு அமைச்சரின் அதிகாரப்பூர்வ குடியிருப்பு வளாகத்தில் நான் நுழைந்தேன். ஜார்ஜ் பெர்னாண்டஸின் சமதா கட்சித் தலைவர் ஜெயா ஜெட்லியை, போலியான ஆயுத நிறுனத்தின் தயாரிப்புகளுக்கான மதிப்பீட்டுக் கடிதம் ஒன்றைப் பெறுவதற்காக ஏற்கனவே சந்தித்திருந்தேன். அப்போது, பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து ஓய்வு பெற்ற மேஜர் எஸ்.பி. முருகுவே மற்றும் ராஜஸ்தான் மாநில சமதா கட்சியின் தலைவர் கோபால் பச்சர்வால் ஆகிய இருவரும் ஜெயா ஜெட்லியைச் சந்திக்க உதவினர்.
பாதுகாப்பு அமைச்சரின் இல்லத்தில் ஜெயா ஜெட்லியைச் சந்திக்கச் செல்வதற்கு முன்பு, எனது ஆசிரியர் அனிருத் பஹால், நான் கொண்டு சென்ற பிரீஃப்கேஸ் கேமரா குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், ஜெயா ஜெட்லியின் மருமகனுமான அஜய் ஜடேஜாவுக்குத் தெரியும் என எச்சரித்தார், எனவே வேறு சாதனங்களை எடுத்துச் செல்லும்படி எனக்கு அறிவுறுத்தினார். அவரது கணிப்பு தவறில்லை. பாதுகாப்பு அமைச்சரின் இல்லத்திற்குள் நுழைந்தபோது, ஜெயா ஜெட்லி எந்தவொரு பிரீஃப்கேஸையும் உள்ளே எடுத்துவர அனுமதிக்க மாட்டார் என்று காவலர்கள் கூறிவிட்டனர். அதில் உளவு கேமரா இருக்கும் என அவருக்குப் பலமான சந்தேகம் இருந்துள்ளது. அப்படி இருந்தால் எங்களது உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆதாரமாகக் காட்டப்படும் என அவருக்குத் தெரியும்.
மேத்யூ சாமுவேல்... அன்றும் இன்றும்
பின்னர் பெட்டியை வெளியே வைத்துவிட்டு, சுரேந்தர் சுரேகா என்பவர் கொடுத்த தாள் ஒன்றில் இரண்டு லட்ச ரூபாயை மடித்து வைத்துக்கொண்டு உள்ளே சென்றேன். இதற்கிடையில், நான் டை கேமராவை ஆன் செய்து ஜெயா ஜெட்லிக்கு இரண்டு லட்சம் கொடுத்த அந்த நிகழ்வை வெற்றிகரமாகப் பதிவு செய்தேன், பின்னர், பணத்தை கோபால் பச்சர்வாலிடம் ஒப்படைத்ததாக அவர் கூறினார். இது அன்று நடந்த ஒரு முக்கிய நிகழ்வு. பின்னர் நான் அங்கிருந்து எனது அலுவலகத்திற்குத் திரும்பி, எனது ஆசிரியரிடம் ஆதாரங்களை ஒப்படைத்து, நடந்த நிகழ்வுகளை விரிவாக விளக்கினேன்.
ஜெயா ஜெட்லியும், வழக்குரைஞர்களும் அதன்பின் எனக்கு எனது குடும்பத்திற்கும் தொல்லை கொடுக்கும் செயல்களிலும் ஈடுபட்டனர். அதிலும் பல மோசமான விஷயங்கள் நடந்தன. மேலும், நான் ஒரு கிராமப்புறத்தைச் சேர்ந்த ஒரு நாகரிகமற்ற நபர் என்றனர். நிச்சயமாக, நான் ஒரு கிராமப்புற கிராம பின்னணியைச் சேர்ந்த ஒரு நபர் தான். எப்போது மக்களுக்காகத் திரைமறைவிலேயே பணியாற்றினேன். இந்த வழக்கின் கடைசி விசாரணை நடைபெற்ற பிப்ரவரி 2020 வரை அவர்களின் இந்த விமர்சனங்கள் தொடர்ந்தன.
2019 ஆம் ஆண்டில், சாக்கெட் நீதிமன்ற வளாகத்தில் ஜெயா ஜெட்லியிடம் பேச வாய்ப்பு கிடைத்தது. எனது தாயார் கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டதைக் காரணம் காட்டி, நீதிமன்ற விசாரணையா இருந்து ஒருமுறை விலக்கு கேட்டதைக் கிண்டல் செய்யும் வகையில் பேச்சைத் தொடங்கினார். அவர், நான் உங்கள் தாயை விட மூத்தவள். இந்த சம்பவம் நடந்திருக்காவிட்டால் நான் இப்போது அமைச்சரவையில் அமைச்சராக இருந்திருப்பேன் என்றார். அதற்கான எனது பதில் எளிதானது, இது ஒரு தொழில்முறை பத்திரிகை வேலை மட்டுமே, உங்களுடனோ அல்லது உங்கள் குடும்பத்தினருடனோ எனக்குத் தனிப்பட்ட விரோதம் இல்லை. குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளை நீங்கள் இப்போது கூட கேட்கலாம், நான் பணத்தை வழங்கும்போது நீங்கள் கூச்சலிட்டு என்னை உங்கள் வளாகத்திலிருந்து வெளியேற்றியிருக்கலாம் நான் திரும்பிச் சென்றிருப்பேன். ஆனால், நீங்கள் அப்படிச் செய்யவில்லை. பிறகு, என்னால்தான் நீங்கள் மாட்டிக்கொண்டீர்கள் என்று என்னை எப்படி குற்றம் சாட்ட முடியும்? எனக் கேட்டேன். அவர் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றார்" எனத் தெரிவித்துள்ளார்.