மஹாபாரதத்திற்கு மியூசியம்!
30 கோடி செலவு...

'மஹாபாரத' இதிகாசக் கதை எல்லோரும் அறிந்ததே, மஹாபாரதத்தில் குருக்ஷேத்திர போரில் சக்கரவியூகத்தினுள் அபிமன்யு நுழைந்து பிறகு வெளியே வர இயலாமல் இறந்துவிடுவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த நிகழ்வு ஹரியானா மாநிலத்தில் உள்ள குருக்ஷேத்திரம் என்னும் மாவட்டத்தில்தான் நடைபெற்றது என்றும். அதனால் அங்கு 30 கோடி செலவில் மகாபாரத மியூசியம் அமைத்து மஹாபாரதத்தை உலகறியச்செய்ய இருக்கிறது மத்திய பாஜக அரசு. இதேபோன்று பாஜக ஹரியானாவில் ஆட்சிக்கு வந்தபோது பகவத் கீதை ஜெயந்திக்காக 100 கோடியும், ரிக் வேதங்களில் கூறப்பட்டதாக சொல்லப்படும் சரஸ்வதி நதியைப் பற்றிய ஆராய்ச்சிக்காக 50 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கியது.

இந்த மியூசியத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி 'ஸ்வதேஷ் தர்ஷன் திட்டம்' என்பதின் கீழ் உள்ளது. கடந்த மாதம் (டிசம்பர் 2017) தொடங்கி நடந்து வரும் இந்த கட்டட வேலைகளில் முதல் கட்டமாக எல்லைச் சுவர் அமைக்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஹரியானா அரசு இதற்காக 19 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது. அரசாங்கத் திட்டம் என்பதற்காக குறைந்த விலையில் நிலங்கள் வாங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மியூசியத்தில் தியான மையம், கண்காட்சி, பொருட்காட்சி, ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ், பார்க்கிங் வசதி, நவீன வசதி கொண்ட கழிவறை போன்ற எண்ணற்ற வசதிகளைக்கொண்டு அமைய உள்ளது. இதனை கட்டும் ஒப்பந்தம் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஓராண்டு காலத்தில் இந்தப் பணி முடிக்கப்படும் என்கின்றனர்.
ஹரியானாவில் இருக்கும் பாஜக அரசு ஏற்கனவே இது போன்ற இரண்டு திட்டங்களைத் தொடங்கியது. இதற்கு முன்பு காணாமல்போன சரஸ்வதி நதியை கண்டுபிடிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அதில் அவ்வளவாக வெற்றியை காணாத இந்த அரசு, பின்னர் பகவத் கீதை ஜெயந்திக்காக 100 கோடி ஒதுக்கி சிறப்பித்தது. இதை போன்றுதான் தற்போது கட்டிக்கொண்டிருக்கும் மியூசியமும். இதுபோன்ற திட்டங்களை எதிர்க்கட்சியினர், "மதச்சார்பற்ற இந்தியாவில், இவர்கள் மத சாயத்தைப் பூசுகின்றனர் என்றும், அதுமட்டுமில்லாமல் இவர்கள் மக்களின் வரிப் பணத்தில் விளையாடுகின்றனர்" என்றும் விமர்சித்துள்ளனர். கட்டிடவேலை நடைபெறும் இடத்தில் இருக்கும் கிராமவாசிகள்," நீங்கள் இந்த மியூசியத்தைக் கட்டுங்கள் அதில் எங்களுக்கு எந்த முரணும் இல்லை, அதற்கு முன்பு எங்கள் பகுதி மக்களுக்கு நல்ல வேலைவாய்ப்பையும், கல்வியையும் தாருங்கள்" என்று கேட்டுக்கொண்டிருக்கின்றனர். அடிப்படை வசதிகளே கிடைக்கப்பெறாத மக்களின் குரலுக்குக் காது கொடுக்காமல் மஹாபாரதம் படித்துக்கொண்டிருக்கிறதாம் அரசு.
சந்தோஷ் குமார்